Published : 04 Feb 2015 11:34 AM
Last Updated : 04 Feb 2015 11:34 AM
பொழுது இருளும் நேரம்.
கூட்டு வண்டி காட்டுக்குள் பாய்ந்து போய்க் கொண்டிருந்தது. காளைகளுக்கு கண் பழகிய தடம். வண்டிக்காரனின் கை படாமலே சிட்டாய் பறந்தன. ஓட்டிச் செல்லும் தவசியாண்டிக்கு மட்டுமான காட்டுப் பாதை என்பதால், குறுக்கே நரி, புலி என வன ஜந்துக்களின் அரவாட்டத்தையே காணோம். வண்டி வேகத்துக்கு, தவசியாண்டியின் பின் தலைமுடி காற்றில் பறந்தது.
தவசியாண்டி போகிற போக்கில் ஓரக்கண் கொண்டு பின்பக்கம் திரும்பிப் பார்த்தான். வண்டிக்குள் அமர்ந்து வரும் அரியநாச்சியும் துரைசிங்கமும் காட்டை வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தார்கள். இருள் சூழச் சூழ, வனம் பேயாய் விரிந்தது.
இருபது வருடங்களாக மலேசியக் காடுகளுக்குள் வாழ்ந்த வாழ்க்கையில், எல்லா வனப் பேச்சிகளுடனும் கைகுலுக்கப் பழகி இருந்தாள் அரியநாச்சி. மடியில் ஊர்ந்து செல்லும் மலைப் பாம்பின் வால் நுனியை செல்லமாய் சீண்டிவிடுவாள்.
உண்ட மயக்கம் தீர, தலை சாய்க்க நினைக்கும் புலிகளும் சிங்கங்களும் அரியநாச்சியின் குடிசைப் பக்கம் வந்து போகும். பிறப்பிலேயே பயமறியாத ஆப்பநாட்டு அரியநாச்சியை, வைரமாக்கி அனுப்பி இருந்தது மலேசியக் காடு.
வண்டியின் முன்புறம் அமர்ந்து வரும் துரைசிங்கம், இருள் என்றும் பகல் என்றும் பேதம் அறியாதவன். இருட்டிலும் கண் பார்ப்பவன். உஸ்தாத் அப்துற் றஹீமிடம் அவன் கற்றுத் தேர்ந்த வித்தைகளில் பெரும்பாலானவை இரு ளில் கற்றவை. இருளிலும் குறி பிசகாத எறியில் கை தேர்ந்தவன். அத்தை அரிய நாச்சி விதைத்த அக்னியை, எல்லை அறியாத பெருநெருப்பாய் வளர்த் தெடுத்து வந்து இறங்கி இருக்கிறான்.
தனுஷ்கோடியில் கப்பலை விட்டிறங் கிய அரியநாச்சியையும் துரைசிங்கத்தை யும் கண்டதில் இருந்து, தவசியாண்டியின் முகம் ‘திகுதிகு’என கொதித்துக் கொண்டே இருந்தது. உற்சாகமும் பெருமிதமும் நிறைந்த திகுதிகுப்பு அது!
பதினேழு வருட வனவாசத் தவம் கலைத்து, பழி தீர்க்கப் போகிற உற்சாகம். நெஞ்சுக்குள் தெய்வமாய் பூஜிக்கும் மாவீரன் ரணசிங்கத்தின் வாரிசுகள், இருபது வருடம் கழித்து கடல் கடந்து, தன்னை நாடி வந்திருப்பதில் மேலிடும் பெருமிதம்!
ஆனாலும் அரியநாச்சியின் மவுனம் தவசியாண்டியின் வாயை இறுக்கியது. தலைக்குள் ஏதோ ஒன்று குடைந்துகொண்டே இருந்தது. வந்து இறங்கியதில் இருந்து, ஊர் நிலவரம் குறித்து அரியநாச்சி ஒரு வார்த்தை பேசவில்லை.
நாளை பத்தாம் நாள் திருவிழா. எங்கோ ஒரு தேசத்தில் இருந்து மிகச் சரியாக இன்று எப்படி வந்து இறங்கினாள்? தெரிந்தே வந்தாளா? யதேச்சையாக வந்தாளா? நாளை நடக்கப் போவதோ பெரிய காரியம். காவல் தெய்வம் ரணசிங்கத்தின் துரோகச் சாவுக்குக் கணக்கு தீர்க்கும் நாள். ஆப்பநாடே அதிரப் போகிறது. அந்தக் கனத்த காரியம் குறித்து, வந்ததில் இருந்து வாய் திறக்காமல் ஆழம் காண முடியாத கடலாக அமர்ந்து வருகிறாள்.
பெண்ணுருவில் வந்திருக்கும் ரணசிங்கம் எப்படி பேசுவான்? நாலா திசைகளில் இருந்தும் அணி அணியாய் திரண்டு வந்த ஆங்கிலேயக் காக்கிகளைக் கொளுத்திச் சாம்பலாக்கிய ரணசிங்கத்தின் தங்கை, அப்படித்தான் இருப்பாள். அந்த மவுனத்தில்தான் புதைந்திருக்கிறது காரியம்!
‘நாளை விடிந்ததும் இருளப்பசாமி கோயில் பூஜைக்குக் கிளம்ப வேண்டும். அதற்குள் அரியநாச்சியின் உத்தரவு கிடைத்துவிடும். கிடைக்காவிட்டாலும் கணக்கை தீர்த்து விட வேண்டியதுதான்’ என்கிற முடிவோடு வண்டியை செலுத்தினான்.
குடிசையை நெருங்கியதும் கூட்டு வண்டியின் வேகம் குறைந்தது.
காட்டுக் குடிசையின் ஒற்றை விளக்காய் வாசலில் நின்றாள் செவ்வந்தி.
விளக்கு ஏற்றிய பின் ஊருக்குள் நுழைந்த மோட்டார் வாகனத்தை சிறுவர்கள் விரட்டிக்கொண்டே ஓடி வந்தார்கள். நல்லாண்டி வீட்டின் முன் நின்ற வாகனத்தை பெரியவர்களும் வேடிக்கை பார்த்தார்கள்.
“கார்லே வர்றது யாரு?”
நல்லாண்டியும் குடும்பத்தாரும் ஓடி வந்து எதிர்கொண்டு நின்றார்கள். முன்பக்கம் அமர்ந்து வந்த கணக்குப்பிள்ளை ரத்னாபிஷேகம் இறங்கி, பின் கதவை திறந்துவிட்டார். வெள்ளையம்மா கிழவி, முகத்தை சுளித்துக்கொண்டே இறங்கினாள். கோயில் திருவிழாவுக்கு வெள்ளையம்மா வருவது பற்றி கணக்குப்பிள்ளை, நல்லாண்டியைத் தவிர யாருக்கும் சொல்லி வைக்கவில்லை. நல்லாண்டி மட்டும் வெள்ளையம்மாவை அடை யாளம் கண்டுகொண்டார்.
“கும்பிடுறேன் தாயீ…” கும்பிட்டார்.
வெள்ளையம்மா, நல்லாண்டிக்கு அக்கா முறை. ஆனாலும் உறவுமுறை சொல்லி அழைக்காமல், ‘தாயீ...’ என்றார்.
சுற்றி நின்ற யாருக்கும் வெள்ளையம்மாவைக் கண்டதும் அடையாளம் தெரியவில்லை. ஆறு மாதக் கைக்குழந்தையாக இருந்த பேரன் கஜேந்திரனைத் தூக்கிக்கொண்டு ஊரை விட்டு வெளியேறி இருபது வருடம் கழித்து வந்து இறங்கியிருந்தாள். கால இடைவெளி, ஞாபகத் தடயங்களை அழித்துப் போட்டிருந்தது.
உற்றுப் பார்த்த மூத்தவர்கள் சிலர் கண்டுகொண்டார்கள். எல்லோரும் நெருங்கி வந்து, முகம் காட்டி கும்பிட்டார்கள். எவர் முகத்தையும் நேருக்கு நேர் பார்ப்பதை வெள்ளையம்மா தவிர்த்தாள். கணக்குப்பிள்ளையும் நல்லாண்டியும் கூட்டத்தை விலக்கி, வழி ஒதுக்கினார்கள். பயணக் களைப்பில் இருப்பதுபோல் பாவனை செய்துகொண்டு நல்லாண்டியின் வீட்டுக்குள் நுழைந்தாள்.
தாழ்வாரம் தாண்டி, நடுப் பத்தியில் நுழைந்ததும் கண்ணில் பட்டது ஒரு புகைப்படம். விதிர்த்துப் போனாள். மேற்கொண்டு நகர இயலாமல் நின்றவள், கணக்குப்பிள்ளையைத் திரும்பிப் பார்த்தாள். இரண்டு எட்டு பின்னால் வந்த ரத்னாபிஷேகம் பிள்ளைக்கு கண்கள் இருண்டன. திரும்பி, நல்லாண்டியைப் பார்த்தார். நல்லாண்டி சிரித்துக்கொண்டே புகைப்படத்தைக் கை காட்டி, “நம்ம ரணசிங்கம்!” என்றார்.
கிழக்கே நிலா கிளம்பிவிட்டது.
அரண்மனை உடையப்பன், யாருக் காகவும் இத்தனை நேரம் காத்திருந்தது இல்லை. தலை வாசலைப் பார்த்தவாறு மைய மண்டபத்தில் வெகுநேரம் அமர்ந்திருந்தான். கணக்குப்பிள்ளை ரத்னாபிஷேகம், தோட்டத்து வாசலைப் பார்த்தவாறு தலை வாசலில் நின்றிருந்தார். தெருவைப் பார்த்தவாறு, ‘லோட்டா’, தோட்டத்து வாசலில் வெகு நேரம் நின்றிருந்தான்.
தெருவில் வண்டிச் சலங்கை மணி ஓசை கேட்டது. ‘லோட்டா’ கதவுகளை அகலத் திறந்தான். கூட்டு வண்டி தலை வாசல் அருகே நின்றது. உடையப்பன் எழுந்து வந்து, “வாங்க முதலாளி!” என்று கைகூப்பி வணங்கினான். “என்ன உடையப்பா… சவுக்கியமா?” பெருநாழி முதலாளி இறங்கினான்.
கையில் அரிவாளோடு கிழக்கே பார்த்து நிற்கும் இருளப்பசாமி, ரெட்டை சந்தோசம் கொண்டார்.
- குருதி பெருகும்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள:
irulappasamy21@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT