Published : 19 Feb 2015 04:53 PM
Last Updated : 19 Feb 2015 04:53 PM
தற்போது உலகக் கோப்பை கிரிக்கெட் ஆரம்பித்து ஆட்டங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், இந்தியாவுடான போட்டிகளில் இதுவரை பாகிஸ்தான் வெற்றியே பெறாததைச் சுட்டிக்காட்டி, கடந்த சில வாரங்களுக்கு முன்பு விளம்பரம் ஒன்றை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்டது.
தமது தேச அணி வெற்றி பெற்றால் பட்டாசு வெடிக்கவேண்டும் என்ற பாகிஸ்தான் ரசிகர்களின் எண்ணம் கடைசி வரை நிறைவேறாமலே இருப்பதாக அமைந்திருந்த அந்த வீடியோ இது:
இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே ஆரவாரத்தையும், இந்தத் தடவையும் இந்தியா தனது வெற்றியை தக்க வைத்துக்கொள்ளுமா என்ற சின்ன பயத்தையும் ஒருசேர ஏற்படுத்திய இந்த வீடியோவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
முதல் வீடியோவுக்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ், இப்போது இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான லீக் ஆட்டத்தை முன்வைத்து ஒரு விளம்பரத்தை அப்லோடியிருக்கிறது.
உலகக் கோப்பை ஆட்டங்களில் எப்படி பாகிஸ்தானுக்கு எதிராக, இந்தியா 6-0 என்ற கணக்கில் ஆதிக்கம் செலுத்துகிறதோ, அதேபோல உலக கோப்பையில் இதுவரை இந்திய அணியுடன் மோதியுள்ள மூன்று ஆட்டங்களிலும் (1992, 1999, 2011) தென்னாப்பிரிக்க அணியே வெற்றி பெற்றுள்ளது. இதை நகைச்சுவையாய் பரிகசிக்கும் வகையில் இந்த வீடியோ விளம்பரம் அமைந்திருந்தது.
தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்கும் கிரிக்கெட் மேட்சை இந்தியாவைச் சேர்ந்த ஐந்து நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து பரபரப்பாய்ப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். வீட்டின் அழைப்பு மணி தொடர்ந்து அடித்துக் கொண்டே இருக்கிறது. ஒருவர் மட்டும் எழுந்து சென்று கதவைத் திறக்க, அங்கே இரண்டு தென்னாப்பிரிக்க ரசிகர்கள் கையில் பட்டாசுப் பெட்டியுடன் கேலிச் சிரிப்பு சிரித்துக் கொண்டே நிற்கின்றனர்.
இந்திய ரசிகர் எதுவும் புரியாமல் குழப்பத்துடன் பார்க்க, அவர்கள் 'மோக்கா..! மோக்கா..!' (வாய்ப்பு / சந்தர்ப்பம்) என்று பாடியபடியே பட்டாசுப் பெட்டியை கொடுத்துவிட்டுச் செல்கின்றனர். யோசனையோடு பட்டாசுகளை வாங்குபவர், இந்த முறையாவது இந்தியா வெற்றி பெறுவோமா என்ற கேள்வியோடு, அவற்றை உள்ளே எடுத்துச் செல்வதாக முடியும் விளம்பர வீடியோ இது:
ஸ்டார் ஸ்போர்ட்ஸின் இந்த விளம்பரத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய ரசிகர்கள் ஒரு வீடியோவை யூடியூபில் பதிவேற்றி இருக்கின்றனர்.
இதிலும் நண்பர்கள் ஒன்றாய் உட்கார்ந்து குளிர்பானம் அருந்திக்கொண்டே மேட்ச் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அழைப்பு மணி தொடர்ந்து ஒலிக்கிறது. ஒரு நண்பர் சென்று கதவைத் திறக்கிறார்.
அங்கே இரண்டு தென்னாப்பிரிக்க ரசிகர்கள் சிரிப்புடன், 'மோக்கா... மோக்கா!' என பாடிக் கொண்டே கையில் பட்டாசுப் பெட்டியைக் கொடுத்துவிட்டு செல்ல எத்தனிக்கின்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்தும் இந்திய ரசிகர், தன் வீட்டுச் சுவற்றில் மாட்டியிருக்கும் மூன்று புகைப்படங்களைக் காட்டுகிறார். முதல் படத்தில் 1983-ல் உலகக் கோப்பையை வென்ற கபில்தேவ், இரண்டாவதில் 2011-ல் கோப்பையை வென்ற தோனி தலைமையிலான இந்திய அணியினர், மூன்றாவதில் 20 ஓவர் வெற்றிக் கோப்பையுடன் கேப்டன் தோனி ஆகியோர் சிரிக்கின்றனர்.
அதைப் பார்த்து தலையைத் தொங்கப்போட்டுக் கொள்ளும் தென்னாப்பிரிக்க ரசிகர்கள் இருவரிடமும், இந்திய ரசிகர் பட்டாசுகளைத் திருப்பிக் கொடுக்கிறார். பிறகு, இந்திய நண்பர்கள் மூவரும் சேர்ந்து இந்த முறை வாய்ப்பு கிடைத்தால் பார்த்துக் கொள்ளுங்கள் என்று 'மோக்கா... மோக்கா!' எனப் பாடி, ஒரு முறை கூட தென்னாப்பிரிக்க அணி உலகக் கோப்பையை வெல்லவில்லை என்பதைக் குறிப்பால் சொல்லும்படியாக அமைந்த வீடியோ பதிவு இது: .
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT