Published : 04 Mar 2015 11:31 AM
Last Updated : 04 Mar 2015 11:31 AM

குருதி ஆட்டம் 25- வைக்கோல் பிரி!

இளவட்டங்களும் குமரிகளைப் போல் உறக்கமில்லாமல் அலைந் தார்கள். இரவு முழுக்க குமரி களின் தூக்கத்தைக் கெடுத்தது… ‘கோலப் பொடி’. இளவட்டங்களுக்கு ‘வைக்கோல் பிரி’.

பெருங்குடி இருளப்பசாமிக்கு வகை வகையான நேர்த்திக்கடன்கள் உண்டு.

சாதாரண தலைவலி, காய்ச்சலுக்கு ‘ஒத்தப் பொங்கல்’. கனத்த நோவுக்கு ‘ரெட்டைப் பொங்கல்’. வெட்டுக் குத்துக் கேஸு விடுதலைக்கு ‘ஒத்தக் கிடாய்’. கொலைக் கேஸு விடுதலைக்கு ‘ரெட் டைக் கிடாய்’.

இது போக, செதறு தேங்காய் நேர்த்திக் கடன் ஒரு வகை. அவனவன் வேண்டுதலுக்கு ஏத்த மாதிரி, ஒரு மூடை தேங்காய், ரெண்டு மூடை தேங் காய் என செதறு தேங்காய்த் தூள் பறக்கும்.

இளவட்டங்கள், ஆலமரத்தைச் சுத்தி நின்னு, வசம் பார்த்து அடிக்கிற அடியில் தேங்காய்த் தண்ணீர் மரத்தையே குளிப் பாட்டும். செதறுகாயை உடைக்கிறது ஒரு சந்தோஷம்; சிதறுகிற காய்களைப் பாய்ந்து ஓடி பொறுக்குறது அதை விட சந்தோஷம்.

மரத்திலே அடிபட்டும் உடைபடாமல் பறக்கிற முழுத் தேங்காயைத் தாவிப் பிடிக்கிறவன், வேடிக்கை பார்க்கும் குமரிப் பொண்ணுக கண்ணுலே இறங்கு வான். திருவிழாவோடு காதல் முளைக்கும். அதுக்கு பேரு ‘செதறுகாய்க் காதல்’.

‘லோட்டா’ செதறுகாய் பொறுக் கிறதிலே கில்லாடி. திருவிழா திரு விழாவுக்கு ரெண்டு மூட்டை காய் சேர்த்துருவான். மரத்தில் அடிபட்டு பறக்கிற காயைத் தாவிப் பிடிப்பான். உடைபடாமல் உருண்டு ஓடுகிற காயை விரட்டிப் பிடிப்பான்.

தெறிச்சு வர்ற காயி, ‘லோட்டா’வின் மண்டையைப் பிளந்ததெல்லாம்கூட உண்டு. செதறுகாய் பொறுக்கிறதிலே எம்புட்டு சாகசம் காட்டியும் ‘லோட் டா’வுக்கு எந்தக் குமரியின் காதலும் லபிக்கலே. அவன் ராசி அப்பிடி. அதுக்காக அவன் கவலைப்பட்டதும் இல்லை. இதெல்லாம், பதினேழு வருஷத்துக்கு முன்னாடி, ‘லோட்டா’ விடலையா இருந்தபோது.

பதினேழு வருஷம் கழிச்சு நடக்கிற இந்த திருவிழாவுக்கு, அரண்மனைக்கு வேண்டப்பட்ட பெரிய ஆளாயிட்டான் ‘லோட்டா’. தேங்காய் பொறுக்க முடி யாது. ஆனாலும் கை ஊறி திரியிறான்.

மற்ற எல்லா ஊர் சாமிகளுக்கும் பொங்கல், கிடாய் வெட்டு, செதறு தேங்காய் நேர்த்திக்கடன் எல்லாம் உண்டுதான். ஆனால், எந்தச் சாமிகளுக்கும் இல்லாத ஒரு நேர்த்திக் கடன் இந்த இருளப்பசாமிக்கு உண்டு. அது ‘வைக்கோல் பிரி’நேர்த்திக்கடன்.

இருளப்பசாமிக்கு திருவிழா சாட்டி, பந்தல் கால் ஊன்றி, காப்புக் கட்டியதில் இருந்து ஊர் இளவட்டங்கள், பத்து நாட்கள் கடுமையான விரதம் இருப் பார்கள்.

பத்தாம் நாள், உச்சத் திருவிழா. இறங்குபொழுதில், நாலு ஜதை கொட்டு மேளத்தோடு நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி தூக்கி வருவார்கள். முன்னே, வைக்கோல் பிரி ஆட்டம் போகும்.

விரதம் காத்த இளவட்டங்கள், கண் பார்க்கக் கூட சிறு இடைவெளி இல்லாமல், உள்ளங்கால் முதல் உச்சந் தலை வரை வைக்கோல் பிரி சுற்றி, கையில் வாளோடு ஆடிப் போவார்கள்.

வாளுக்கு வாள், ஆக்ரோஷமான வெட்டு விழும். வெட்டுகிறவனுக்கும் கண் தெரியாது. வெட்டு வாங்கு கிறவனுக்கும் கண் தெரியாது. எந்தப் பிரிக்குள் எவன் இருக்கிறான் என தெரியாமலே, ஒருவரை ஒருவர் வெட்டுவார்கள். விரதக் குறைபாடு உடையவன் வெட்டுப்படுவான்.

‘வைக்கோல் பிரி’ ஆட்டத்திலே வெட்டுப்பட்டு செத்தால், கொலைக் கேஸு கிடையாது. ‘சாமி காரியத் திலே குளிர்ந்துட்டான்’ என ஊர் கூடி அடக்கம் பண்ணும். திருவிழாச் சாக்கில் முன் பகையைத் தீர்த்துக் கொள்ள நினைப்பவனை ‘சாமி பார்த்துக்கொள்ளும்’ என்பார்கள். போன திருவிழாவிலே நல்லாண்டியின் தம்பி வெட்டுப்பட்டு செத்தான். வெட்டுனவன் பிரி ஆட்டக் கூட்டத்துக்குள்ளே கலந்துட் டான். இன்னாருன்னு தெரியலே.

கையில் எடுத்து ஆடி வரும் வாள், அந்தந்த வீட்டுக்கு ‘சாமி வாள்’. சாமி வாளை வேறு எந்தக் காரியத்துக்கும் கையில் எடுக்கக் கூடாது.

நேர்த்திக்கடன் வைத்திருக்கும் இளவட்டங்கள், விடிய விடிய தூக்கமில்லாமல், களத்து மேட்டில் பிரியைத் திரித்துக் கொண்டிருந்தார்கள். உடம்பெல்லாம் ‘சுணை’ புடுங்குது. அரிப்பான அரிப்பு! ஆனாலும் எவனும் சொரியலே. இப்பவே சொரிஞ்சா… நாளை என்னாகிறது? உடம்பெல்லாம் வைக்கோல் பிரி சுத்தி போகணுமே. ஆடுவானா..? சொரிவானா? சுணைக்கு உடம்பை பழக்கணுமில்லே?

குடிசையின் கிழக்கு ஓரம் பாய் விரிப்பில் செவ்வந்தி படுத்திருந்தாள். அரியநாச்சி அமர்ந்து விழித்துக் கொண்டிருந்தாள். புதிதாக வேயப்பட்ட குடிசையில் தனித்துப் படுத்திருந்த துரைசிங்கம், கண் மூடி உறங்காமலிருந்தான்.

கோயில் பூஜைக்கு தவசியாண்டி புறப்பட்டுப் போகும்முன் புதிய குடிசையில் கூடி, நாளைய காரியத்தை மூவரும் திட்டமிட்டார்கள். தாம் பேசிக் கொள்வது செவ்வந்திக்குத் தெரிய வேண்டாம் என அரியநாச்சி சொல்லி இருந்தாள். தவசியாண்டி போன பின், துரைசிங்கத்திடம் அரியநாச்சி மலாய் மொழியில்தான் பேசினாள். எந்தப் பேச்சிலும் ஒட்டாத செவ்வந்தி, எப்போதும் போல் வனஜீவனாக தன் போக்கில் இருந்தாள்.

ஊருக்குள் நுழைந்ததும் ஒரு காரியம் முடியப் போகிற சந்தோஷத்தில் அரியநாச்சி இருந்தாலும் நெஞ்சோரம் ஏதோ ஒரு குத்தல் இருந்தது. ஊராரில் இன்னாரென எவரையும் அறியாதவன் துரைசிங்கம். பெருந் திருவிழா கூட்டத் துக்குள் நடக்கப் போகிற காரியம்.

முதல் குறி பிசகினால், எல்லாம் தலை கீழாகும். கோயிலுக்குப் பூசாரியாக தவசியாண்டியே போயிருப்பதுதான் தெம்பு தந்தது.

விடிய வெகு நேரமில்லை. ஆனாலும் தூக்கம் வரவில்லை. தோல் உரித்த சோத்துக் கற்றாலைப் பதத்தில் படுத்திருக்கும் செவ்வந்தியின் மேனி நெடுக கண் ஓட்டினாள். ஆப்ப நாட்டில் இப்படி ஒரு அழகா!

விடிய விடிய, பெருநாழி முத லாளியை உடையப்பன் தூங்கவிடலே.

விடிந்தால் திருவிழா. ஊர் சனமெல்லாம் பத்து நாளாக, கடு விரதம் காக்குது. உடையப்பன் அரண் மனையிலே எல்லாம் நேர்மாறு. அதிலும் பெருநாழி முதலாளியை விருந்தாளி யாய் கண்டதும் பாட்டில், படுக்கை எல்லாம் தலைகீழாய் புரளுது. ‘கூழு’ ஒருத்தன்தான் கூடவே இருந்து ரெண்டு பேரையும் சமாளிக்கிறான். உடையப்பன் உளறல் தாங்கலே.

“முதலாளி… நம்ம காலை சுத்துன பாம்பை, நாளை அடிச்சுக் கொல் றோம். அந்த சந்தோஷத்தை கொண் டாடிட்டுத்தான் நீங்க ஊருக்குப் போறீங்க...”

உடையப்பன் தூக்கி வீசிய பாட்டில் சுவரில் மோதிச் சிதறியது.

- குருதி பெருகும்…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: irulappasamy21@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x