Published : 31 Mar 2015 11:04 AM
Last Updated : 31 Mar 2015 11:04 AM
வசந்தி, மாலா இருவரும் அலுவலக தோழிகள். வெவ் வேறு இடத்தில் இருந்து தினமும் மின்சார ரயில் பிடித்து ஒரே அலுவலகம் செல்ப வர்கள்.
வசந்தி நல்ல நிறமாக, நாகரிகமாக இருப்பவள். மாலா மாநிறம்தான். வசந்தி மாடர்னாக உடை உடுத்துவதுடன், அழகு மற்றும் ஆரோக்கிய குறிப்புகளில் கவனம் செலுத்துபவள். அளவாக சாப்பிட்டு உடலை ஒல்லியாக வைத்திருப்பாள்.
ரயிலில் ஏறிய நிமிடம் முதல், டிவியில் அல்லது புத்தகத்தில் படித்த அழகு குறிப்பை பற்றி விலாவாரியாக சொல்லிக்கொண்டு வருவாள். மாலாவுக்கு போர் அடிக்கும். இருந்தாலும் பேசாமல் வருவாள்.
அவர்கள் இறங்கவேண்டிய நிறுத்தம் வந்தது. ரயில் நிலைய மேம்பாலத்தை தாண்டி செல்லவேண்டும். வசந்தி வழக்கம் போல பிளாட்பாரத்தில் எடை பார்க்கும் இயந்திரம் வைத்திருப்பவரிடம் சென்று, இரண்டு ரூபாய் நாணயத்தை கொடுத்து விட்டு எடை பார்த்தாள்.
“ஐயோ, என்னடி ரெண்டு நாள்ல ஒரு கிலோ கூடிடுச்சு” என்றவாறு நடந்தாள்.
மாலாவுக்கு ஒரே எரிச்சல். அப்படி என்ன அழகு வேண்டி கிடக்கிறது? ஆரோக்கியமாக இருந்தால் போதாதா? என்று மனதில் நினைத்துக்கொண்டாள்.
அன்று மதியமும் வசந்தி கொண்டுவந்த உணவை சாப் பிடாமல், அலுவலக உதவி யாளரை அழைத்து பழச்சாறு வாங்கி பருகினாள்.
மாலை வீடு திரும்பும்போது அதே இடத்தில் வசந்தி எடை பார்க்க நின்றாள். “மதியம் பட்டினி.. ஆனாலும் எடை பார்ப் பது ரொம்ப அவசியமோ?” என்று உதட்டை சுழித்தவாறு நடந்தாள்.
ரயில் ஏறி உட்கார்ந்ததும் மாலா பொரிந்தாள், “அப்படி என்னடி அழகு வேண்டிக்கிடக்கு? ஒரு நாளைக்கு நாலு தடவை வெயிட் பாக்கணுமா? அழகா இருந்து என்ன சாதிக்கப்போற?” என்றாள்.
அதற்கு வசந்தி, “மாலா, நீ ஒரு பக்கம்தான் பாக்குற. நான் தினமும் எடை பாக்குற அந்த நபரை கவனிச்சிருக்கியா? அவர் பார்வையில்லாதவர். ஊனம் இல்லாதவங்களே பிச்சை எடுக் கறப்போ, அவர் கவுரவமா எடை பாக்குற இயந்திரம் வச்சு பிழைப்பு நடத்துறார்.
ஏதோ என்னால முடிஞ்ச உதவியா இருக்கட்டுமேன்னு தான் தினமும் எடை பார்க்கிறேன்” என்றாள் வசந்தி புன்முறுவலுடன்.
வசந்தியின் மனமும் அழகுதான் என்று நினைத்த மாலா, இனி தானும் எடை பார்க்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டாள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT