Published : 02 Feb 2015 09:27 AM
Last Updated : 02 Feb 2015 09:27 AM
அதிகம் விற்பனையான நாவல்களில் ஒன்றாகவும் அதே சமயம், பலரால் முழுமையாக வாசிக்கப்படாததாகவும் ஒரு படைப்பு இருக்க முடியுமா? 1922-ல் வெளியான ‘யுலிஸ்ஸஸ்’ நாவல்தான் அது. பல்வேறு வகை மொழிநடையிலும், மிகவும் தனித்துவமான வார்த்தைகளாலும், சில பகுதிகளில் வர்ணனைகளுக்குப் பதிலாக வெறும் இசைக் குறிப்புகளாகவும் எழுதப்பட்ட இந்த நாவல், பலரால் வாசிக்கவே முடியாத ஒன்றாகவும் கருதப்படுகிறது.
பெர்னாட்ஷா, ஹெ.ஜி. வெல்ஸ் போன்ற முக்கியமான எழுத்தாளர்களால்கூட இந்த நாவலை முழுமையாக வாசிக்க முடியவில்லை. எல்லாவற்றையும் தாண்டி, அமெரிக்கப் பதிப்பகமான ‘மாடர்ன் லைப்ரரி’ வெளியிட்ட 20-ம் நூற்றாண்டின் சிறந்த 100 நாவல்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த நாவல் இது. நுழைவதற்கு மிகுந்த சிரமத்தைக் கொடுத்தாலும், இந்த நாவலுக்குள் நுழைந்த பிறகு அளப்பரிய வாசிப்பு இன்பம் கிடைக்கும் என்பது பலரின் கருத்து.
“எதிர்காலப் பண்டிதர்கள் மண்டையைப் போட்டு உடைத்துக்கொள்ள வேண்டும்” என்பதற்காக இந்த நாவலைத் தான் எழுதியதாக அதன் ஆசிரியர் ஜேம்ஸ் ஜாய்ஸ் நக்கலாக ஒருமுறை கூறினார். சாமுவேல் பெக்கெட், ஹோர்ஹே லூயிஸ் போர்ஹேஸ், சல்மான் ருஷ்டி போன்ற எழுத்தாளர்களின் ஆதர்சம் இவர். எழுத்தாளர்களின் எழுத்தாளர் என்று போற்றப்படுபவர்.
அயர்லாந்தின் தலைநகர் டப்ளின் அருகில் உள்ள ரத்கர் நகரில் 1882 பிப்ரவரி 2-ல் ஜேம்ஸ் ஜாய்ஸ் பிறந்தார். பொறுப்பற்ற தந்தையாலும் குடும்ப வறுமையாலும் ஜேம்ஸ் ஜாய்ஸின் பள்ளிக் கல்வி பாதிக்கப்பட்டது. பின்னர், பல்வேறு சிரமங்களுக்கு இடையே கல்வியைத் தொடர்ந்த அவர், 1898-ல் டப்ளின் பல்கலைக்கழகக் கல்லூரியில் சேர்ந்தார். ஆங்கிலம், பிரெஞ்சு, இத்தாலிய மொழிகளைக் கற்றார். 1902-ல் பட்டப் படிப்பை முடித்த அவர், மருத்துவப் படிப்பில் சேரலாம் என்று திட்டமிட்டிருந்தார்.
எனினும், காலப்போக்கில் எழுத்துலகத்துக்குள் முழுமையாக ஈடுபடத் தொடங்கிவிட்டார். 1907-ல் ‘சேம்பர் மியூசிக்’ எனும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். அதன் பின்னர், ‘டப்ளினர்ஸ்’ எனும் சிறுகதைத் தொகுப்பு 1914-ல் வெளியானது. 1920-ல் அமெரிக்க இலக்கிய இதழான ‘தி லிட்டில் ரிவ்யூ’ இதழில், ‘யுலிஸ் ஸஸ்’ நாவலைத் தொடராக எழுதினார். வெவ்வேறு நாடுகளில் வாழ்ந்தாலும் அவர் மனதில் டப்ளின் நகர்தான் அழுத்தமாகப் பதிந்திருந்தது. அவரது எல்லா படைப்புகளும் டப்ளின் நகரப் பின்னணியிலேயே எழுதப்பட்டன.
கிரேக்கக் கவிஞர் ஹோமர் எழுதிய காவியமான ‘ஒடிசி’யின் பாதிப்பில், தனது தற்காலச் சூழலின் பின்னணியில், டப்ளின் நகரையே கதைக்களமாக வைத்து ‘யுலிஸ்ஸஸ்’ நாவலை எழுதினார் ஜேம்ஸ் ஜாய்ஸ். நாவல் வெளிவந்த பிறகு பாராட்டுகளும் எதிர்ப்புகளும் சேர்ந்தே வந்தன. “நமது யுகம் கண்டடைந்த மகத்தான வெளிப்பாடு இந்த நாவல்தான். நாமெல்லோரும் இந்த நாவலுக்குக் கடன்பட்டிருக்கிறோம்” என்று டி.எஸ். எலியட் ஒரு பக்கம் புகழ்ந்தாலும் இன்னொரு பக்கம் ஆபாசம் என்று கருதி, இந்த நாவல் அமெரிக்காவில் தடைசெய்யப்பட்டது.
1933 வரை அந்தத் தடை நீடித்தது. உலகின் மிகச் சிறந்த நாவல்களுள் ஒன்றை எழுதியிருந்தாலும் வறுமையின் பிடி அவர் மீது இறுகியிருந்தது. 1941 ஜனவரி 13-ல் மறைந்தார்.
- சரித்திரன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT