Published : 21 Mar 2015 10:59 AM
Last Updated : 21 Mar 2015 10:59 AM

ஜெயகாந்தனோடு பல்லாண்டு 23-பாரதியார் குறிப்பிட்ட பிரபுக்கள்...

பாரதியார், ‘பாஞ்சாலி சபதம்’ நூலை, ‘தமிழ் மொழிக்கு அழியாத உயிரும் ஒளியும் இயலுமாறு இனிப் பிறந்து காவியங்கள் செய்யப்போகிற வரகவிகளுக்கும், அவர்களுக்குத் தக்கவாறு கைங்கரியங்கள் செய்யப் போகிற பிரபுக்களுக்கும்…’ காணிக்கையாகச் செலுத்துகிறார்.

வரகவிகளுக்குத் தக்க கைங்கரியங்கள் செய்யும் அத்தகைய பிரபுக்கள் சிலர் ஜெயகாந்தனுக்கு மிகவும் நெருங்கிய நண்பர்களாயிருந்தனர். அவர்களில் சிலரைப் பற்றி எழுதப் போகிறேன்.

ஜெயகாந்தன் ‘உன்னைப் போல் ஒருவன்’ படம் எடுத்த காலத்தில், ஆள் ஆளுக்குப் பத்தாயிரம் ரூபாய் கொடுத்த நண்பர்களில் திருச்சி ‘மோதி’ ராஜகோபாலும் ஒருவர்.

தங்க, வைர வியாபாரியான மோதி கலை, இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண் டவர். ஜெயகாந்தன் பத்திரிகைகளுக்கு எழுதா திருந்த காலகட்டத்தில், மோதி ‘‘நீங்கள் எழுதுங்கள் ஜே.கே. நாம் நேரடியாகப் புத்தகமாகவே போடலாம்!’’ என்று, அதற்காகவே ‘மோதி பிரசுரம்’ என்று ஒன்று தொடங்கி, ஜெயகாந்தனின் ‘ஜய ஜய சங்கர’ புத்தகத்தையும், அதைத் தொடர்ந்த பகுதிகளையும் அடுத்து வெளியிட்டார். ஒவ்வொன்றும் ஒரு ரூபாய் விலை. மாத நாவல்கள் என்று வெளியிடும் வழியைத் தமிழ் பதிப்புலகுக்குக் காட்டியது அவருடைய கைங்கரியங்களுள் ஒன்று.

மோதி மறைந்தபோது, ‘காவிரியும், சீரங்கமும், கொள்ளிடக் கரையும், திருவானைக்காவும் இனி எனக்கு வெறிச்சோடிக் கிடக்கும்’ என்று எழுதினார் ஜெயகாந்தன்.

சிவகாசியைச் சேர்ந் தவர் ராஜசபை. கண்ணதாசன் மூலமாக ஜெயகாந்தனுக்கு அறிமுகமான நண்பர் அவர். அவர் ஒரு கோடீஸ்வர முதலாளி. ஆனால், அவர்தான் எல்லோரையும் முதலாளி முதலாளி என்று அழைப்பார். அவருக்குப் பல நிறுவனங்கள் இருந்தன. காரனேஷன் லித்தோ ஒர்க்ஸ் என்கிற ஒரு நிறுவனத்தின் பெயர்தான் எனக்குத் தெரியும்.

எங்கள் முதல் சபரிமலை யாத்திரையில், எங்கள் பயணத்துக்குப் பொறுப்பேற்றுக் கொண்டார் ராஜசபை. பெரிய சமையல் பரிவாரம் மூலம் கானகத்தின் நடுவே அவர் எங்களுக்கெல்லாம் அளித்த விருந்தை நாங்கள் ஐயப்பனின் ஆசிர்வாதம்போல் அனுபவித்தோம். கோடீஸ்வரரான ராஜசபை, தன்னிலும் பெரிய கோடீஸ்வரராகக் கருதி ஜெயகாந்தனிடம் பழகிய அழகைப் பார்க்க வேண்டுமே!

தென்காசி ஆறுமுகச்சாமி நாடார், ஜெயகாந்தனை அடிக்கடி குற்றாலத் துக்கு வரவழைத்து மகிழ்பவர். ஒருமுறை நாங்கள் பழத்தோட்ட அரசாங்க விருந் தினர் விடுதியில் தங்கி, சாமியார் அருவி யில் குளித்தோம். மற்றொரு முறை, குற் றாலத்தில் அருவிக்கு மிக அருகிலேயே ஒரு சிறுவீட்டை வாடகைக்கு எடுத்து, சமைத்துப் போட சமையல்காரர்களையும் ஏற்படுத்தித் தந்தார்.

1989-ல் ஆறுமுகச்சாமி நாடார் காலமாகிவிட்டார். அதன்பின் நாங்கள் குற்றாலம் போவது அரிதாகிவிட்டது.

திருவாரூரைச் சேர்ந்தவர் கணேசன். எல்லோரும் அவரை டாடா கணேசன் என்றுதான் அழைப்பார்கள். ஜெயகாந்தனின் மேதைமையின் மீது பெருமதிப்பு கொண்டவர் அவர். சங்கீத ஞானம் நிரம்பப் பெற்றவர். ஒருமுறை ஜெயகாந்தன் கர்னாடக இசையில் ஒரு குறிப்பிட்ட ராகத்தில் ஒரு பாடலைப் பாடியபோது, அதிலே சில இடங்களில் பிழை கண்டு, ‘ஐயோ… ஐயோ…’ என்று அவர் தலையில் அடித்துக்கொண்ட காட்சியை என்னால் மறக்க முடியவில்லை.

ஜெயகாந்தனின் 80-வது பிறந்தநாள் விழாவில் மோதி இல்லையே, ராஜசபை இல்லையே, ஆறுமுகச்சாமியும் டாடா கணேசனும் இல்லையே என்கிற எங்கள் ஆதங்கத்தைத் தீர்த்து வைப்பதற்காகவே, திடுமென்று லண்டன் டாக்டர் ராம் பிரவேசித்தார்.

டாக்டர் ராம் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர். பல ஆண்டுகளாக லண்டன்வாசியாக இருப்பவர். இவரும் இவர் தம் மனைவி வனிதாவும் கலை இலக்கிய நாட்டம் உள்ளவர்களாக இருப்பது என்பது, எவ்வளவு மேலான வாழ்வனுபவம்! ஜெயகாந்தனின் 80-வது பிறந்த நாள் விழாவை இந்தத் தம்பதியர் அற்புதமான முறையில் கொண்டாடினர்.

‘ஆனந்த விகடன்’ இதழில் அந்தக் காலத்தில் ஜெயகாந்தன் எழுதிய கதைகள், அதே வடிவில், அதே ஓவியங் களோடு அப்படியே இடம்பெற்ற ‘ஜெய காந்தன் கதைகள்’ என்ற நூலைத் தொகுத்து அளித்தனர். தொகுத்தது என்று சொல்வதைக் காட்டிலும் ஜெயகாந்தனுக் கான ஒரு புகழ் மாலையை அவர்கள் புதிதாகத் தொடுத்தார்கள் என்றுதான் கூற வேண்டும். சென்னை மியூசிக் அகாடமியில் அவர்கள் எடுத்த விழாவின் சிறப்பைத் தனியொரு கட்டுரையில்தான் விவரிக்க வேண்டும்.

லண்டனில் இருந்தும், இன்றளவும் ஜெயகாந்தனின் நலத்தில் பெரிதும் அக்கறை கொண்டு கவனிக்கும் இவர்களை, ஜெய காந்தனின் அதிர்ஷ்டப் பட்டியலில்தான் சேர்க்க வேண்டும்.

ஜெயகாந்தனின் கதைகளையும் நாவல்களையும் கட்டுரைகளையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த கே.எஸ்.சுப்பிரமணியத்தைக் குறிப்பிடாமல் இந்தக் கட்டுரையை முடிப்பது கொடும் பிழையாகும். ஜெயகாந்தனை ஒருவர் எப்படியெல்லாம் கொண்டாட முடியும் என்பதற்கான நிகழ்காலச் சான்றாக நிற்பவர் அவர்.

‘வரகவிகளுக்குத் தக்க கைங்கரியங்கள் செய்யப் போகிற…’ என்று பாரதியார் குறிப்பிட்ட பிரபுக்கள் இவர்களைப் போன்றவர்கள்தான் என்பது என் எண்ணம்.

- வாழ்வோம்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x