Published : 06 Feb 2015 11:11 AM
Last Updated : 06 Feb 2015 11:11 AM
“இந்தாடா பிறந்த நாள் கேக். முந்நூறு ரூபாய்… மூணாவது படிக்கிற, உனக்கு இது தேவையா? நீ என்ன பெரிய மனுஷனா? உங்க டீச்சருக்கு பிறந்த நாள்னு உங்க வகுப்பில் உள்ள முப்பது பையன்களிடம் ஆளுக்கு ஒரு ரூபாயா முப்பது ரூபாய வசூல் பண்ணி வைச்சுக்கிட்டு கேக் வாங்கித் தாங்கன்னு அடம்பிடிக்கிறே.
முப்பது ரூபாய்க்கு கேக் வாங்க முடியுமா? இதெல்லாம் யாரு ஏற்பாடு பண்ணச் சொன்னா?” கடுப்பாகக் கேட்டார் செல்லையா.
“நாங்களாகத்தான் ஏற்பாடு செய்யுறோம். எங்க கமலா டீச்சருக்கு இன்னைக்கு பிறந்த நாள்னு அவங்களே சொன்னாங்க. ‘பிறந்த நாளுக்கு நீங்க எனக்கு என்ன பண்ணப்போறீங்க?’ன்னு வேற கேட்டாங்க. அதுதான் நாங்க எல்லாரும் சேர்ந்து காசு போட்டு கேக் வாங்கி கொடுக்கப்போறோம்.”
கவுதம் சொன்னபோது எரிச்சலாக இருந்தது செல்லையாவுக்கு.
கமலா டீச்சர் பள்ளிப் பிள்ளைகளோட பிறந்த நாளைக் கேட்டுக் கொண்டாடுவாங்களா? தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடச் சொல்லி சின்னப்பிள்ளைகளை வருத்தறது என்ன நியாயம்?
கோபத்தோடு தன்னுடைய மகனையும் மகளையும் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று செல்லையா, பள்ளியில் இறக்கிவிட்டபோது கமலா டீச்சர் பள்ளியில் இல்லை. செல்லையா கோபத்தை அடக்கிக் கொண்டு வந்து விட்டார்.
“நாளைக்கு வரட்டும். நம்ம வீட்டை தாண்டித்தானே பள்ளிக்குப் போகணும். ரோட்டுலயே வச்சு நறுக்குன்னு நாலு வார்த்தை கேட்டுட வேண்டியதுதான்.’’ மனதுக்குள் சொல்லிக் கொண்டார் செல்லையா.
இதற்காகவே மறுநாள் காலையில் வேறு எங்கும் செல்லாமல் வீட்டு வாசலில் காத்திருந்தார் செல்லையா. நகரப் பேருந்து சரியான நேரத்துக்கு வர, பேருந்தை விட்டு இறங்கி நடந்தாள் கமலா. எதிர்த்து நின்ற செல்லையாவைப் பார்த்துவிட்டு அப்படியே நின்று விட்டாள். செல்லையா டீச்சரை அழைப்பதற்குள் கமலா டீச்சர் தானாகவே அவரை அழைத்தார்.
“சார்.. மூன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை பிள்ளைகளிடம் தலைமைப் பண்பு, ஒருங்கிணைக்கும் திறன் இருக்கான்னு ஒரு பரீட்சை வைத்தோம். அதில் உங்க பையன் தான் சார் முதலிடம்.. எனக்கு பிறந்த நாள்ன்னு ரெண்டு நாளைக்கு முன்னால வகுப்பில் சொன்னேன்.
அதை அப்படியே கவனமா கேட்டுக்கிட்ட உங்க பையன், மத்த பையன்களை ஒருங்கிணைச்சு ஒரு விழாவையே ஏற்பாடு பண்ணிட்டான். உண்மையைச் சொல் லணும்னா என்னோட பிறந்த நாள் நேத்து இல்லை சார், மே மாதம் 15-ந் தேதிதான். வகுப்பு குழந்தைகள் எல்லோரும் கேக் சாப்பிட்டு சந்தோஷமா இருந்தாங்க.
உங்க பையன் கெட்டிக்காரன். வாழ்த்துக் கள் சார்’’ என்று சொல்லிவிட்டு பதிலுக்குக் காத்திராமல் நடந்தார் கமலா டீச்சர். ஆத்திரப்பட்டதற்காக மனதுக்குள் வருந்தினார் செல்லையா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT