Published : 26 Jan 2015 10:56 AM
Last Updated : 26 Jan 2015 10:56 AM
பிரபல உருது மொழி அறிஞர், கவிஞர், விமர்சகர், எழுத்தாளர் ஃபர்மான் பதேபுரி (Farman Fatehpuri) பிறந்த தினம் இன்று (ஜனவரி 26). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
# உத்தரப் பிரதேச மாநிலம் பதேபூரில் பிறந்தவர். சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்துவந்த தந்தை, இவர் குழந்தையாக இருந்த போதே இறந்துவிட்டார். அதே ஊரில் மெட்ரிகுலேஷன், அலகாபாத்தில் இன்டர்மீடியட் பயின்றார்.
# குடும்ப வறுமை காரணமாக, பள்ளிப் படிப்பு முடித்ததும் ஒரு பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்தார். பிறகு, ஆக்ரா பல்கலைக்கழகத்தில் 1950-ல் பட்டப் படிப்பு பயின்றார். இந்தியப் பிரிவினையின்போது துணைக் கண்டம் முழுவதும் வகுப்புவாதம் தலைவிரித்து ஆடியது. தனது முன்னோர் வாழ்ந்த இடத்தை விட்டு வெளியேறி, புதிதாக உதித்த பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் குடியேறினார்.
# அங்கு படிப்பைத் தொடர முடியாததால் விமானப் போக்குவரத்துத் துறையில் ஊழியராகச் சேர்ந்தார். கராச்சி பல்கலைக்கழகத்தில் கலையும் சட்டமும் பயின்றார். 1953-ல் எஸ்.எம். சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றார்.
# அதன் பிறகு1955-ல் ஆசிரியர் பயிற்சியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1965-ல் பிஎச்.டி. பட்டம் பெற்றார். 1974-ல் உருது மொழியில் டி.லிட். பட்டம் பெற்ற முதல் பாகிஸ்தானியர் என்ற பெருமையைப் பெற்றார். ஆங்கில இலக்கியமும் பயின்றார்.
# ஆங்கிலம், கணித ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். கல்வி தொடர்பான கட்டுரைகள், புத்தக மதிப்புரைகள், கவிதைகள், தலையங்கங்கள் எழுதியுள்ளார். கராச்சி பல்கலைக்கழகத்தில் சுமார் 30 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றி அங்கு ஏராளமான மொழி ஆராய்ச்சி மாணவர்களை உருவாக்கினார். 1985-ல் உருது அகராதி வாரிய முதன்மை ஆசிரியராக, செயலாளராக நியமிக்கப்பட்டார்.
# உருது இலக்கியம், மொழி வளர்ச்சியில் அவரது பங்களிப்பைப் பாராட்டி `சிதார்-இ-இம்தியாஸ்’ பதக்கத்தை பாகிஸ்தான் அரசு வழங்கியது. சிந்து மாகாண அரசின் சிவில் சர்வீஸ் வாரிய உறுப்பினராக 1996-ல் இருந்து பணியாற்றினார். `நிகார்’ என்ற பழமையான மாத இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்.
# உருது மொழியில் ஆராய்ச்சி செய்பவர்களுக்கு இவரது படைப்புகள், கருத்துகள் பெரிதும் உதவின. புகழ்பெற்ற உருது கஜல் கவிஞரும், அரசியல் ஜாம்பவானுமான சையத் ஃபசுல் ஹசன் ஹஸ்ரத் மொஹானியை தனது குருவாகப் போற்றினார். அவரைப் பற்றி 2 புத்தகங்கள் எழுதியுள்ளார்.
# சுறுசுறுப்பானவர். எளிமையானவர். கொண்ட கொள்கையில் உறுதியானவர். எத்தனை இன்னல்கள், இடையூறுகள் வந்தாலும் அவற்றைக் கடந்து வெற்றி பெற்று பலருக்கும் முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.
# இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளில் நூற்றுக்கணக்கான கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார். பிலா ஜவாஸ் என்ற சுயசரிதை உட்பட 40-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியுள்ளார்.
# 2013 ஆகஸ்ட் 3-ம் தேதி 87-வது வயதில் ஃபர்மான் பதேபுரியின் உயிர், உறக்கத்திலேயே பிரிந்தது. அவர் பணியாற்றிய கராச்சி பல்கலைக்கழக வளாகத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT