

அமெரிக்காவைச் சேர்ந்த உயிரியல் விஞ்ஞானி ஜான் பிராங்க்ளின் எண்டர்ஸ் (John Franklin Enders) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 10). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
அமெரிக்காவில் பிறந்தவர். தந்தை ஒரு வங்கியாளர். நோவா வெப்ஸ்டர் பள்ளி யிலும், நியூ ஹாம்ஷையரில் உள்ள செயின்ட் பால் பள்ளி யிலும் படித்தார். 1915ல் யேல் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். இரண்டே வருடங்களில் படிப்பை நிறுத்திவிட்டு அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்தார்.
முதல் உலகப் போருக்குப் பின் மீண்டும் யேல் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, 1920-ல் பட்டம் பெற்றார். பிறகு ரியல் எஸ்டேட் பிசினஸில் இறங்கினார். அதில் திருப்தி ஏற்படவில்லை. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, ஆங்கில ஆசிரியராக மாறும் நோக்கத்துடன் நான்கு வருடங்கள் ஆங்கில இலக்கியம் பயின்றார்.
அந்தத் தொழிலிலும் அவருக்கு நாட்டம் ஏற்படவில்லை. பாக்டீரியாலஜி மற்றும் நோய்த் தடுப்பியல் படிப்பில் பிஹெச்.டி. மாணவராகச் சேர்ந்தார்.
1930-ல் பாக்டீரியாக்களால் ஏற்படும் நோய்கள் குறித்த ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். இந்தக் காலகட்டத்தில் பாக்டீரியாக்களின் வீரியத்தன்மை மற்றும் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியின் ஆற்றல் குறித்த சில காரணிகளை ஆராய்ந்தார்.
1938-ல் தன் குழுவினருடன் இணைந்து பொன்னுக்கு வீங்கி அம்மை நோயை உண்டாக்கும் வைரஸ் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதைக் குணப்படுத்தும் நோய் எதிர்ப்புச் சக்தி மருந்தையும் கண்டறிந்தார். இரண்டாம் உலகப்போரின்போது அமெரிக்க ராணுவத்தின் தொற்று நோய்களுக்கான பிரிவில் ஆலோசகராகப் பணியாற்றினார்.
1946-ல் பாஸ்டனில் உள்ள குழந்தைகள் மருத்துவ மையத்தில் தொற்று நோய்கள் குறித்து ஆய்வு செய்யும் ஒரு ஆய்வகத்தை நிறுவுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். மனிதனுக்கு வைரஸ் கிருமிகளால் ஏற்படும் நோய்கள் குறித்து இவரது வழிகாட்டுதலின் கீழ் மிகச் சிறந்த முறையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
போலியோ தடுப்பு மருந்து தயாரிப்புக்குக் காரணமாக அமைந்த புதிய, ஆபத்து இல்லாத முறையிலான போலி யோமை யெலிட்டிஸ் (poliomyelitis) வைரஸ்கள் உற்பத்திக் கான ஆய்வுகளுக்காக டி.ஹெச்.வெல்லர் மற்றும் எஃப்.சி.ராபின்ஸ் இருவருடன் இணைந்து இவருக்கு 1954-ம் ஆண்டுக்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இவர்களது ஆராய்ச்சி மூலம் விஞ்ஞானிகளால் போலியோ வைரஸ்களை அதிக அளவில் உற்பத்தி செய்ய முடிந்தது. இந்த ஆராய்ச்சி முறை, போலியோ மருந்து தயாரிப்புக்கு மட்டுமல்லாமல், பிற வைரஸ்களைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ள உதவியது. 70-வது வயதில் அதிகாரபூர்வமாகப் பதவி ஓய்வு பெற்றார்.
மேலும் பத்து ஆண்டுகள் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் கற்பித்துவந்தார். குழந்தைகள் மருத்துவமனையில் தனது ஆராய்ச்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டார்.
நோபல் பரிசு தவிர, ராபர்ட் காச் பரிசு (Robert KochPrize) பிரசிடென்ஷியல் மெடல் ஆஃப் ஃப்ரீடம் உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார். வைரஸ்கள் குறித்த ஆராய்ச்சிக் களத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி, மனிதகுலத்துக்கு மகத்தான சேவை புரிந்த ஜான் பிராங்க்ளின் எண்டர்ஸ் 88 வயதில் மறைந்தார்.