Published : 17 Feb 2015 09:48 AM
Last Updated : 17 Feb 2015 09:48 AM
சுமார் 20 ஆண்டுகள் நடந்த வியட்நாம் போரில் அமெரிக்கா தார்மிகரீதியாகத் தோல்வியடைந்து திரும்பியிருந்தது. லட்சக் கணக் கானோரைக் கொன்று குவித்த போர் அது. ஆனால், நான்கே ஆண்டுகளில் வியட்நாம் இன்னொரு போரைச் சந்திக்க நேர்ந்தது. இந்த முறை வியட்நாமை ஊடுருவியது அண்டை நாடான சீனா.
இதன் பின்னணியில், வியட் நாமின் தவறான அணுகுமுறையும் இருந்தது. தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட வேண்டும் என்று முடிவெடுத்த வியட்நாம், அண்டை நாடான லாவோஸில் தனது ராணுவத்தை நிறுத்தி வைத்தது. அத்துடன், போல் பாட் தலைமையிலான கம்போடிய அரசைக் கவிழ்க்கும் நடவடிக்கை யிலும் இறங்கியது. வியட்நாமின் இந்த நடவடிக்கைகள், சீனாவை எரிச்சலடைய வைத்தன. இத்தனைக்கும் அமெரிக்காவுட னான போரில் வியட்நாமுக்கு சீனா துணைநின்றது.
1979 ஜனவரி 1-ல் அமெரிக்கா சென்ற சீனாவின் துணைப் பிரதமர் டெங் சியோபிங் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டரிடம் வியட்நாம் பற்றி முறையிட்டார். “நமது குட்டிப் பையன் ரொம்பவே துள்ளுகிறான். அடி கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்றார் டெங் சியோபிங். சோவியத் ஒன்றியத்துடனான உறவை முறித்துக்கொள்ளும் மனநிலைக்கு சீனா வந்திருந்த சமயம் அது. வியட்நாமுக்குக் கைகொடுக்க சோவியத் ஒன்றியம் தயாராகவும் இருந்தது. ஓராண்டுக்கு முன்னர், வியட்நாமுடனான கூட்டு ஒப்பந்தத்தில் சோவியத் ஒன்றியம் கையெழுத்திட்டிருந்தது. வியட்நாமின் நடவடிக்கைகளின் பின்னணியில் சோவியத் ஒன்றியம் இருந்ததாக சீனா கருதியது.
வியட்நாமில் வசித்த சிறுபான்மை சீனர்கள் பாரபட்சமாக நடத்தப்பட்டது, தான் சொந்தம் கொண்டாடிவந்த ஸ்பார்ட்லி தீவுகளை ஆக்கிரமித்தது போன்ற காரணங்களால் வியட்நாம் மீது, சீனா கடும் கோபத்தில் இருந்தது. மேலும், எல்லையில் அடிக்கடி ஊடுருவித் தாக்குதல்களை நடத்தியதும் வியட்நாம் மீதான கோபத்தை அதிகரித்திருந்தது. இதையடுத்து, 1979-ல் இதே நாளில் நூற்றுக் கணக்கான துருப்புகள் வியட்நாமின் எல்லைப் பகுதிகளை ஊடுருவின.
அதேசமயம், வியட்நாமின் பகுதிகளைக் கைப்பற்றுவது தங்கள் நோக்கம் அல்ல என்றும் எல்லைப் பகுதியில் அமைதி நிலவ வேண்டும் என்பதுதான் தங்கள் நோக்கம் என்றும் சீனா குறிப்பிட்டது. அந்த சமயத்தில், லாவோஸிலும் கம்போடியாவிலும் வியட்நாமின் கணிசமான படைகள் நிறுத்தப்பட்டிருந்தன. எனவே, நேரடி மோதல்களைத் தவிர்த்து விட்டு கெரில்லா முறையிலேயே பதிலடி தந்தன வியட்நாம் படைகள். சரியாக ஒரு மாதம் நடந்த போரில் இரு தரப்பிலும் ஆயிரக் கணக்கான வீரர்கள் உயிரிழந்தனர். போரில் தனக்குத்தான் வெற்றி என்று சீனாவும் வியட்நாமும் கூறிக் கொண்டன. வியட்நாமில் இருந்த சீனப் படைகள் திரும்பப் பெறப் பட்டன. எனினும், கம்போடியா விலிருந்து வியட்நாம் படைகள் வெளியேறவில்லை. இதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையில் பகை கனன்றுகொண்டே இருந்தது.
எனினும், 1990-களில் கம்போடி யாவிலிருந்து தனது படைகளை வியட்நாம் திரும்பப் பெற்றது. சோவியத் ஒன்றியம் சிதறுண்டது போன்ற காரணங்களால் வியட்நாமுக்கும் சீனாவுக்கும் இடையிலான பகை ஒருவழியாக முடிவுக்கு வந்தது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT