Published : 30 Mar 2015 03:25 PM
Last Updated : 30 Mar 2015 03:25 PM
தேர்தலில் அரசியல் கட்சிகள் பணபலத்தை வெளிப்படுத்துவதைத் தடுக்க கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் எச்.எஸ்.பிரம்மா தெரிவித்துள்ளார்.
தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாக அரசியல், நிதி மற்றும் சட்ட ஆணையங்கள் அளித்துள்ள பரிந்துரைகள் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டத்தை பிரம்மா தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசும்போது, "தேர்தலில் அரசியல் கட்சிகள் பணபலத்தை வெளிப்படுத்துவதை தடுக்க கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். அவ்வாறு சட்டங்கள் இயற்றப்படும்போது அரசியல் கட்சிகளும் பொறுப்புடன் செயல்படும்.
தேர்தலில் கருப்புப் பண புழக்கம் அதிகமாகவுள்ளது. கருப்புப் பணமும், அதிகார பலமும் சேரும்போது ஜனநாயகம் கேள்விக்குரியாகிறது. கருப்புப் பணம், ஜனநாயகத்தின் ஆரோக்கியத்துக்கு மிகப்பெரிய கேடு.
தேர்தல் முடிவுகளை முழுக்க முழுக்க பண பலம் மட்டுமே நிர்ணயிப்பதில்லை. இருப்பினும், தேர்தலில் அதிகப் பணம் செலவு செய்யும் கட்சியின் கை ஓங்கி இருக்கிறது.
ஆந்திரப் பிரதேசம் சட்டப்பேரவை தேர்தலில் சில வேட்பாளர்கள் ரூ.15 கோடி வரை செலவழித்ததாக தகவல்கள் வந்துள்ளன. இவ்வளவு பணம் எங்கிருந்து வருகிறது அது எங்கே செல்கிறது என்பதெல்லாம் வியப்பூட்டுகிறது.
தனிப்பட்ட முறையில் நிறைய அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்தை கூறும்போது, தேர்தலில் பணபலம் ஆதிக்கம் செலுத்துவது நல்லதல்ல என்றே கூறுகின்றனர். தேர்தல் நடைமுறைகள் தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் இடையே பல்வேறு கருத்து வேற்றுமை நிலவலாம். இருப்பினும், தேர்தல் ஆணையமும், அரசியல் கட்சிகளும் கணவன், மனைவி போல் இருக்க வேண்டும்" என்றார்.
தமிழகத்தில் ஓட்டுக்கு ரூ.5,000
பிரம்மாவைத் தொடர்ந்து பேசிய சட்ட ஆணையத் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.பி.ஷா, "தேர்தல் வேளையில், வாகனங்களில் கட்டுக்கட்டாக பணம் கொண்டுவரப்படுகிறது. தமிழகத்தில் ஒரு ஓட்டுக்கு ரூ.5000 வரை வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டதாக தகவல்கள் இருக்கின்றன" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT