இன்று அன்று | 1946 பிப்ரவரி 11: சிங்காரவேலர் நினைவு நாள்

இன்று அன்று | 1946 பிப்ரவரி 11: சிங்காரவேலர் நினைவு நாள்
Updated on
1 min read

பிற்படுத்தப்பட்ட மீனவ சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், தனது அறிவாலும் சமூகம் மீதான அக்கறையாலும் அசாத்தியமான உழைப்பாலும் சிறந்த வழக்கறிஞராக, தொழிற்சங்கத்தின் முன்னோடியாக, சுதந்திரப் போராட்ட வீரராக, சிந்தனைச் சிற்பியாக உயர்ந்த வரலாறு இது.

1860-ம் ஆண்டு பிப்ரவரி 18-ல் பிறந்தவர் சிங்கார வேலர். ஓரளவுக்கு வசதியான பின்புலம். பள்ளிக் கல்வியை முடித்த பின், சென்னை கிறித்தவக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். அதன்பின் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். பின்னர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிந்தார். ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பல மொழி களைக் கற்றுத் தேர்ந்தார். தவிர, வாதிடுவதில் சிறந்து விளங்கிய சிங்காரவேலர், தனது உழைப்பின் மூலம் குறுகிய காலத்திலேயே பெரும் செல்வ வளம் ஈட்டினார். 1889-ல் திருமணம் நடந்தது.

வசதியான வாழ்க்கை கைக்கு வந்தாலும், வறிய வர்கள் மீதான அக்கறை அவருக்குள் அதிகரித்தது. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அயோத்தி தாசர், 1890-ல் சாக்கிய புத்த சமூகத்தை நிறுவினார். அவரது கொள்கைளால் ஈர்க்கப்பட்ட சிங்காரவேலர், புத்த மதத்தின் மீதும் பெரும் ஈடுபாடு கொண்டார். பின்னர், மகாபோதி சங்கத்தை நிறுவினார். தனது வீட்டிலேயே அச்சங்கத்தின் அலுவலகத்தையும் நடத்தினார். ஆழ்ந்த வாசிப்பு கொண்ட அவர், தனது வீட்டில் 20,000-க்கும் மேற்பட்ட நூல்களை வைத்திருந்தார்.

சுதந்திரப் போராட்டத்தில் முனைப்புடன் ஈடுபட்ட அவர், நேரு உள்ளிட்ட தேசத் தலைவர்களிடம் நட்புகொண்டிருந்தார். சென்னை வந்த தலைவர்கள், அவரது இல்லத்தில் தங்குவதை வழக்கமாகக் கொண் டிருந்தனர். 1919-ல் நடந்த ஜாலியன் வாலாபாக் படு கொலையைக் கண்டித்து, ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி தொடங்கியபோது, அதில் பங்கெடுத்தார். 1921-ல் பிரிட்டிஷ் அரசையும் நீதிமன்றங்களையும் கண்டிக்கும் வகையில், பொதுமேடையில் வழக்கறிஞர் கவுனைத் தீ வைத்து எரித்தார். அன்று முதல், வழக்கறிஞர் தொழிலையும் கைவிட்டார்.

தொழிலாளர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தார். 1918-ல் இந்தியாவில் முதல் தொழிற் சங்கத்தை உருவாக்கியவரும் சிங்காரவேலர்தான். 1923 மே1-ல் முதன்முறையாக தொழிலாளர் தினத்தைக் கொண்டாடினார். இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக் கத்தைத் தொடங்கிய முன்னோடிகளில் இவரும் ஒருவர். பெரியாரின் சுயமரியாதை இயக்கத்திலும் பங்கேற்றார். கம்யூனிஸ்ட் இயக்கமும் சுயமரியாதை இயக்கமும் இணைந்து செயல்பட வேண்டும் என்று பெரியாரிடம் வலியுறுத்தியவர் சிங்காரவேலர். 1928-ல் ரயில்வே நிர்வாகத்தின் அடக்குமுறைகளைக் கண்டித்து, ரயில்வே தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தில் அவர்களுக்குத் துணை நின்றார். அந்தப் போராட்டத்தில் பங்கேற்றதன் காரணமாகக் கைதுசெய்யப்பட்ட சிங்காரவேலருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், அந்தத் தண்டனை குறைக்கப்பட்டு ஆகஸ்ட் 1930-ல் விடுதலை செய்யப்பட்டார்.

பன்முகத் தன்மை கொண்ட தலைவராகத் தன் வாழ்நாள் முழுதும் செயலாற்றிய சிங்காரவேலர், 1946-ல் தனது 85-வது வயதில் மரணமடைந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in