Published : 26 Feb 2015 09:39 AM
Last Updated : 26 Feb 2015 09:39 AM
ஒரேயொரு சிறிய வீட்டை வைத்துக் கொண்டு எட்டு பிள்ளைகளைப் பெற்றுவிட்ட தன் அப்பா மீது இனம்புரியாத கோபம் கோபாலுக்கு.
பொதுச் சொத்தாய் இருந்த பூர்வீக வீட்டை விற்று கிடைத்த பணத்தை தன் சகோதர, சகோதரிகள் ஏழு பேருடன் பங்கு பிரித்ததில் கோபாலுக்கு இரண்டு லட்சம் ரூபாய்தான் கிடைத்தது.
தன் நண்பன் சுரேஷை நினைத்துப் பார்த்தான்…
‘சுரேஷ் ஒரே பிள்ளை என்பதால் வெகு சுலபமாக எந்த முயற்சியும் இன்றி தன் அப்பாவின் எழுபது லட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கு அதிபதியாகிவிட்டான். நான்? ஒரு சிறிய ஃபிளாட் வாங்குவதற்கு லோன் வாங்கி இன்னும் வட்டிதான் கட்டிக் கொண்டிருக்கிறேன்…’ யோசிக்க யோசிக்க மனம் களைத்துப் போனது கோபாலுக்கு.
மறுநாள் தற்செயலாய் ரோட்டில் சுரேஷைச் சந்தித்தான்.
“சுரேஷ்! பிறந்தா உன்னை மாதிரி ஒரே பிள்ளையா பிறக்கணும்டா. அப்பாவோட சொத்து முழுவதும் கிடைக்கும். என்னைப் பாரு. கூடப் பிறந்த ஏழு பேருக்கும் சொத்தைப் பிரிச்சதுல என் பங்கு வெறும் 2 லட்சம் ரூபாய். நிஜமா சொன்னா உன் மேலே எனக்குப் பொறாமையாக் கூட இருக்கு” என்று பெருமூச்சு விட்டபடி சொன்னான்.
“அடப்போடா... உனக்கு ஏதாவது ஒண்ணுன்னா கூடப் பிறந்தவங்க ஏழு பேர் வந்து நிற்பாங்க. ஆனா எனக்கு? என் குழந்தைகளுக்கு சித்தி, அத்தை, சித்தப்பா, பெரியப்பான்னு எந்த உறவுமே கிடையாது. ஒரு பிறந்த நாள்னாகூட நாங்களே கேக் வெட்டி நாங்களே சாப்பிட்டுக்கறோம்.
ஆனா ஒரு சின்ன நிகழ்ச்சியைக்கூட உன்னோட அண்ணன் தங்கைன்னு ரொம்ப சந்தோஷமா கொண்டாடுறீங்க. எல்லாத்துக்கும் மேலே எனக்காக வந்து பேச ஆளில்லைன்னு யார் யாரோ சண்டை சச்சரவுக்கு வர்றாங்க.
பணம் காசு இல்லேன்னா என்னடா, உங்க அப்பா உனக்கு சொந்த பந்தம்ங்கிற பெரிய சொத்தை சேர்த்து வெச்சிருக்கிறார். நிஜமாலுமே உன்னைப் பார்த்தாதான் எனக்குப் பொறாமையா இருக்கு” என்று சுரேஷ் கூறினான்.
தன் அப்பா மீதிருந்த கோபம் மெல்ல மெல்ல கரையத் தொடங்கியிருந்தது கோபாலிடம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT