

ஜெயகாந்தன் அவ்வப்போது சொன்ன சில வார்த்தைகள் என் நினைவில் தோரணம் கட்டி நிற்கின்றன.
ஜெயகாந்தன் ஒரு கம்யூனிஸ்ட்டாக மட்டுமே அறியப்பட்டிருந்த ஆரம்பக் காலங்களில், வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியின் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கு வந்திருந்தார். அப்போது அந்தக் கல்லூரியில், இந்தக் காலத்தில் நமக்கெல்லம் காணக்கிடைக்காத ஒரு கெமிஸ்ட்ரி பேராசிரியர் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவரது பெயர் ராமானுஜம்.
கூட்டம் முடிந்து, மேடையிறங்கி ஜெயகாந்தன் தனது வாகனத்துக்கு நடந்து செல்லும் வழியில், ராமானுஜம் ஜெயகாந்தனை அணுகி, ‘‘நீங்கள் உங்களை ஒரு கம்யூனிஸ்ட்டாகச் சொல்லிக் கொள்கிறீர்கள். ஆனால், உங்களுடைய பேச்சு ஒரு ரிலீஜியஸ் பெர்சன் (Relgious Person) போலக் காட்டுகிறதே’’ என்று கேட்டார்.
அதற்கு ஜெயகாந்தன் நடந்து கொண்டே ‘‘Communism itself is a Religion’’ (கம்யூனிஸமே ஒரு வகையில் மதம்தான்) என்று பதில் சொன்னார்.
ஏதோ ஒரு கோயிலுக்குச் சென் றோம். கோயிலின் உள்ளே டியூப் லைட்டுகளுக்கு அடியிலேயும், ஒவ் வொரு சந்நிதியின் ஒவ்வொரு இரும்பு கேட்டிலும், கடைசியில் கடவுளுக்குக் காணிக்கை செலுத்துகிற உண்டியலின் வயிற்றிலும் உபயதாரர்களின் பெயர் கள் கண்ணைக் குத்துகிற மாதிரி ஜொலிப்பதைக் கண்ட ஜெயகாந்தன், ‘‘செருப்பு அணிந்து கோயிலுக்கு உள்ளே வரக்கூடாது’’ என்று போர்டு வைப்பது போல், ‘‘செருப்பும் பணமும் உள்ளே வரக் கூடாது’’ என்று கோயில்களுக்கு வெளியே போர்டு வைக்க வேண்டும் என்றார்.
செருப்பும், பணமும், பதவியும் உள்ளே வரக் கூடது என்று நாம் இப்போது இன்னும் கொஞ்சம் அதனை விஸ்தரித்துக் கொள்ளலாம்.
இன்னொரு முறை இன்னொரு வாக்கியம் கூறினார்:
‘‘Respectable angels are raped by condemned devils’’ இதனை நான் தமிழில் ‘மரியாதைக்குரிய தேவதைகள் கழிசடைக் சைத்தான்களால் கற்பழிக்கப் படுகின்றனர்!’ என்று மொழிபெயர்த்துக் கொண்டேன்.
நான் என் வாழ்வில் கண்ட பல சம்பவங்கள், அந்த வாக்கியத்தைக் கிட்டத்தட்ட ஒரு சரியான சமூக விஞ்ஞானப் படப்பிடிப்பாக மாற்றி விட்டிருக்கின்றன. நாம் எல்லாம் கண்ணீர் உகுக்கும் அந்தக் கட்டத்துக்குப் பிறகு, அந்த சைத்தான்கள் எல்லாம் தேவர்களாக மாறிவிடுவதைக் காண்ப தும், எழுதுவதும் எவ்வளவு கடின மான காரியம்! ‘வெங்கு' மாமாவின் பாத்திரத்தைச் சித்தரிப்பதில் ஜெயகாந்தன் இதில் வெற்றி கண்டார்.
ஒருமுறை மல்லியம் ராஜகோபாலிடம் சென்று நெடுநேரம் பேசிக் கொண்டி ருந்தோம். அப்போது அவர், ‘சவாலே சமாளி’ என்கிற திரைப்படத்தை எடுத்து பிரபல மான டைரக்டராக இருந்தார். ஜெயகாந்தனிடமும் ஏற்கெனவே அவர் அறிந்திருந்த என்னிடமும் அன்பாகப் பழகிப் பேசினார்.
அவரிடம் விடைபெற்றுப் புறப்பட்டுக் காரில் வரும்பொது, ஜெயகாந்தன் காரோட்டிக் கொண்டே கேட்டார்:
‘‘நல்லவன் இல்லே..?’’
நான் அதற்கு இயல்பாக, ‘‘யார்தான் நல்லவர் இல்லை… ஜே.கே!’’ என்று பதிலளித்தேன்.
என்னுடைய பதில் அவரை மேலும் உற்சாகப்படுத்தியது போலும். வாய் விட்டுச் சிரித்தார். எதையோ சட்டென்று கண்டுகொண்டவர் போல் சொன்னார்:
‘‘ஆமாம்… ஆமாம்! நாம் நல்லவர் களாக இருந்தால் யார்தான் நல்லவர் இல்லை!’’
என்னிடம் நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தின் பாசுரங்களைச் சொல்லச் சொல்லி அவ்வப்போது கேட்பார்.
‘ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்
தேனார் பூஞ்சோலைத் திருவேங்கடச் சுனையில்
மீனாய்ப் பிறக்கின்ற விதியுடையேன் ஆவேனே!’
- என்கிற பாசுரத்தைச் சொன்னேன்.
‘‘இப்போதெல்லாம் அப்படிப் பிறந் தால், கீழ்த் திருப்பதி மிலிட்டரி ஹோட் டலில் ‘ஃபிரைடு பிஷ்’ ஆகப் போட்டு விடுவான்!’’ என்று ஜோக் அடித்தார்.
எனக்கு அடுத்த தம்பியாக இருந்த பழனிசாமியைப் பற்றி அவ்வப்போது ஜெயகாந்தனிடம் கூறுவேன்.
அவனுக்குப் பள்ளிக்கூடம் போகப் பிடிக்கவில்லை. அசகாயச் செயல்களில் அஞ்சா மல் ஈடுபடுபவன். இளம் வய திலேயே வீட்டை விட்டு ஓடு கிறவன் ஆகிவிட்டான். பால் யத்தில் நல்ல உடல் வலு உள்ளவனாக இருந்தான். விளையாட் டில் ஒருமுறை என்னைச் சுழற்றி எறிந்திருக்கிறான்.
நான் ஒரு மாட் டின் காலடியில் போய் விழுந்தேன். கண் விழித்தபோது என் தாயின் மடியில் இருந்தேன். தன்னிடம் இருந்த தலை சிறந்த தையற்கலையை விளங்கப் பண்ணாமலே வீணடித்துவிட்டான்.
அவனைப் பற்றி அவ்வப்போது தொடர்ந்து பல விஷயங்களைக் கேட்டுக்கொண்டு வந்த ஜெயகாந்தன், ‘‘நீயும் உன் தம்பியும் நான் இரண்டாக பிளவுப்பட்டது போல் இருக்கிறீர்கள்’’ என்றார்.
நானோ என் தம்பியோ முழுக்க முழுக்க ஒரு சதவீத ஜெயகாந்தன் கூட ஆகிவிட முடியாது என்பது எனக்குத் தெரியும். ஆனாலும், அவர் ஏன் அவ் வாறு சொன்னார் என்பது எனக்குப் புரிந்தது.
முதன் முதலாக அவர் சோவியத் யூனி யன் செல்கிறார். ஆழ்வார்ப்பேட்டையில் இரவு 10 மணி வரையில் இருந்துவிட்டு, நானும் அவரும் கே.கே.நகர் வீட்டுக்கு வந்தோம். சாப்பிட்டப் பிறகு, பக்கத்து வீட்டுக்காரர் வீடு கட்டுவதற்காகக் கொண்டு வந்து கொட்டியிருந்த மணற் குவியலில் ஒய்யாரமாகச் சாய்ந்து கொண்டோம். வானில் நல்ல நிலா வெளிச்சம் இருந்தது. உலகம் அழகியதாகத் தோன்றியது.
ஆனாலும், அடிமனசில் என்னவோ ஒரு சோகமிருந்தது.
நான் மெதுவாக, ‘‘எல்லம் நன்றா யிருக்கிறது ஜே.கே! ஆனாலும் அடிமனசில் ஒரு சோகம் உண்டாகிறதே, ஏன்?’’ என்று கேட்டேன்.
சிறிது கூடத் தயங்காமல், ஏற்கெனவே தயாரித்து வைத்திருந்ததைப் போல் அவர் பதில் அளித்தார்:
‘‘வாழ்க்கை தற்காலிகமானது என்கிற அடிப்படையில் எழுகிற சோகம் அது!’’
அவர் சொன்னதை நான் வியந்து கொண்டிருக்கும்போதே, சில கணங்கள் கழித்து தலையை மேலும் கீழும் ஆட்டிக் கொண்டே, ‘‘ஆம்! நானூறு வருஷங்கள் வாழ்ந்தாலும் வாழ்க்கை தற்காலிகமானதே!’’ என்றார்.
ஒருமுறை வானொலியில், வகுப்புவாதத்துக்கு எதிராகவும், மதநல்லிணக்கம் பேணியும் அவர் பேசினார். அப்போது அவர் சொன்ன ஒரு வாக்கியம், ஒவ்வோர் இந்துவுக்கும் இலக்கணமாகத் தக்கது!
‘‘எவர் எவர் எதை எதைக் கடவுள் என்று நம்புகிறார்களோ, அதை அதை அவர் அவரைக் காட்டிலும் அதிகம் நம்புபவனே இந்து!’’
இந்த ஒரு வரி என்னை, ‘வைதீக மதம் என்றால் என்ன? பழைய மதம் இது! வழிபாடு என்பதை உலகுக்கே இந்த மதம்தான் கற்பித்தது என்கிறார்கள். அங்ஙனமாயின், வழிபடுவோரை எல்லாம் - அவர்கள் எந்தெந்தக் கடவுளை வழிபட்டாலும், வரவேற்று அணைத்து முகமன் கூறுவதல்லவோ ஓர் இந்துவின் முதற்கடமையாக இருக்க வேண்டும்? பிற மத வழிபாட்டாளர்களை ஏதோ நாத்திகர்கள் போல் நடத்துவதென்ன? நாத்திகத்துக்கும் இந்து மதத்தில் மரியாதையானதோர் சரியாசனம் தரப்பட்டிருக்கிறதே?’ என்றெல்லாம் தொடர்ந்து சிந்திக்க வைத்தது.
- வாழ்வோம்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: pisakuppusamy1943@gmail.com