Published : 23 Feb 2015 09:28 AM
Last Updated : 23 Feb 2015 09:28 AM
‘குவாந்தனாமோ’ என்ற பெயரை அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், ஒருபோதும் நல்ல விஷயமாக அல்ல. பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா, கைதுசெய்யப்பட்டவர்கள் அடைக்கப்பட்டிருக்கும் இடம் அது. இராக், ஆப்கானிஸ்தான், ஆப்பிரிக்க மற்றும் ஆசிய நாடுகளில் அமெரிக்கப் படைகளால் கைதுசெய்யப்பட்டவர்கள் குவாந்தனாமோ சிறையில் கடும் சித்திரவதைகளை அனுபவிப்பதாகப் புகார்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. 2011-ல் விக்கிலீக்ஸ் வெளியிட்ட குவாந்தனாமோ சிறை சித்திரவதையைப் பற்றிய செய்திகள் உலகை அதிரவைத்தன. ஜார்ஜ் புஷ் அதிபராக இருந்தபோது, குவாந்தனாமோ விரிகுடா பகுதியில் 2002-ல் திறக்கப்பட்ட சிறை இது. ஆனால், இது இருப்பது அமெரிக்காவின் அண்டை நாடான கியூபாவில். குவாந்தனாமோ என்றால், சிறை மட்டும்தான் பலருக்கும் நினைவுக்கு வரும். அமெரிக்காவின் மிகப் பழமையான கப்பல் படைத்தளம் இருப்பதும் இங்குதான். அமெரிக்க ஏகாதிபத்தியத்தைக் கடுமையாக எதிர்க்கும் கியூபா மண்ணில் இது எப்படிச் சாத்தியமானது? 112 ஆண்டுகால வரலாறு இது!
1903-ல் இதே நாளில், அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் இடையில் கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி, குவாந்தனாமோ விரிகுடா அமெரிக்காவுக்குக் குத்தகைக்கு விடப்பட்டது, 2,000 டாலருக்கு. அதாவது, அமெரிக்காவிடமிருந்து கியூபா சுதந்திரமடைந்து ஓராண்டுக்குப் பிறகு! (1934-க்குப் பிறகு, இந்தக் குத்தகைத் தொகை 4,085 டாலராக உயர்த்தப்பட்டது.) அதற்கு முன்னர், ஸ்பெயினின் காலனி நாடாக இருந்தது கியூபா. ஸ்பானிய-அமெரிக்கப் போரில் ஸ்பெயினை வென்று கியூபாவைத் தன் வசமாக்கியிருந்தது அமெரிக்கா. சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்ட கியூபாவின் முதல் அதிபர் தாமஸ் எஸ்ட்ராடா பால்மா, அமெரிக்காவுடன் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அமெரிக்காவின் அப்போதைய அதிபர் தியோடர் ரூஸ்வெல்ட்டுக்கு நெருக்கமாக இருந்தவர் இவர். கியூபா மண்ணில் அமெரிக்க நிறுவனங்கள் நுழைந்ததும் அப்போதுதான். பலம் வாய்ந்த அமெரிக்கா 5 கப்பல் படைத் தளங்களை அமைக்க இடம் கேட்டாலும், ஒன்றே ஒன்றை மட்டும் தர ஒப்புக்கொண்டார் எஸ்ட்ராடா பால்மா. அந்தக் காலகட்டத்தில் அதுவே பெரிய விஷயம் என்று கருதப்படுகிறது. ஸ்பெயினின் ஆதிக்கத்தால் கடும் பாதிப்பைச் சந்தித்திருந்த கியூபாவின் கல்வி, மருத்துவம் ஆகியவற்றில் பெரும் முன்னேற்றம் ஏற்பட வழிவகுத்தவர் இவர்.
ஆனால், இத்தனை ஆண்டுகளாகியும் குவாந்தனாமோ வளைகுடாவைத் தன் வசமே வைத்திருக்கிறது அமெரிக்கா. 1934-ல் கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி, இந்தக் குத்தகை நிரந்தரமாக்கப்பட்டது. அதாவது, இரண்டு நாடுகளும் இந்த ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ள முன்வந்தாலோ அல்லது அங்கிருந்து வெளியேற அமெரிக்காவே ஒப்புக்கொண்டாலோதான், குவாந்தனாமோ விரிகுடா கியூபாவின் கைக்கு வரும். சமீபத்தில் அமெரிக்கா-கியூபா உறவில் மாற்றம் வந்திருக்கும் நிலையில், குவாந்தனாமோ விரிகுடாவிலிருந்து அமெரிக்கா வெளியேற வேண்டும் என்று கியூபா அதிபர் ரவுல் கேஸ்ட்ரோ வலியுறுத்தியிருப்பது குறிப்பிடத் தக்கது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT