Published : 09 Feb 2015 11:27 AM
Last Updated : 09 Feb 2015 11:27 AM
வேதியியல் தேர்வில் 1 மதிப் பெண் கேள்விகள் 30. அனைத்துக்கும் பதிலளிக்க வேண்டும். 3 மதிப்பெண் கேள்விகள் 21. அதில் 15 வினாக்களுக்கு பதிலளிக்க வேண்டும். 5 மதிப்பெண் கேள்விகள் 12. அதில் 7 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். சில கட்டுப்பாடுகள் உண்டு. அதாவது, இந்த 12 வினாக்களும் தலா 4 கேள்விகளைக் கொண்ட 3 பிரிவு களாக பிரிக்கப்பட்டிருக்கும். இந்த ஒவ்வொரு பிரிவிலும் இருந்து குறைந் தது 2 கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும்.
கடைசியாக 10 மதிப்பெண் கேள்வி கள் 6. இதில் 3 கேள்விகளுக்குப் பதில் அளித்தால் போதும்.
தேர்வுக்குத் தயாராவது எப்படி?
ஒவ்வொரு பாடத்திற்கும் பின்னால் இருக்கும் கேள்விகளை மட்டும் படித்தாலே, பாஸ் மார்க் வாங்கி விடலாம். காரணம், இந்தக் கேள்விகளில் இருந்தே தேர்வுக்கு 60 சதவீதம் கேள்விகள் கேட்கப்பட வேண்டும் என்று விதியிருக்கிறது. உதாரண மாக, ஒரு மதிப்பெண் கேள்வியைப் பொருத்தவரையில் மொத்தமுள்ள 30 கேள்விகளில், 20 முதல் 22 கேள்விகள் இவ்வாறுதான் கேட்கப்படுகின்றன.
நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்றால் 2006-ம் ஆண்டு முதல் 2014 வரை நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வு கேள்வித்தாள்களில் வந்த கேள்விகளையும் படிக்க வேண்டியது அவசியம். சில எளிய ஐடியாக்களை மனத்தில் வைத்துக் கொள்வது சவால் களை எளிமையாக்கும். உதாரணமாக, ஆக்சினைடுகளின் (அயனிகளின்) நிறங்கள் குறித்த கேள்வி குழப்பம் தரலாம். அதற்கு சாலையில் உள்ள சிக்னல் விளக்கை ஞாபகம் வைத்துக் கொள்ளலாம். U3+ பிளஸ் அயனியின் நிறம் என்ன? என்று கேட்டால், சிக்னல் விளக்கில் 3 எழுத்துள்ள நிறம் எது என்று யோசித்து (RED) சிகப்பு என்று விடை எழுதலாம்.
UO என்ற கேள்விக்கு சிக்னல் விளக்குகளில் ‘ஓ’ என்ற எழுத்து வரும் ஒரே நிறம் ‘யெல்லோ’ என்பதால், மஞ்சள் என்று விடை தரலாம். எஞ்சியிருக்கும், U 4 பிளஸ் அயனியின் நிறம் பச்சை.
சமன்பாடுகளை விரைவாக எழுத வும், அதனை பூர்த்தி செய்யவும் சில எண்களை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக சில்வர் அல்லது காப்பர், நீர்த்த நைட்ரிக் அமிலத்துடன் இணை என்று கேள்வி வந்தால், காப்பருக்கு 3, 8 என்றும், சில்வருக்கு 3, 4 என்றும் எண்களை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். அதுதான் சமன்பாட்டின் இடதுபுறத் தையும், வலது புறத்தையும் சமப்படுத்த ரொம்பவே உதவியாக இருக்கும்.
ஒரு மதிப்பெண் கேள்விகளைப் பொருத்தவரையில், தொகுதி 1 புத்தகத் தில் இருந்து 15 கேள்விகளும், தொகுதி 2-ல் இருந்து 15 கேள்விகளும் வரும். 2-வது தொகுதியில் மொத்தம் 12 பாடங்கள் உண்டு. இதில், 14, 15, 22 ஆகிய பாடங்களில் இருந்து ஒரு வினா கூட கேட்கப்படாது. அதேபோல 11, 13, 16, 18, 19 ஆகிய பாடங்களில் இருந்து தலா 1 கேள்வி தான் வரும். எனவே, புக் மார்க் (பாடத்திற்கு பின்னால் உள்ள) வினாக்களை மட்டும் படித்தாலே போதும்.
அதே நேரத்தில் 12, 17, 20, 21 ஆகிய 4 பாடங்களை மட்டும் முழுமையாக படிப்பது அவசியம். காரணம், இந்த 4 பாடங்களில் இருந்து மட்டும் 12 கேள்விகள் கேட்கப்படுகின்றன. இந்த முறைகளை பின்பற்றினால் ஒரு மதிப் பெண் வினாக்களில் 30-க்கு 30 எடுத்து விடலாம். அடுத்து 3 மதிப்பெண் கேள்விகள்.
வேதியியல் பாடத்தில் கனிம வேதியியல், இயற்பியல் வேதியியல், கரிம வேதியியல் என்று முப்பெரும் பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவில் இருந்தும் 7 வினாக்கள் கேட்கப்படுகிறது. 21-ல் 15 கேள்விகளுக்கு பதில் அளித் தால் போதும் என்பதால், கரிம வேதி யியல் பாடத்தில் இருந்து ஒரே ஒரு கேள்வி தானே என்று நினைப்பீர்கள். ஆனால், அந்தப் பாடத்தைப் படிக்காத வர்கள் கட்டாயமாக அந்த ஒற்றைக் கேள்வியில் மதிப்பெண்ணை இழப் பார்கள்.
இதனை தவிர்க்க எளிய வழி இருக் கிறது. இதுவரை வந்த பொதுத் தேர்வு வினாக்களை படித்துவிடுங்கள். அதிலிருந்துதான் அதிக கேள்விகள் கேட்கப்படும் 3, 4, 11, 16-ம் பாடங் களை நன்றாக படிக்க வேண்டும். அதைப்போல, 15, 22 ஆகிய பாடங் கள் மிகவும் சிறிய பாடங்கள். அதை யும் படித்துவிட்டால், நிச்சயமாக 2 கேள் விகளுக்குப் பதில் அளிக்க முடியும்.
5 மதிப்பெண் கேள்விகள்
5 மதிப்பெண் கேள்விகளைப் பொருத்தவரையில் ஏற்கெனவே சொன்னபடி, 3 பிரிவுகளாக கேள்விகள் வரும். ‘ஏ’ பிரிவில் 1, 4, 5, 6 ஆகிய 4 பாடங்களில் இருந்து தலா 1 கேள்வி கேட்கப்படும். ‘பி’ பிரிவில் 9, 10, 11, 14 ஆகிய பாடங்களில் இருந்தும், ‘சி’பிரிவில் 17, 18, 19, 22 ஆகிய பாடங்களில் இருந்தும் தலா 1 கேள்வி கேட்கப்படும்.
வினை வழிமுறைகள் பற்றிய கேள்வி உறுதியாக வரும். 18, 19ம் பாடங்களில் மொத்தம் 6 வினை வழிமுறைகள் தான் உள்ளன. அதில் இருந்து 1 வினை வழிமுறை கட்டாயமாக வந்துவிடும். எனவே, இதனை கவனமாக படியுங்கள். இதில், அம்புக்குறிகள், பிளஸ், மைனஸ் என்று நிறைய குறிகள் வரும். அவற்றை எல்லாம் மிகச் சரியாக எழுதுவது அவசியம். இதில் ஏதாவது சந்தேகம் வந்தால் இந்தக் கேள்வியை தவிர்த்துவிட்டு வேறு எளிதான கேள்விக்குப் போய்விடுங்கள்.
கடைசியாக 10 மதிப்பெண் கேள்வி. ஒவ்வொரு கேள்வியும் ஏ, பி என்று இரண்டாக பிரிக்கப்பட்டிருக்கும். ஒரு கேள்வியை தேர்வு செய்தால் இரண்டு உட்கேள்விகளுக்கும் பதில் அளித்தே தீர வேண்டும். விதிப்படி, 64-வது கேள்வி 2, 3-ம் பாடத்தில் இருந்து தேர்வு செய்யப்படுகிறது. அதாவது 64-ஏ 2-ம் பாடத்தில் இருந்தும், 64-பி 3-ம் பாடத்தில் இருந்தும் இடம்பெறும். அதேபோல 65-வது கேள்வி 6, 7-ம் பாடங்களில் இருந்தும், 66-வது கேள்வி 8, 12-ம் பாடங்களில் இருந்தும், 67 கேள்வி 11, 14-ம் பாடங்களில் இருந்தும், 68-வது கேள்வி 15, 19 பாடங்களில் இருந்தும், 69-வது கேள்வி 20, 21 பாடங்களில் இருந்தும் கேட்கப்படுகின்றன. 10 மதிப்பெண் வாங்க நினைப்பவர்கள், இங்கே ஜோடி ஜோடியாக குறிப்பிட்டுள்ள இரு பாடங்களையும் படிக்க வேண்டும். ஜோடியில் ஒரு பாடத்தை விட்டுவிட்டு, ஒரு பாடத்தை மட்டும் படித்தால் 10க்கு 10 வாங்கவே முடியாது.
வேதியியல் வினாத்தாளின் கடைசி கேள்வி 70-வது கேள்வி. இது கட்டாயம் பதிலளிக்க வேண்டிய கேள்வி. ஆனால், 70 ‘ஏ மற்றும் பி’ அல்லது ‘பி மற்றும் சி’க்கு பதில் அளித்தால் போதும் என்ற சலுகை உண்டு. ஏ கேள்வி 16-ம் பாடத்தில் இருந்தும், பி கேள்வி 4-ம் பாடத்தில் இருந்தும் இடம்பெறும். அதேபோலவே சி கேள்வி 18-ம் பாடத்தில் இருந்தும், டி கேள்வி 13-ம் பாடத்தில் இருந்தும் கேட்கப்படும். இந்த நுட்பங்களை எல்லாம் அறிந்து படிப்பது, 200க்கு 200 பெற நிச்சயமாக உதவும்.
ஆர். அழகப்பன்,வேதியியல் பாடத்தில் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர், மதுரை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT