Published : 18 Feb 2015 10:35 AM
Last Updated : 18 Feb 2015 10:35 AM

குருதி ஆட்டம் 23 - பசிச்ச மிருகம்!

“ஊர் நிலவரம் என்ன?” என ஒற்றைக் கேள்வியை அரியநாச்சி கேட்டதுதான் தாமதம். இருபது வருட இடைவெளியில் நடந்த எல்லாவற்றையும் கொட்டித் தீர்த்தான் தவசியாண்டி. குறுக்கே புகுந்து எதிர்கேள்வி போடாமல் உற்றுக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

வாய் வரள அடுக்கிக் கொண்டு போன தவசியாண்டி, வெள்ளையம்மா வின் பேச்சுக்குள் நுழைந்ததும் அரிய நாச்சியின் கண்கள் குத்திட்டு நின்றன.

“என்ன சொல்றே தவசி?” குறுக் கிட்டாள்.

“ஆமாம் தாயி! வெள்ளையம்மா ஆத்தா, இப்போ இங்கே இல்லை!”

“அப்போ… உடையப்பனோட வாரிசு?” கண்களைச் சுருக்கி கேட்டாள்.

“ஆறு மாதக் குழந்தையா இருந்த அந்த வாரிசைத் தூக்கிக்கிட்டு, கண் காணாத தேசத்துக்கு கிழவி போயிட்டாக.”

“ஆண் குழந்தைதானே?”

“ஆமாம் தாயி!”

“வெள்ளையம்மா அத்தை ஏன் ஊரை விட்டு வெளியேறணும்?”

தவசியாண்டி, தன் வலது கைவாக் கில் அமர்ந்து உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் துரைசிங்கத்தை ஏறிட்டுப் பார்த்தான்.

மகள் செவ்வந்தி எதிலும் ஒட்டாமல் வாசலில் தனியே அமர்ந்து, காட்டு வெளிச்சத்தைக் கண் அளந்து கொண்டிருந்தாள்.

“ம்… சொல்லு தவசி!”

“தாயி… உங்க அத்தை வெள்ளை யம்மா கிழவிக்கு, தன் மகள் பொம்மியைப் பறிகொடுத்த கவலை. புதுப் பணக்காரன் உடையப்பனுக்கு, பொண்டாட்டி செத்த கவலை துளியும் இல்லை. ஓட்டுக் கொட்டகையிலே குடி இருந்தவனுக்கு, திடீர்னு அரண் மனை வாசம் கிடைச்சதும் அர்த்த ராத்திரியிலே குடைப் பிடிக்க ஆரம் பிச்சுட்டான். புத்தி, நிலை கொள்ளல. குடியும் கூத்தியாளுமா… ஆண்ட வனுக்கே பொறுக்காத ஆட்டம்! பெத்தவன் மூச்சுக் காத்து, பிள்ளை மேலப் படக்கூடாதுன்னு, பேரனைத் தூக்கிக்கிட்டுப் போன கிழவி, இந்தத் திசைப் பக்கமே திரும்பல!”

பேச்சை நிறுத்தியவன், தலை கவிழ்ந்தவாறு ஏதோ சிந்தனையில் இருந்தான்.

“என்ன யோசனை தவசி?” என்றாள் அரியநாச்சி.

“அது வேற ஒண்ணுமில்ல தாயி! நம்ம ரணசிங்கம் அய்யா… செத்தது, தகப்பன் செத்ததைக் கண்டதும் துரை சிங்கம் ஊமையானது, உடையப்பன் பெஞ்சாதி பொம்மி ஆத்தா, ஒரு ஆம்பளை பிள்ளையைப் பெத்தது, பெத்துப் போட்டதும் பொம்மி செத்தது… இந்த நாலு காரியமும் நொடி பிசகாமல், ஒரே நேரத்திலே நடந்ததை நெனச்சா… ஆச்சர்யமா இருக்கு தாயி!” என்றான்.

அரியநாச்சி, கண்களை மூடினாள்.

“அந்தக் காலத்திலதான் சொல்லுவாக தாயி. புருசன் செத்தா பொண்டாட்டி உடன்கட்டை ஏறுவாள்னு! நம்ம ரணசிங்கம் அய்யா சாவுக்கும் அந்த துரோகிப் பயல் உடையப்பன் பொஞ்சாதி பொம்மி ஆத்தா சாவுக்கும் ஏதோ ஒரு அந்தரங்க முடிச்சு இருக்கிற மாதிரி தெரியுதே!” என்றவன் அடிக்கண்ணால் அரியநாச்சியைக் கோதினான்.

வெடுக்கென விழித்தவள், தவசி யாண்டியைக் கடிந்து பார்த்தாள். திரேகம் ஆடிப் போனான்.

“பெருநாழி முதலாளி உயிரோடு இருக்கிறானா?”

“அவன் எப்படி சாவான்? எமனே சொல்லிட்டான்… ‘பெருநாழி முதலாளியை நான் கொல்ல மாட்டேன். அது உங்க பொறுப்பு’ன்னு.”

அரியநாச்சி வாய் விட்டு எண்ணினாள். “ஒண்ணு, ரெண்டு…” நிறுத்தியவள், “மூணாவதும் எனக்கு வேணும் தவசி?” என்றாள்.

தவசியாண்டி புரியாமல் விழித்தான்.

“உடையப்பன் வாரிசும் எனக்கு வேணும்.”

துரைசிங்கம் குறுகுறுவென பார்த் தான்.

“பெத்தது பொம்மின்னாலும் பிறந் தது, உடையப்பனுக்கு. அவன், உடை யப்பனின் வாரிசு. உடையப்பனையும் உடையப்பனைச் சேர்ந்த புல்லு, பூண்டு எல்லாத்தையும் பொசுக்கணும். எல்லாத்துக்கும் மேலே, பெருநாழி முதலாளி! அவனை, உடனடியா கொல்லக் கூடாது. துள்ளத் துடிக்கக் கொல்லணும். பசிச்ச மிருகம், பாவம், புண்ணியம் பார்க்கக் கூடாது.” அரியநாச்சிக்கு இருட்டிலும் வியர்த்தது.

“அப்போ… நாளை காலையிலே நான்…” உத்தரவு கேட்டான் தவசியாண்டி.

“கோயில் பூசாரியாக நீ ஊருக்குள் போ. நானும் துரைசிங்கமும் கணக்கு முடிக்க வந்து சேர்வோம்.”

வாசலில் அமர்ந்திருந்த செவ்வந்தி, வானத்து விண்மீன்களை எண்ணி எண்ணி தோற்றுக் கொண்டிருந்தாள்.

சென்னைப் பட்டணத்து மொட்டை மாடியில் அமர்ந்து, விண்மீன்களை எண்ணி எண்ணி தோற்றுக் கொண்டிருந் தான் கஜேந்திரன்.

உறக்கம் வராத இரவுகளில், கண்ணை மூடிக்கொண்டு, ‘ஒண்ணு… ரெண்டு… மூணு…’ என எண்ணிக்கொண்டே இருந்தால் தூங்கிவிடலாம் என்பது ஒரு நம்பிக்கை. ம்ஹூம்... எண்ணி யும் மாளவில்லை; உறங்கியபாடும் இல்லை.

பாட்டி வெள்ளையம்மா கிழவியை ரயில் ஏற்றிவிட்ட நேற்றைய இரவு, எல்லா இரவுகளையும் போல் இருட்டி, விடிந்திருந்தது. ஆனால், இந்த இரண்டாம் இரவு, துளி தூக்கம் இல்லாமல் அலைக் கழிக்கிறது. இனம் புரியாத ஏதோ ஒன்றை மனம் நாடுகிறது. உருவமற்று கிளுகிளுப்பூட்டுகிறது.

இருபது வருடங்களில், கிழவி, ஒரு நாளும் தன்னை பிரிந்து போனதில்லை. பாட்டியைத் தவிர வேறு உறவு யாருமற்ற வன் கஜேந்திரன். ஈன்று போட்டதும் இறந்து போன தாயாரின் பெயர், ‘பொம்மி’ என அறிவான். தகப்பன் ‘எவன்’என, கிழவி சொன்னதே இல்லை.

பெற்றவன் மூச்சுக் காற்று பிள்ளையின் சுவாசத்தை தீண்ட இயலாத தூரத்துக்கு தூக்கி வந்து வளர்த்து ஆளாக்கியவள். பிறப்புக்கும் இருப்புக்குமான பெரிய இடைவெளியைத் திட்டமிட்டே உருவாக்கியவள். விரும்பிய திசைகளில் சிறகு விரிக்க அனுமதித்தவள்.

‘மலை இடுக்கு சுனை நீராய் குளிரும் பாட்டியின் அன்பையும் பின் தள்ளி, மனசை நனைக்கிறதே… அது என்ன? காதலா?’

‘ஆம்’ என்றால், காதலி? இதுவரை எவளும் இல்லையே! இருப்பாளேயா னால், அவளுக்கு என் பரிசு… என் படைப்புகள் எல்லாம். என் தூரிகை வரைந்த ஓவியங்கள் எல்லாம்.’

புரண்டு படுத்தவன், மறுபடியும் வானத்து விண்மீன்களை எண்ணக் கிளம்பினான்.

- குருதி பெருகும்…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: irulappasamy21@gmail.com



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x