Published : 24 Feb 2015 10:53 AM
Last Updated : 24 Feb 2015 10:53 AM

ஸ்டீவன் ஜாப்ஸ் 10

ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனரும், கம்ப்யூட்டர் துறையில் புரட்சியை உருவாக்கியவருமான ஸ்டீவன் பால் ஜாப்ஸ் (Steven Paul Jobs) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 24). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

 அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் பிறந்தவர் (1955). பல் கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த, திருமணமாகாத ஜோடிக் குப் பிறந்தவர். பால் ரெய்ன்ஹோல்ட் ஜாப்ஸ் கிளாரா தம்பதி இவரை தத்து எடுத்தனர். ‘நூறு சதவீதம் அவர்கள்தான் என் அப்பா, அம்மா’ என்று ஆணித்தரமாகக் கூறுவார் ஸ்டீவ் ஜாப்ஸ்.

 இவருக்கு 5 வயதாக இருந்தபோது குடும்பம் கலிபோர்னியாவுக்கு குடிபெயர்ந்தது. அப்பா மூலமாக எலக்ட்ரானிக்ஸ் துறையில் நாட்டம் ஏற்பட்டது. இவர் பள்ளி செல்லத் தொடங்கும் முன்பே எழுதப் படிக்கக் கற்றுத் தந்தார் அம்மா.

 பள்ளிப் படிப்பை முடித்தவர், பாதியிலேயே கல்லூரியில் இருந்து வெளியேறினார். எலக்ட்ரானிக்ஸ் சம்பந்தமான வேலைகளைச் செய்துவந்தார்.

 1974-ல் ஆன்மிக அமைதியை நாடி இந்தியா வந்தார். நீம் கரோலி பாபாவைத் தரிசிக்க, உத்தரப் பிரதேசம், கைஞ்சி ஆசிரமத்துக்குத் தன் நண்பர்களுடன் வந்தார். இந்தியாவில் 7 மாதங்கள் தங்கிப் பல இடங்களுக்கு சுற்றுப் பயணம் சென்றார். பாபாவைத் தன் ஆன்மிக குருவாக ஏற்றார். இதுவே அவர் புத்த மதத்தைத் தழுவக் காரணமாக இருந்தது.

 1976-ல் வீட்டிலேயே நண்பர்களுடன் இணைந்து ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தை தொடங்கினர். 1980-ல் ஆப்பிள் நிறுவனத்தின் மகின்டோஷ் (Macintosh) கணினியை அறிமுகம் செய்தார். கருத்து வேறுபாடுகளால் 1985-ல் ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து வெளியேறி நெக்ஸ்ட் (NeXT) கணினி நிறுவனத்தை தொடங்கினார்.

 கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் துறையில் சிறந்த நிபுணர்களைக் கொண்ட லூகாஸ் பிலிம் என்ற நிறுவனத்தை வாங்கினார். அந்த நிறுவனம் பிக்ஸர் என்ற பெயரில் அனிமேஷன் துறையில் மென்பொருள் தயாரிப்பு மற்றும் உயர்கணினித் தயாரிப்புகளில் ஈடுபடத் தொடங்கியது.

 1995-ல் முழு அனிமேஷன் திரைப்படம் உருவாக்கும் பணியை டிஸ்னி நிறுவனம் இவருக்கு வழங்கியது. ‘டாய் ஸ்டோரி’ என்ற அந்த முழு அனிமேஷன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. 1996-ல் நெக்ஸ்ட் நிறுவனத்தை ஆப்பிள் நிறுவனம் வாங்கியது. ஜாப்ஸ் மீண்டும் ஆப்பிளில் இணைந்தார். 1998-ல் இவர் வடிவமைத்து பல வண்ணங்களில் வெளிவந்த ஐ-மாக் கணினி மாபெரும் வெற்றி பெற்றது.

 தொடர்ந்து கணினியின் வேகத்தைக் கூட்டி வடிவமைப்பிலும் பல மாற்றங்கள், புதுமைகளைப் புகுத்தினார். இதைத் தொடர்ந்து ஐ-பாட், ஐ-ட்யுன்ஸ், ஐ-பேட் மினி ஆகியவையும் வெற்றி பெற்றன.

 அமெரிக்காவின் தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்டுபிடிப்புக்கான மிக உயர்ந்த பதக்கம் உட்பட ஏராளமான பரிசுகள், விருதுகளை வென்றுள்ளார்.

 வறுமை நிலையில் இருந்து கடும் உழைப்பாலும், மேதைமையாலும் மிக உயர்ந்த நிலைக்கு வந்த ஸ்டீவ் ஜாப்ஸ் 2011-ம் ஆண்டு 56 வயதில் மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x