Published : 28 Jan 2015 10:45 AM
Last Updated : 28 Jan 2015 10:45 AM

குருதி ஆட்டம் 20 - ஓம் சாந்தி ஓம்!

“அரியநாச்சி தாயீ..!”

கரையில் இருந்து தவசியாண்டி கத்தியது, அரியநாச்சிக்குக் கேட்கவில்லை. படகு வந்து கொண்டிருக்கும் கீழைக்கடல் காற்று, தவசியாண்டிக்கு எதிர்க்காற்று. காற்றை எதிர்த்து ஏறாத ‘சொல்’, திரும்பி தவசியாண்டியின் முகத்தில் அடித்தது.

கரையோரம் நின்று கை அசைத்துக் கொண்டிருக்கும் செல்வச் சீமான்களுக்குள் முண்டியடித்துக்கொண்டு நுழைந்தான். எல்லோருக்கும் முன் ஆளாய் நின்று, கடல் நோக்கிக் கத்தினான்.

“தாயீ… அரியநாச்சி!”

அரியநாச்சி பார்த்தாள். ‘தன் பெயரை உச்சரிப்பவன் இங்கு எவன்?’ என அறியாதவளாய்… தலை தூக்கி, கண் ஊன்றி கரையைப் பார்த்தாள்.

இரு கைகளையும் உயர்த்தி, இடமும் வலமும் ஆட்டினான் தவசியாண்டி.

“யார் இந்த கிறுக்குப் பயல்?” கனவான்கள் முகம் சுழித்தார்கள்.

அரணாக நின்ற போலீஸ்களில் ஒருவன், “ஏய்! யார்… நீ?” என்றான்.

போலீஸைப் பொருட்படுத்தாத தவசியாண்டியின் பார்வை கடல் பார்த்திருந்தது. தோளைத் தொட்டு இழுத்த போலீஸ், லத்தியை ஓங்கினான்.

திரும்பிப் பார்த்த தவசியாண்டி, “ஏய்… எடு கையை!” என்று சொல்லி தோளை உலுப்பிவிட்டான்.

“நாட்டை விட்டு, வெள்ளைக்காரன் தான் போயிருக்கான். வெள்ளைக்காரப் புத்தி இன்னும் போகலை….” போலீஸின் கண்களை நேருக்கு நேராகப் பார்த்தவன், “என்னைப் பார்த்தால், காட்டுப் பயலாத் தெரியுதா உனக்கு? நான்… ‘ரணசிங்கம் சேனை’. ரணசிங்கம் தெரி யுமா… ரணசிங்கம்? உங்களுக்கெல்லாம் உடுப்பு மாட்டிவிட்ட வீரன்! அந்த மாவீரனோட ‘ஆப்ப நாட்டு கருஞ் சேனை’யிலே ஒரு அணில் நான். எடு கையை…” தோளைக் குலுக்கியவாறு கடலைப் பார்த்தான்.

படகு, கரையை நெருங்கி கொண்டிருந்தது.

தவசியாண்டியை அடையாளம் கண்டுகொண்டாள் அரியநாச்சி.

“தவசி!” படகிலிருந்தே அழைத்தாள்.

தவசியாண்டிக்கு சந்தோஷம் கண்ணைக் கட்டியது.

“ஆத்தா… ஆப்பநாட்டுக் குல விளக்கே! சேவிக்கிறேன் தாயீ!” தலைக்கு மேல் கையெடுத்து கும்பிட்டுக்கொண்டே அழுதான்.

எல்லோரும் கரை இறங்கினார்கள்.

இரண்டு கைகளையும் மார்புக்குக் குறுக்காக கட்டிக்கொண்டு, அரியநாச் சிக்கு முன்னால் போய் நின்றவன், நெடுஞ் சாண்கிடையாக காலில் விழுந்தான். அரியநாச்சி பதறிப் போனாள். “ஏய்ய்… தவசி! இதென்ன? எந்திரி…” ஒரு எட்டு பின் வைத்தவள், குனிந்து தூக்கினாள்.

எழுந்தவன் கூர்ந்து துரைசிங்கத்தைப் பார்த்தான். துரைசிங்கம், ‘யார் இது?’ என சைகையில் அரியநாச்சியிடம் கேட்டான்.

“ஆத்தாடீ! என் சிங்கம் பெத்த சிங்கமா… இது? ஆப்பநாட்டு குரல் வளையையே நெறிச்சுடான்ங்களே!” முகத்தை மூடிக்கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதான் தவசியாண்டி. கண்ணைத் திறந்து துரைசிங்கத்தைப் பார்க்க பார்க்க, அழுகை கூடியது. சுற்றி நின்ற எல்லோரும் வேடிக்கை பார்த்தார்கள்.

ஒரு வடநாட்டு ஜடாமுடி தேசாந்திரி, வலிய முன்னே வந்து, தலைக்கு மேல் கை வைத்து, “கித்னா முஸ்கில் ஆயேகா தோ பீ… மத் ரோனா… மத்ருக்னா. பக வான் ஹை ஹமாரே சாத். சாந்தி… ஓம் சாந்தி!” என்று ஆசீர்வதித்தார்.

ஜடாமுடி சாமியாரின் உபதேசம் தவசியாண்டிக்கு ஒண்ணுமே புரியலே. வடமொழிக் கலப்பே ‘மலேயா’ மொழி என்பதால், அரியநாச்சிக்கும் துரைசிங்கத்துக்கும் அது புரிந்தது.

“தன்யவாத் குருஜி…” சாமியாரை வணங்கிவிட்டு, “தவசி… வா வெளியே போவோம்” தவசியாண்டியின் தோளைத் தொட்டுத் திருப்பினாள் அரியநாச்சி.

விடிந்தால் பத்தாம் நாள் திருவிழா.

கணக்குப்பிள்ளை ரத்னாபிஷேகத் துக்கு உட்கார நேரமில்லை. படுக்க நேரமில்லை. என்னதான் ஓடினாலும் ஆடினாலும் தோள் சுமை குறையக் காணோம்.

நேற்று இரவு சென்னைப்பட்டணத்தில் ரயிலேறி வந்து கொண்டிருக்கும் வெள் ளையம்மா கிழவியை அழைத்து வர, ரயிலடிக்கு போய்க் கொண்டிருந்தார்.

‘ஊருக்கு வருவேன். சாமி கும்பிடுவேன். அரண்மனைக்குள்ளே நுழைய மாட்டேன்’னு அந்தம்மா நிபந்தனை போட்டுச்சு. அரண்மனைக்கு உடைமைப்பட்ட மகராசிக்கு அப்படி என்ன வைராக்கியமோ… தெரியலே! நல்லாண்டி வீட்டிலேதான் தங்க வைக்கணும். இருபது வருஷமா… பட்டணவாசி. சவுகரிய குறைச்சல் தான். என்ன பண்ண?

‘கட்டாயம் வந்துருவேன்’னு சொன்ன பூசாரி தவசியாண்டியை இன்னைக்கு வரை ஊருக்குள்ளே காணோம். ‘என் னப்பா தவசியாண்டி… ஏன் இன்னும் வரக் காணோம்?’னு கேட்டு காட்டுக் குள்ளே போகவும் முடியாது. அவ னோட விறைப்பும் முறைப்பும் ஊரை பயமுறுத்துது. அவன் வந்தால்தான் ‘கிடாய் வெட்டு’. என்ன பண்ண காத்திருக்கானோ… தெரியலே.

இந்தப் பக்கம், அரண்மனை இடிக் கிற இடி, பெரும் இடியா இருக்குது. உட்கார்ந்த இடத்தில் இருந்தே ஊர் விவரம் கேட்கிறாரு! ‘பந்தல் போட் டாச்சா? மாலை, பூவெல்லாம் வந்து ருச்சா? இந்த வருஷம் முளைப்பாரி வளர்த்தி எப்படி? வெட்டுக் கிடாய் இருபத்தி ஒண்ணும் எங்கே நிக்குது? இரை தின்னுச்சா? ஆட்டம் பாட்டம் கச்சேரி எல்லாம் எப்படி நடக்குது?’ அடுக்கடுக்கா கேட்கிறக் கேள்விக்கு விவரம் சொல்றதுக்குள்ளே, நாக்கு தள்ளுது!

ரயிலடி நெருங்கியது. தான் ஏறி வந்த மோட்டார் வாகனத்தை ஓரமாக நிறுத்தச் சொல்லிவிட்டு, ரயில் நிலை யத்துக்குள் நுழைந்தார்.

தனுஷ்கோடி ‘போட் மெயில்’ அல றிக் கொண்டு வந்தது. பயணிகளோடு வெள்ளையம்மா கிழவியும் இறங்கி னாள். கணக்குப்பிள்ளை மூச்சிரைக்க ஓடினார்.

தவசியாண்டி ஓட்டி வந்த கூட்டு வண்டி, பெருங்குடி கடந்து, செண்ப கத்தோப்பு காட்டுப் பாதை விலக்கில் வந்து கொண்டிருந்தது. வெள்ளையம்மா கிழவியும் கணக்குப்பிள்ளையும் ஏறி வந்த மோட்டார் வாகனம், கூட்டு வண்டிக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றது. வண்டி ஓட்டி வரும் தவசியாண்டி, யார் கண்ணிலும் படாமல் காட்டுக்குள் பாய்ந்து போகும் யத்தனிப்பில் மாடுகளை விரட்டினான்.

மோட்டாருக்குள் அமர்ந்திருந்த வெள்ளையம்மா, “இவன் யாரு? நம்ம ஊரு தவசியாண்டிதானே? இன்னும் உயிரோடு தான் இருக்கானா? இவன் உயிரோடு இருந்தால்… அரண்மனை உயிரோடு இருக்க முடியாதே!” என்றாள்.

கணக்குப்பிள்ளைக்கு உடம்பெல்லாம் வியர்த்தது.

அரியநாச்சியும் துரைசிங்கமும் அமர்ந்து வரும் கூட்டு வண்டி, செண்பகத்தோப்புக் காட்டுக்குள் பாய்ந்து போனது.

- குருதி பெருகும்…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: irulappasamy21@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x