Published : 09 Mar 2015 09:17 AM
Last Updated : 09 Mar 2015 09:17 AM
அடிமைத் தளையிலிருந்து மீள, புரட்சியில் ஈடுபட்ட ஆப்பிரிக்க மக்களுக்கு ஆதரவாக அமெரிக்கா சாதகமான தீர்ப்பை வழங்கிய சரித்திர முக்கியத்துவம் மிக்க சம்பவம் இது. அமெரிக்காவில் பிரிட்டிஷ் மக்கள் குடியேறத் தொடங்கிய காலத்திலிருந்தே, பண்ணை வேலைகள் உட்படப் பல பணிகளைச் செய்ய ஆப்பிரிக்காவிலிருந்து மக்களைக் கூட்டம் கூட்டமாகக் கப்பலில் அழைத்துவந்தனர். 17 மற்றும் 18-ம் நூற்றாண்டுகளில் அடிமை வியாபாரம் உச்சத்தில் இருந்தது. பல விதங்களில் ஏமாற்றப்பட்டு அடிமைகளாக விற்கப்பட்ட ஆப்பிரிக்கர்கள், அமெரிக்க மண்ணில் பெரும் துயரத்தை அனுபவித்தனர். அமெரிக்கா மட்டுமல்லாமல் கியூபா, பிரேசில் போன்ற நாடுகளிலும் இந்த வழக்கம் நடைமுறையில் இருந்தது.
1807-ல் ஆப்பிரிக்க மக்களை அடிமைகளாக்கி அமெரிக்காவுக்குக் கொண்டுவருவதைத் தடை செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. பல ஐரோப்பிய நாடுகளும் அடிமை வியாபாரத்தைத் தடைசெய்தன. (அதேசமயம், அமெரிக்காவுக்குள் ஏற்கெனவே இருந்த அடிமைகளை உள்நாட்டுக்குள்ளேயே விற்பனை செய்துகொள்ளத் தடை விதிக்கப்பட வில்லை.) ஆனால், சட்டவிரோதமாக அடிமைகளைக் கடத்திவருவது குறைந்துவிடவில்லை. இந்தச் சட்டத்தால் அதிக வேதனையை அனுபவித்தவர்கள் ஆப்பிரிக்க அடிமைகள்தான். அமெரிக்கக் கடற்படை அதிகாரிகளை ஏமாற்றுவதற்காக, கப்பலின் பல அடுக்குகளில், மிகச் சிறிய இடங்களில் ஆப்பிரிக்க மக்களை அடைத்துவைத்துக் கடத்திவரத் தொடங்கினார்கள் அடிமை வியாபாரிகள். 1820-ல், அடிமைக் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டமும் நிறைவேற்றப்பட்டது. அப்படியும் அடிமை வியாபாரத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
ஸ்பெயின் ஆட்சியின் கீழ் இருந்த கியூபாவின் ஹவானா நகரிலிருந்து அந்நாட்டின் கரும்புப் பண்ணைகள் நிறைந்த பியெர்ட்டோ பிரின்சிப் நகருக்கு, 1839 ஜூன் 28-ல் அடிமைகளைக் கொண்டுசெல்லும் ‘லா அமிஸ்டாடு’ கப்பல் தனது பயணத்தைத் தொடங்கியது.
4 குழந்தைகள் உட்பட மொத்தம் 53 அடிமைகள் அந்தக் கப்பலில் இருந்தனர். சியரா லியோனில் இருந்து கடத்திவரப்பட்டவர்கள் இவர்கள். பயணத்தின் 3-வது நாள், சிங்பே பே (ஸ்பெயின்காரர்கள் இவருக்கு வைத்த பெயர் ஜோசப் சிங்கே) எனும் அடிமையின் தலைமையில், அடிமைகள் புரட்சியில் ஈடுபட்டு கப்பலின் கேப்டன் உள்ளிட்டவர்களைக் கொன்றனர். தங்களை அடிமைகளாக வாங்கிய ஸ்பெயின் நாட்டவர் இருவரைப் பிணையக் கைதிகளாக்கி, கப்பலை ஆப்பிரிக்காவுக்குக் கொண்டுசெல்லப் பணித்தனர்.
ஆனால், ஸ்பெயின்காரர்கள் இருவரும் தந்திரமாக அந்தக் கப்பலை அமெரிக்கக் கடல் எல்லைக்குக் கொண்டுசென்றனர். அமெரிக்கக் கடற்படையினர் அடிமைகளைக் கைதுசெய்தனர். அடிமைகளை கியூபாவுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று ஸ்பெயின் அரசு சார்பில் வாதாடப்பட்டது. ஆனால், அப்பாவி ஆப்பிரிக்கர்கள் மீண்டும் தங்கள் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்று அடிமை முறையை எதிர்த்த அபாலிஷனிஸ்ட்டுகள் வலியுறுத்தினர். சிங்பே பே-க்கு ஆங்கிலம் கற்றுத் தந்த அமெரிக்க நண்பர்கள், ஆப்பிரிக்கர்களின் விடுதலைக்காக உழைத்தனர்.
பல்வேறு தீர்ப்புகள், மேல் முறையீடுகளுக்குப் பின்னர், 1841-ல் இதே நாளில், ‘ஆப்பிரிக்கர்கள் சட்ட விரோதமாகக் கடத்திவரப்பட்டனர். தங்கள் விடுதலைக்காக அவர்கள் போராடியது சரிதான்’ என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய ‘அமிஸ்டாடு’ (1997) விமர்சகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT