Last Updated : 31 Jan, 2015 04:54 PM

 

Published : 31 Jan 2015 04:54 PM
Last Updated : 31 Jan 2015 04:54 PM

இவன் மாற மாட்டான்: குழந்தைகள் மனதில் என்ன விதைக்கிறோம்?

பசு மரத்து ஆணி போல் என்று நாம் சொல்வது உண்டு. அப்படிச் சொல்லக் காரணம் பசு மரத்தில் அரையப்படும் ஆணி பலமானதாக இருக்கும். எளிதில் ஆட்ட முடியாது, அசைக்க முடியாது. அதுபோல்தான் குழந்தைகள் மனமும். சிறிய வயதில் அவர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் விஷயம் நிச்சயமாக அவர்கள் சிந்தனைகளில், செயல்களில் பிரதிபலிக்கும்.

விதை விதைத்தால் விதை, வினை விதைத்தால் வினை. ஏற்கெனவே கார்ட்டூன் படங்களை குழந்தைகள் பார்ப்பது சரியா, தவறா என்ற சர்ச்சை நிலவி வருகிறது. பொதுவெளியில் ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. அது ஒரு புறம் இருக்கட்டும். மற்றொரு புறம் கார்ட்டூன் இடைவெளியில் ஒளிபரப்பபடும் விளம்பரங்கள்.

குழந்தைகளின் நுகர்பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு நன்றாகத் தெரியும் கார்ட்டூன் சேனல்களே தங்கள் டார்கெட் ஆடியன்ஸ் அதிகம் பார்ப்பது என்று. எனவே தான் அத்தகைய சேனல்களில் ஒளிபரப்ப சாக்லேட், நூடுல்ஸ், ஹெல்த் டிரிங், சூயிங் கம், பென்சில், பேனா, பொம்மை என விளம்பரங்களை தயாரித்து வெளியிடுகின்றன.

அண்மையில், யதேச்சையாக சிறுவர் சேனல் ஒன்றில் ஒளிபரப்பான ஒரு விளம்பரத்தை பார்க்க நேர்ந்தது. அந்த விளம்பரம் சிரிக்க வைக்கவில்லை மாறாக அதிர்ச்சியடைய வைத்தது.

இதுதான் அந்த விளம்பரத்தின் கருத்துச் சுருக்கம்...

டோலு என்ற இளைஞன், தன் வயிற்றுப் பிழைப்புக்காக பகல் முழுவதும் தெருத்தெருவாக “கத்தரிக்காய்.. வெண்டைக்காய்... உருளைக்கிழங்கு எல்லா காயும் இருக்கு.... " என ராகம் போட்டுக் கூவி கூவி காய்கறி விற்கிறான். இரவு நேரத்தில் தன் அறிவுத் தேடலுக்காக தெரு விளக்கில் அமர்ந்து படிக்கிறான். ஒரு நாள் அவனது கனவு நனவாகிறது. அவன் வழக்கறிஞராகிறான்.

அடுத்து விரிகிறது அந்த அபத்த காட்சி. டோலு வழக்கறிஞர் சூட் அணிந்து மிடுக்காக நீதிமன்றத்துக்குள் நுழைகிறான். நீதிபதி உட்பட சுற்றியிருக்கும் அனைவருக்கும் ஒரு ரியாக்‌ஷன் ஷாட். அந்த நேனோ நொடிகளில் அனைத்து கேரக்டர்களும் ஆச்சரியம், கேலி, எரிச்சல், நகைப்பு என பல்வேறு பாவனைகளை காட்டுகின்றன. கோப்புகளை மேஜையில் வைக்கும் டோலு வாதாட ஆரம்பிக்கிறான்... தன் வாதத்தை ஆரம்பிக்கிறான். (காய்கறிக்காரர் காய் விற்கும் தொணியில்) "ஐயா..சாட்சி இருக்கு.. ஆதாரம் இருக்கு.. எல்லாம் இருக்கு... இது கொலைதாங்க...".

அவன் ராகம் போட்டு வாதம் செய்வதைக் கேட்டு, நீதிமன்ற அரங்கமே சிரிப்பில் மூழ்குகிறது. டோலு திகைத்துப் போக ஒரு வாய்ஸ் ஓவர் "எது மாறினாலும், இவன் மாற மாட்டான், ஆனால் இது (டோரிமான் Flip card) மாறும்". அதாவது என்னதான் கல்வி கற்றாலும் காய்கறிக்காரன் காய்கறிக்காரன் என்பது இதன் சாரம்.

இதில் வருத்தம் என்னவென்றால், இந்த விளம்பரம் வரும்போதெல்லாம் என் மகள் (வயது 9) டோலுவைப் பார்த்துச் சிரிப்பதும், டோலுவைப்போல் ”சாட்சி இருக்கு...ஆதாரம் இருக்கு” என சொல்லிப் பார்ப்பதுமாக இருந்தாள். அது தவறு என எடுத்துக்கூறிய பின்னர் அவள் நிறுத்திக் கொண்டாள். ஏன் அப்படி சொல்லக்கூடாது என்று புரிந்ததா என்று தெரியவில்லை.

அனைவரும் கல்வி கற்க வேண்டும், கல்வி கற்ற சமுதாயம்தான் மேம்படும் என அறிஞர்கள் வலியுறுத்துவதும். அடிப்படைக் கல்வி உரிமைச் சட்டம் என அரசாங்கம் பல்வேறு திட்டங்களை உருவாக்குவதும் சமூக மேம்பாட்டிற்காகத்தான். கல்வி வாய்ப்பில்லாத குடும்பத்தில் இருந்து வரும் எவராயினும் கல்வி கற்றால் நிச்சயமாக அவர்கள் வாழ்வு மட்டுமல்லாமல் அவர்களது அடுத்த தலைமுறைகளும் முன்னேறும் என்பதே உண்மை.

ஆனால், அந்த உண்மையின் தன்மையையல்லவா கேலிப் பொருளாக்கியுள்ளது இந்த விளம்பரம். காட்சிகளுக்கு வலிமை அதிகம். எனவே இப்படிப்பட்ட காட்சிகள் நிச்சயம் ஊக்குவிக்கப்படக் கூடாது. காய்கறிக்காரன் கல்வி கற்றாலும் அவன் நிச்சயமாக தன் தொழில் புத்தியுடனே எல்லாவற்றையும் அணுகுவான் என்பது கண்டனத்துக்குரியது.

இந்த விளம்பரத்தை கோடிக்கணக்கான குழந்தைகள் பார்த்திருப்பார்கள். அவர்கள் என்ன நினைத்திருப்பார்கள்.? குழந்தைகள் மனதில் என்ன விதைக்கிறோம் நாம்?