Published : 23 Feb 2015 07:15 PM
Last Updated : 23 Feb 2015 07:15 PM
சீரியஸ் சினிமா ரசிகர்களால் பெரிதாக எடுத்துக்கொள்ளப்படாத போதிலும், உலகெங்கிலும் உள்ள சினிமா ரசிகர்களால் அன்னாந்து பார்க்கப்படுகின்ற விருது... ஆஸ்கர்.
சிறந்த நடிகர், நடிகை, துணை நடிகர், துணை நடிகை, திரைப்படம், அனிமேஷன் திரைப்படம், ஒளிப்பதிவு, உடையமைப்பு, இயக்கம், ஆவணப்படம், ஆவண குறும்படம், படத்தொகுப்பு, வெளிநாட்டுத் திரைப்படம், சிகை அலங்காரம், பாடல், இசை, கலையமைப்பு, அனிமேஷன் குறும்படம், குறும்படம், ஒலித்தொகுப்பு, ஒலியமைப்பு, விஷூவல் எஃபக்ட், தழுவிய திரைக்கதை, திரைக்கதை என்று 24 பிரிவுகளில் அளிக்கப்படுகின்ற ஆஸ்கர் விருதுகள் ஹாலிவுட் திரைக் கலைஞர்களின் மாபெரும் லட்சியமாக இருக்கின்றன.
'வரலாறு' முக்கியம்...
எப்போதும் வரலாற்றையும் சரித்திரத்தையும் பேசும் படங்கள் ஆஸ்கரின் விருதுப் பட்டியலுக்கு தேர்வு செய்யப்படும் என்று ஒரு சொல்லப்படாத நெறி இருக்கிறது.
அந்த வகையில் 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த 9/11 நிகழ்வுக்கு பிறகு இராக் செல்லும் அமெரிக்க வீரர்களை பாதுகாக்கும் ஸ்னைபர் வீரராகிய 'க்ரிஸ் கைல்' வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்ட 'அமெரிக்கன் ஸ்னைபர்', அமெரிக்க மண்ணில் உள்ள கருப்பு நிற மக்களின் உரிமைக்காக போராடிய 'மார்டின் லூதர் கிங் ஜூனியர்'ரின் பாதையை சொல்லும் 'செல்மா', விஞ்ஞானி 'ஸ்டீபன் ஹாகிங்க்ஸ்'ஸிக்கும் அவரது மனைவிக்கும் இடையே உள்ள காதலை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருந்த 'தி தியரி ஆப் எவெரிதிங்' போன்ற படங்கள் இருந்தன.
மேலும், இரண்டாம் உலகப் போரின்போது எனிக்மா என்ற கருவியால் பிற மனிதர்கள் புரிந்து கொள்ளமுடியாத வடிவத்தில் தகவல்களை ஜெர்மனி பகிர்ந்திட அமெரிக்காவுக்கு மாபெரும் சவாலாக இருந்த இந்த 'எனிக்மா' கருவியின் செயல் திறனை கணித மேதை 'ஆலன் டர்னர்' எப்படி முறியடித்தார் என்று கூறும் 'தி இமிடேஷன் கேம்'. இப்படி அமெரிக்காவின் வளர்ச்சிக்கு பெரிதும் காரணமாய் இருந்த வீரர்களையும், விஞ்ஞானிகளையும், அரசியல் சாதனையாளர்களையும் பேசும் திரைபபடங்கள் இந்த வருட ஆஸ்கரில் பல பிரிவுகளில் இடம் பெற்றிருந்தன.
எப்போதுமே சாதனையாளர்களின் வாழ்க்கை வராலாறுகளைப் படம்பிடிக்கும் திரைப்படங்கள் ஆஸ்கர் பிரிவுக்கு வருவது வழக்கமான ஒன்றே. பார்த்தாலே இது ஆஸ்கர் படங்கள், அக்மார்க் ஆஸ்காருக்கென்றே எடுக்கப்பட்ட படங்கள் என்று அங்கீகரிக்கக் கூடியவையே மேற்கூறியன எல்லாம்.
இந்தப் படங்களிலிருந்து முற்றிலுமாக மாறுபட்ட பல பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்டு வெற்றியையும் கண்ட இரு முக்கியப் படங்கள் தான் 'தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல்' மற்றும் 'பேர்டுமேன்'.
ஓர் இலக்கிய நகைச்சுவையோடு கலைரசனையுடன் படமாக்கப்பட்ட 'தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல்' இம்முறை ஆஸ்கரில் நான்கு பிரிவுகளில் வெற்றிபெற்றது.
பின்னியெடுத்த 'பேர்டுமேன்'
சர்வதேச அரங்கங்களில் மாபெரும் பாராட்டைக் குவித்த 'பேபல்', 'அமெர்ஸ் பெராஸ்', 21 கிராம்ஸ்' போன்ற படங்களை இயக்கிய அலெஜன்ட்றோ கோன்ஸாலேஸ் இயக்கி இவ்வருடம் வெளிவந்த படம் 'பேர்டுமேன்'. இப்படத்தின் உள்ளடக்கம் மிகவும் வித்தியாசமானது. இதில் அப்படி என்னதான் சொல்லப்பட்டிருக்கிறது என்று சற்றே பார்க்கலாம்.
'கலைஞனாவதற்கு வழியற்றவன் தான் விமர்சகன் ஆகிறான், நீ ட்விட்டரில் இல்லை... பேஸ்புக்கிலும் உனக்கு அக்கவுண்ட் இல்லை... உண்மையில் கூறினால் நீ இந்த உலகத்தில் இயங்கிடவே இல்லை, யாரோ ஒருவன் உருவாக்கிய கலைக்கு உயிர் கொடுப்பதாகக் கூறி நீ யாரை ஏமாற்றப் பார்க்கிறாய் உண்மையில் கூறினால் உனக்கு இங்கே அடையாளம் இல்லை. அதனால் நீ உன்னதமாக நடிப்பதாகக் கூறி உனக்கு நீயே அடையாளம் அளித்துக் கொள்ளப் பார்க்கிறாய். கலைக்காக செய்கிறேன் என்று சொல்வதெல்லாம் வெறும் கட்டுக்கதை.'
இப்படி ஹாலிவுட்டின் நாளிதழ்களையும், விமர்சகர்களையும், ரசிகர்களையும், நடிகர்களையும் எள்ளி நகையாடிய 'பேர்டுமேன்', விமர்சகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. ஹாலிவுட்டை கேலி செய்த ஒரு படம் நான்கு ஆஸ்கர்களை குவித்தது தான் ஆச்சர்யம்.
எப்போதும் 'கோல்டன் க்ளோப்' விருதுகளுக்கென்று தேர்வு செய்யப்பட்ட படங்கள் ஆஸ்கரிலும் விருதுகளை குவிப்பது யதார்த்தம். அதே வழக்கம் இம்முறையிலும் நிறைய பிரிவுகளில் பிரதிபலித்தது. 'கோல்டன் க்ளோப்'பில் சிறந்த நடிகைக்கான விருதை 'ஸ்டில் அலைஸ்' திரைப்படத்துக்காக பெற்ற நடிகை 'ஜூலியானா மூர்' ஆஸ்கரிலும் வென்றது, 'தியரி ஆப் எவெரிதிங்' படத்துக்காக சிறந்த நடிகருக்கான விருதை குவித்த 'எடி ரெட்மெயின்' ஆஸ்கரிலும் வெற்றி பெற்றது போன்ற நிகழ்வுகள் குறிப்பிட்டத்தக்கது.
எந்த வகையிலும் குழந்தைகளுக்கு தீமையைப் புகட்டாமல், பெரியவர்களும் ரசிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்த 'பிக் ஹீரோ 6' திரைப்படம் சிறந்த அனிமேஷன் திரைப்படத்துக்கான பிரிவில் வெற்றி கண்டது. சிறந்த படத்துக்கான பிரிவில் 'பேர்ட்மேன்' வெற்றி பெற்றது.
சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம்
"சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான பரிந்துரையில் இடம்பெற்றுள்ள Ida, Leviathan, Tangerines, Timbuktu, Wild Tales ஆகிய 5 திரைப்படங்களுமே அற்புதமான காவியங்கள். ஆஸ்கர் என்பது வணிகமயமாக்கப்பட்ட விருது என்றாலும், இம்முறை விருது பெற்றுள்ள போலந்தின் Ida படத்துடன், மற்ற நான்கு படங்களையும் பார்க்கத் தவறாதீர்கள்' என்கிறார் நம்மூரைச் சேர்ந்த >உலக சினிமா ரசிகன்.
பாய்ஹுட்... ஏமாற்றம்!
ஒரு சிறுவன் பருவநிலை அடையும் வரை அவனுள் நடக்கின்ற மாற்றங்களை பனிரெண்டு வருடங்களாக படமாக்கிய 'பாய்ஹுட்' திரைப்படம் துணை நடிகைக்கான விருதினை மட்டும் வென்றது. 'கோல்டன் க்ளோபில்' சிறந்த படத்திற்கான விருதையும், சிறந்த இயக்குநருக்கான விருதையும் குவித்த படம் இப்படம் ஆஸ்கரில் பெரிய வெற்றிகளை குவித்திடாமல் போனது ஏமாற்றமே.
எப்போதும் போல் விமர்சகர்களால் பாராட்டப்பட்ட இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இம்முறையும் ஆஸ்காருக்கு ஒரு பிரிவில் கூட தேர்வு செய்யப்படாமல் போனதும்... அவர் இயக்கி இவ்வருடம் வெளிவந்த 'இன்டெர்ஸ்டெல்லார்' திரைப்படம் விஷூவல் எஃபக்டிற்கு மட்டும் ஆஸ்கர் விருதினை வென்றதும் வழக்கமாக ஆஸ்கரில் நடக்கின்ற பாரபட்சத்தையே பிரதிபலித்தன.
பார்க்க ->ஆஸ்கர் விருதுகள் 2015 - வெற்றியாளர்கள் பட்டியல்
சினிமா பித்தனின் ஃபேஸ்புக் பக்கம்>https://www.facebook.com/CinemaPithan
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT