Published : 15 Feb 2015 06:27 PM
Last Updated : 15 Feb 2015 06:27 PM

கலிலியோ 10

கணிதவியலாளர், பொறியாளர், வானியல் நிபுணர், தத்துவவாதி என பன்முகப் பரிமாணம் கொண்ட கலிலியோ கலிலி (Galileo Galilei) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 15). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து :

* இத்தாலியின் பைசா நகரில் பிறந்தவர். சிறு வயதிலேயே எதையும் மிக நுணுக்கமாக கவனிக்கும் திறன் கொண்டிருந்தார்.

* ‘ஆண்களுக்கு 32 பற்கள், பெண்களுக்கு 28 பற்கள்’ என்று அரிஸ்டாட்டில் கூறியதாக பள்ளியில் சொல்லிக்கொடுத்தார்கள். பின்னர் இவர் தன் அம்மா, பக்கத்து வீட்டுப் பெண்களின் பற்களையும், சில ஆண்களின் பற்களையும் எண்ணிப் பார்த்தார். ‘அரிஸ்டாட்டில் சொன்னது தவறு, இருவருக்குமே 32 பற்கள்தான்’ என்று தெளிவுபடுத்தினாராம்.

* அப்பாவின் ஆசைப்படி, மருத்துவம் படிக்க பைசா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். உண்மையில், இவருக்கு கணிதம், இயந்திரவியல், இசை, ஓவியத்தில்தான் ஆர்வம். கல்லூரியில் பயின்றுகொண்டே ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். ‘பெண்டுலம்’ விதியைக் கண்டறிந்தார். தெர்மாஸ்கோப், ஹைட்ரோஸ்டாடிக் பாலன்ஸ் கருவியைக் கண்டறிந்தார். அதைப் பற்றி ஒரு புத்தகமும் எழுதினார். அறிவியலாளர்கள் மத்தியில் அறிமுகம் பெற்றார்.

* மருத்துவப் படிப்பை நிறுத்திவிட்டு கணிதம் பயின்றார். பின்னர், அதே ஊரில் ஒரு கல்லூரியில் கணிதப் பேராசிரியராகப் பணியாற்றினார். பிறகு, ‘பாடுவா’ என்ற ஊரில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக 18 ஆண்டுகள் பணியாற்றினார்.

* அண்டவெளியில் காணும் பொருட்கள், சந்திரனின் பரப்பில் காணும் மலைகள், வியாழன் கிரகத்தைச் சுற்றிக் காணப்படும் ஒளிவட்டம், சூரியனில் காணப்படும் புள்ளிகள் ஆகியவற்றை தான் கண்டறிந்த டெலஸ்கோப் மூலம் பார்த்து ஆராய்ந்தார்.

* கோள்களைப் பற்றிய பல கோட்பாடுகளை இந்த ஆராய்ச்சிகள் தகர்த்தன. இவரது கருத்துகள் வானியல் துறையில் புரட்சியை ஏற்படுத்தின. இந்த அனுபவங்களைத் திரட்டி ‘தி டயலாக் ஆஃப் தி டூ பிரின்சிபல் சிஸ்டம் ஆஃப் தி வேர்ல்டு’ என்ற புத்தகத்தை எழுதி மேலும் பிரபலமானார். வெப்பமானியை உருவாக்கினார்.

* பொருட்கள் இயக்கவியலில் புதிய கோட்பாட்டை நிரூபித்தார். தொடர்ச்சியாக பல நூல்கள் எழுதினார். அவை உலகப் புகழ் பெற்றன.

* சூரியனும் மற்ற கோள்களும் பூமியைச் சுற்றுவதாகவே பல நூற்றாண்டுகளாக நம்பப்பட்டது. பூமி உள்ளிட்ட கோள்கள்தான் சூரியனைச் சுற்றுகின்றன என்று கலிலியோ, கோபர்நிகஸ், ஜோகன்னஸ் கெப்ளர் ஆகியோரின் ஆய்வுகள்தான் முதன்முறையாக கூறின.

* இவரது கண்டுபிடிப்புகள் கிறிஸ்தவ மத நம்பிக்கைக்கு எதிரானது என்று கூறி இவருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இவரது கருத்துகளைத் திரும்பப் பெறவும் வலியுறுத்தப்பட்டது. நீண்டகாலம் இவர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டதாகவும், கல்லால் அடித்து, தீவைத்துக் கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது.

* நவீன வானியல் ஆய்வுகளின் தந்தை, நவீன இயற்பியலின் தந்தை, அறிவியலின் தந்தை என்றெல்லாம் போற்றப்படும் கலிலியோ 78 வயதில் மறைந்தார். கலிலியோ இறந்து 350 ஆண்டுகளுக்குப் பிறகு, அவரை தண்டித்தது தவறு என்று 1992-ல் போப் மன்னிப்பு கோரினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x