Published : 21 Feb 2015 10:41 AM
Last Updated : 21 Feb 2015 10:41 AM
இந்தி இலக்கியத்தின் முக்கியமான படைப்பாளி, கவிஞர், நாவல் ஆசிரியர், கட்டுரையாளர் எனப் பன்முகத்திறன் கொண்ட சூரியகாந்த் திரிபாதி ‘நிராலா’ (Suryakant Tripathi ‘Nirala’) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 21). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து :
வங்காளத்தின் மிட்னாப்பூரில் பிறந்தவர். 3 வயதில் தாயை இழந்தார். உயர்நிலைக் கல்விக்குப் பிறகு, உத்தரப் பிரதேசத்துக்கு இவரது குடும்பம் குடிபெயர்ந்தது.
இயல்பிலேயே தனித்துவச் சிந்தனைகளைக் கொண்டிருந்தார். படிப்பில் கவனம் செலுத்தாமல், ஊர் சுற்றுவதிலும் விளையாடுவதிலும் ஆர்வத்துடன் இருந்தார். இதற்காக அப்பாவிடம் பலமுறை கடுமையான தண்டனைகளையும் பெற்றார்.
திருமணத்துக்குப் பிறகு இந்தி கற்றுத் தேர்ந்தார். வங்கமொழியில் எழுதுவதை நிறுத்திவிட்டு, இந்தியில் கவிதைகள் எழுதத் தொடங்கினார். ‘நிராலா’ (தனித்தன்மை வாய்ந்த) என்ற புனைப்பெயரில் எழுதினார்.
இவரது படைப்புகளில் வேதாந்த தத்துவங்கள், தேசியம், ஆன்மிகம், இயற்கை அழகு, முற்போக்கான மனிதநேய சித்தாந்தங்கள் முதலியவை கருப்பொருளாக இருந்தன. ராமகிருஷ்ணர், விவேகானந்தர், தாகூரின் தாக்கம் இவரது எழுத்துக்களில் அதிகம் இருந்தது.
தன் படைப்புகள் மூலம் ஊழல், சமூக அவலங்கள், அதிகார அடக்குமுறைகளைச் சாடினார். இதனால் பல எதிர்ப்புகள், விமர்சனங்களையும் சந்தித்தார். புகழ்பெற்ற வங்க இலக்கியப் படைப்புகளை இந்தியில் மொழிபெயர்த்தார்.
வங்கமொழி, இந்தி தவிர ஆங்கிலம், பாரசீகம், சமஸ்கிருதமும் அறிந்தவர். 1916-ல் ‘ஜுஹி கீ கலி’ என்ற தனது முதல் கவிதையை எழுதினார். குறுகிய காலத்தில் மனைவியையும் பின்னர் மகளையும் இழந்தார். வறுமையில் வாடினார். வாழ்க்கையில் அடுக்கடுக்காக துயரங்களைச் சந்தித்ததால், அவரது படைப்புகளில் தத்துவ ஞானம் அதிகம் வெளிப்பட்டது.
கொல்கத்தாவில் இருந்து வெளியான ‘சமன்வய’ என்ற பத்திரிகையின் ஆசிரியராக 1920-ல் பொறுப்பேற்றார். 1923-ல் ‘அனாமிகா’, 1929-ல் ‘பரிமள்’ ஆகிய கவிதைத் தொகுப்புகள் வெளியாயின. 1935-ல் தன் மகள் நினைவாக ‘சரோஜ் ஸ்மிருதி’ என்ற நூலை எழுதினார்.
இந்தி இலக்கியத்தின் தூண்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார். வஹ் தோட்தீ பத்தர் கவிதை, கீதிகா, துளசிதாஸ், குகுர்முத்தா, அணிமா, பேலா, நயே பத்தே, அர்ச்சனா, ஆராதனா ஆகிய நூல்கள் இந்தி இலக்கியத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க, புகழ்பெற்ற படைப்புகள்.
இவரது குல்லிபான்ட், பில்லெசுர் பகரிஹா ஆகிய நகைச்சுவை நூல்களும் புகழ்பெற்றவை. சதுரி சமார், சுகுல் கீ பீவி ஆகியவை இவரது சிறுகதைத் தொகுப்புகள். ரபீந்த்ர கவிதா கானன், பண்ட் அவுர் பல்லவ், சபக் ஆகியவை இவரது புகழ்பெற்ற விமர்சன நூல்கள்.
கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, விமர்சன நூல் என இலக்கியத்தின் அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்த மகத்தான படைப்பாளியாக போற்றப்படும் நிராலா, 65 வயதில் மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT