Published : 27 Feb 2015 10:35 AM
Last Updated : 27 Feb 2015 10:35 AM
உலகப்புகழ் பெற்ற கவிஞர், கல்வியாளர் ஹென்றி வாட்ஸ்வொர்த் லாங்ஃபெல்லோ (Henry Wadsworth Longfellow) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 27). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
அமெரிக்காவின் போர்ட் லேண்ட் நகரில் பிறந்த வர் (1807). பள்ளியில் மிகவும் கெட்டிக்கார மாணவர் என்று பெயர் பெற்றவர்.
கற்பதிலும் புத்தகம் வாசிப்பதிலும் இவருக்கு இருந்த ஆர்வத்தை அம்மா ஊக்கப்படுத் தினார். பல நல்ல புத்தகங்களை வாங்கிக் கொடுத்தார். தனது முதல் கவிதையை வெளியிட்டபோது லாங்ஃபெல்லோவுக்கு 13 வயது.
போடன் கல்லூரியில் 15 வயதில் சேர்ந்தார். பட்டப் படிப்பு முடிப்பதற்குள் 40 கவிதைகளை வெளியிட்டார்.
ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று பிரெஞ்ச், ஸ்பானிஷ், ஜெர்மன், இத்தாலி, போர்ச்சுகீசிய மொழிகளைக் கற்றார். தான் படித்த கல்லூரியிலேயே பணியாற்றினார். இந்த காலக்கட்டத்தில் நிறைய பாடப் புத்தகங்களை எழுதினார். ‘எ பில்கிரிமேஜ் பியாண்ட் த ஸீ’ என்ற பயண நூலையும் எழுதினார்.
1836-ல் ஹார்வர்டு கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். 1839-ல் ‘வாய்சஸ் ஆப் த நைட்’ கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து ‘தி வில்லேஜ் ஆஃப் பிளாக்ஸ்மித்’, ‘த ரெக் ஆஃப் த ஹெஸ்பெரஸ்’ உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகள் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றன.
பேராசிரியர் பணியில் இருந்து 1853-ல் ஓய்வு பெற்று முழுநேர எழுத்துப் பணியில் ஈடுபட்டார். 1859-ல் ஹார்வர்டு பல்கலைக்கழகம் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. 1861-ல் உடையில் தீப்பற்றியதில் மனைவி இறந்தார். அவரைக் காப்பாற்றும் முயற்சியில் இவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
முகத்தில் தீக்காயம் ஏற்பட்டு சவரம் செய்ய முடியாமல் போனதால் நீண்ட தாடி வளர்ந்தது. நாளடைவில் அதுவே அவரது அடையாளமானது.
இவரது எழுத்துக்கள் பெரும்பாலும் இயற்கை, கலாச்சாரம், தார்மிக மதிப்பீடுகள், மக்களின் பொருள் தேடும் பயணம் முதலானவை குறித்து இருந்தன. புகழ்பெற்ற பிற மொழிப் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். மொழிபெயர்ப்பாளர்களை ஊக்கப்படுத்தினார்.
ஐரோப்பா, ஆசியா, அரேபிய நாடுகளை சேர்ந்த பல புகழ்பெற்ற கவிதைகளைத் தொகுத்து 31 தொகுதிகளாக ‘போயம்ஸ் ஆஃப் பிளேசஸ்’ என்ற பெயரில் 1874-ல் வெளியிட்டார். இவரது கவிதைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன.
வாழும் காலத்திலேயே புகழ்வாய்ந்த கவிஞராகப் போற்றப்பட்டார். அனைத்து தரப்பினரும் விரும்பும் படைப்பாளியாகத் திகழ்ந்தார். இனிமையானவராக, எளிமையானவராக, தன்னடக்கம் மிக்கவராகத் திகழ்ந்த லாங்ஃபெல்லோ 75 வயதில் (1882) மறைந்தார். 2007-ல் அமெரிக்கா இவரது பெயரில் தபால் தலை வெளியிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT