Published : 01 Jan 2015 11:09 AM
Last Updated : 01 Jan 2015 11:09 AM
ஐன்ஸ்டீனுடன் இணைந்து செயல்பட்ட இயற்பியல் நிபுணரும் விஞ்ஞானத்தில் போஸான் என்னும் புது வகை அடிப்படைத் துகள் (Fundamental Particle) பிரிவைப் படைத்தவருமான இவரது பிறந்த நாள் இன்று (ஜனவரி 1). இவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
கொல்கத்தாவில் பிறந்தவர். தந்தை ரயில்வேயில் பொறியாளராக வேலை பார்த்தவர். படிப்பில் எல்லா வகுப்பிலும் முதல் மாணவனாகத் திகழ்ந்தவர். கணிதத்தில் மிகச் சிறந்து விளங்கினார். கொல்கத்தா பிரசிடன்சி கல்லூரியில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களை பெற்றார்.
அங்கு இவரது ஆசிரியர், ஜகதீஷ் சந்திர போஸ். ரசாயனம், புவியியல், விலங்கியல், மனித விஞ்ஞானம், உயிரின ரசாயனம், பொறியியல் ஆகிய துறைகளில் சத்யன் ஆழ்ந்த அறிவு பெற்றவர்.
இசையில் ஈடுபாடு கொண்டவர். வங்காளம், சமஸ்கிருதம், ஆங்கிலம், பிரெஞ்ச், இத்தாலி, ஜெர்மன் ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்.
ஐன்ஸ்டினின் சார்பியல் தத்துவம் அடங்கிய ஆய்வுக்கட்டுரையைப் படிப்பதற்காகவே இவர் ஜெர்மன் மொழி கற்றார். 1924ல் மாக்ஸ் பிளாங்கின் விதி (Max Plank’s Law), ஒளித்துகள் கோட்பாடு (Light Quantum Hypothesis) பற்றியும் கட்டுரை எழுதி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு அனுப்பி வைத்தார். ஐன்ஸ்டீன் அதனைப் பாராட்டியதோடு அதை விரிவாக விளக்கி தானே ஜெர்மனியில் மொழிபெயர்த்து ஜெர்மன் இயற்பியல் வெளியீடு என்ற அமைப்புக்கு அனுப்பி வைத்தார். ஐன்ஸ்டினின் மகத்தான நட்பைப் பெற்றார்.
ஐரோப்பா சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு மேடம் கியூரி ஆய்வுக்கூடத்தில் சேர்ந்து இயற்பியல் ஆராய்ச்சிகள் மேற்கொண்டார்.
1924ல் டாக்கா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியர் இடத்துக்கு தகுதி வாய்ந்த ஆனால் டாக்டர் பட்டம் பெறாத இவர், ஐன்ஸ்டீன் சிபாரிசில் சேர்ந்தார்.
30 ஆண்டுகள் அங்கே பணிபுரிந்தார். ஐன்ஸ்டீனை இவர் தன் குருவாகப் போற்றினார்.
இந்த இருவரின் ஆய்வில் போஸ்-ஐன்ஸ்டீன் செறிபொருள், போஸ்-ஐன்ஸ்டீன் புள்ளியியல் ஆகிய கோட்பாடுகள் வெளிவந்தன. இயற்பியல் விஞ்ஞானத்தில் இவரது ஆராய்ச்சிக் களங்கள் பரந்து விரிந்தவை. மேகநாத் ஸஹாவுடன் இணைந்து ‘ஈக்வேஷன் ஆஃப் ஸ்டேட்’ என்னும் இயற்பியல் கோட்பாட்டுக் கட்டுரையை வெளியிட்டனர்.
போஸான் வளிமத்திற்கு இவரது நினைவாகவே இந்தப் பெயர் சூட்டப்பட்டது. தன் குரு ஐன்ஸ்டீனின் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார். 1954ல் இவருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. இங்கிலாந்து நாட்டின் ராயல் சொசைடியின் ஃபெலோஷிப் கவுரவமும் பெற்றார். ஏராளமான பல்கலைக்கழகங்கள் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கின.
சமூக சேவையிலும் ஈடுபட்ட வந்த இவர். சுபாஷ் சந்திரபோசின் நண்பர். ஜவகர்லால் நேரு வங்காளம் வந்தபோது இவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்தியாவின் தலைசிறந்த அறிவியல் மேதை சத்யேந்திரநாத் போஸ் 80-வது வயதில் காலமானார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT