Published : 11 Feb 2015 10:06 AM
Last Updated : 11 Feb 2015 10:06 AM
“மாமா! வாக்கிங் போய்ட்டு வர்றப்போ பாலும், காய்கறியும் வாங்கிட்டு வந்துடுங்களேன்!” லட்சுமி தன் மாமனார் சிவராமனிடம் சொன்னாள்.
“சரிம்மா!” என்றபடி வீட்டி லிருந்து இறங்கிய சிவராமனுக் குள் அந்த எண்ணம் மெலிதாக எட்டிப் பார்த்தது.
‘பாலும் காய்கறியும் வாங்கி வரச் சொன்னவள் பணம் தரவேண்டாமா? என் பென்ஷன் பணம் கண்ணை உறுத்துதோ?’ -யோசித்தபடி நடந்தவர், நடைப் பயிற்சியை முடித்துவிட்டு, பால் மற்றும் காய்கறிகளை வாங்கிக் கொண்டு வந்தார்.
வீட்டு காம்பவுண்டுக்குள் நுழையும்போதே தன் மகன் ஆனந்த், கடுமையான குரலில் லட்சுமியிடம் பேசுவது கேட்டது. தோட்டத்துச் செடிகளை வேடிக்கைப் பார்ப்பது போல வாசல் பக்கமே நின்றுவிட்டார் சிவராமன்.
“லட்சுமி, நீ பாட்டுக்கு அப் பாவை கடைக்கு அனுப்பினியே... பணம் கொடுத்தியா?”
“கொடுக்கலை. மாமாவோட பணத்துலயே வாங்கிட்டு வரட்டுமே...” பதில் சொன்னாள் லட்சுமி.
“ஏன்... நான் வாங்குற எழுபதாயிரம் ரூபாய் குடும்பத் துக்குப் போதலையா? தன்னோட மருந்து மாத்திரை செலவுக்கு நம்மகிட்டேயா அப்பா பணம் கேட்கிறார்?” - ஆனந்தின் குரலில் கோபம் தெரிந்தது.
“அய்யோ அதுக்கில்லீங்க... அத்தை உயிரோட இருந்த வரைக்கும் மாமாவுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனா இப்போ வீட்டுச் செலவை எல்லாம் நீங்களே பார்க்கிறதால என்கிட்டே ஒரு காபி கேக்கிறதுக்குக்கூட மாமா சங்கோஜப் படறார். சுயமரி யாதையா வாழ்ந்தவர்.
இப்போ குடும்பத்துக்கு தானும் செலவு பண்றோமேன்னு எதையும் உரிமையா கேட்பார். மாமாவோட மருந்து மாத்திரையெல்லாம் இனி நாம வாங்கிக் கொடுப்போம். அவங்க அவங்க செலவை அவங்க அவங்களே பாத்துக்கிறதா குடும்பம்? ஒருத்தருக்கொருத்தர் பகிர்ந்துக்கிறதுதானே குடும்பம்..”
மருமகள் லட்சுமி சொல்வதைக் கேட்டு ஆனந்தின் குரலும் அடங்கி யிருக்க, மனநிறைவேரடு வீட்டுக் குள் சென்றார் சிவராமன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT