Published : 09 Feb 2015 10:20 AM
Last Updated : 09 Feb 2015 10:20 AM

பம்மல் சம்பந்த முதலியார் 10

தமிழ் நாடகங்களின் தந்தை என்று போற்றப்படுபவரும், வழக்கறிஞர், நீதிபதி, நாடக ஆசிரியர், நாடக நடிகர், எழுத் தாளர் என்ற பன்முகத் திறன் வாய்ந்தவருமான பம்மல் விஜயரங்க சம்பந்த முதலியார் (Pammal Vijayaranga Sambandha Mudaliar) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 9). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

 சென்னை பல்லாவரம் அடுத்த பம்மலில் பிறந் தவர். இவரது அப்பா தமிழ் ஆசிரியராக, பிறகு பள்ளி ஆய்வாளராக இருந்தவர். புத்தகங்களையும் வெளி யிட்டுவந்தார். அவர்கள் வீட்டில் தமிழ், ஆங்கிலப் புத்தகங்கள் ஏராளமாக இருந்தன.

 சிறு வயது முதலே, புத்தகங்களை ஆர்வத் துடன் படிப்பார். புராணக் கதைகளை அம்மா கூறு வார். கோவிந்தப்பர் உயர்நிலைப் பள்ளி, பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளி, மாநிலக் கல்லூரியில் பயின்றார்.

 பிறகு, சட்டம் பயின்று வழக்கறிஞராகப் பணியாற்றினார். நீதிபதியாகவும் பணியாற்றினார். ஆங்கில நாடகங்கள் அதிகம் பார்ப்பார். 1891-ல் பெல்லாரியில் இருந்து வந்திருந்த ஒரு நாடகக் குழுவில் வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், பட்டதாரிகள் இருப்பதை அறிந்ததும், இவருக்கு நாடகத்தின் மீதான ஈர்ப்பு அதிகமானது.

 சுகுண விலாஸ் சபா என்ற நாடகக் குழுவை உருவாக்கினார். சென்னைக்கு வந்த பார்சி நாடகக் குழுவினரின் பிரம்மாண்டமான திரை மற்றும் மேடை அமைப்புகள், சிறப்பான உடை அலங்காரம் இவரைப் பெரிதும் கவர்ந்தன. தீவிர முயற்சி எடுத்து தன் நாடகங்களிலும் அதை செயல்படுத்திக் காட்டினார்.

 தெருக்கூத்துதான் நாடகம் என்ற நிலையை மாற்றி, நகரங்களில் பிரம்மாண்டமாக மேடை அமைத்து பல வகையான நாடகங்களை வெற்றிகரமாக நடத்தி, மேல்தட்டு மக்கள், கற்றவர்கள், அறிஞர்களையும் பார்க்க வைத்தார். ஆர்.கே.ஷண்முகம் செட்டியார், எம்.கந்தசாமி முதலியார் ஆகியோரையும் நடிக்கவைத்தார்.

 சுப முடிவு என்ற வழக்கத்தை மாற்றி, சோக முடிவு கொண்ட நாடகங்களையும் அரங்கேற்றினார். நடிப்பவர்களை ‘கூத்தாடிகள்’ என்று அழைக்காமல் ‘கலைஞர்கள்’ என்று அழைக்கச் செய்தார்.

 22-வது வயதில் ‘லீலாவதி-சுலோசனா’ என்ற அவரது முதல் நாடகம் அரங்கேறியது. ஷேக்ஸ்பியரின் உலகப் புகழ்பெற்ற ஹாம்லெட், ஆஸ் யு லைக் இட், மெக்பெத் உட்பட பல நாடகங்களை அவற்றின் நயம், சுவை குறையாமல் தமிழ் நாடகங்களாக ஆக்கினார்.

 ஆங்கில, வடமொழி நாடகங்களை தமிழ்ச் சூழலுக்கு ஏற்ப மாற்றியமைத்து மேடையேற்றினார். மொத்தம் 94 நாடகங்கள் எழுதியுள்ளார். அதில் 850 முறை மேடையேறிய மனோகரா, 300 முறை நடிக்கப்பட்ட லீலாவதி-சுலோசனா குறிப்பிடத்தக்கவை.

 இவரது ‘இந்தியனும்-ஹிட்லரும்’, ‘கலையோ காதலோ’ உள்ளிட்ட 30 தமிழ் நூல்கள், அமலாதித்யா, லார்ட் புத்தா உள்ளிட்ட 30 ஆங்கில நூல்களை தமிழக அரசு நாட்டுடமை ஆக்கியுள்ளது.

 சங்கீத நாடக அகாடமி விருது, பத்மபூஷண் விருது, நாடகப் பேராசிரியர் விருது உட்பட பல்வேறு விருது கள், பட்டங்களைப் பெற்றுள்ளார். நாடக உலகின் பிதாமகர் என்று போற்றப்பட்ட இவர் 91 வயதில் மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x