Published : 26 Jan 2015 11:41 AM
Last Updated : 26 Jan 2015 11:41 AM
1950 ஜனவரி 26. இந்தியா குடியரசு நாடாக ஆன நாள். அதாவது, இந்திய அரசியல் சட்டம் அமல்படுத்தப்பட்ட நாள். 1947-லேயே இந்தியா விடுதலை அடைந்துவிட்டது என்றாலும், அப்போது நம் நாட்டுக்கென்று சொந்தமாக, அரசியல் சட்டம் இருக்கவில்லை. பிரிட்டிஷ் அரசாங்கம் உருவாக்கி அமல்படுத்தியிருந்த சட்டங்களின்படிதான் அந்த இரண்டு ஆண்டுகளும் இந்திய அரசு இயங்கியது.
பிரிட்டிஷ் இந்தியாவில் அரசியல் சீர்திருத்தத்தைக் கொண்டுவருவதற்காக இயற்றப்பட்ட ‘இந்திய அரசுச் சட்டம் - 1935’ எனும் அரசுச் சட்டம்தான் அதுவரையில் நடைமுறையில் இருந்தது. இந்தியாவுக்கென்று அரசியல் சட்ட வரைவு உருவாக்க முடிவுசெய்யப்பட்டது. 1947 ஆகஸ்ட் 28-ல் இந்தியாவுக்கான நிரந்தர அரசியல் சட்டத்தை உருவாக்க அம்பேத்கர் தலைமையில் அரசியல் சட்ட வரைவுக் குழு ஏற்படுத்தப்பட்டது.
அந்தக் குழு உருவாக்கிய அரசியல் சட்ட வரைவு 1947 நவம்பர் 4-ல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அரசியல் சட்டம் தொடர்பான பல விவாதங்கள் நடந்த பின்னர், 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்களுக்குப் பின்னர் 1950 ஜனவரி 24-ல் நாடாளுமன்றத்தின் 308 உறுப்பினர்களும் அதில் கையெழுத்திட்டனர். 2 நாட்களுக்குப் பின்னர் அரசியல் சட்டம் அமல்படுத்தப்பட்டது. 1930-ல் இதே நாளில் ‘இந்தியாவின் பூரண சுயராஜ்யம்’ எனும் பிரகடனத்தை இந்திய தேசிய காங்கிரஸ் அறிவித்தது. அதன் நினைவாகத்தான், அதே தேதியில் இந்திய அரசியல் சட்டம் அமல்படுத்தப்பட்டது.
முதல் 4 ஆண்டுகளுக்கு டெல்லியின் இர்வின் மைதானம், செங்கோட்டை, ராம்லீலா மைதானம் என்று வெவ்வேறு இடங்களில் குடியரசு தினக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 1955 முதல், ராஜ்பாத் பகுதியில் குடியரசு தின அணிவகுப்பு முதலான நிகழ்ச்சிகள் நடைபெறத் தொடங்கின. 1950-ல் நடந்த முதல் குடியரசு தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் இந்தோனேஷிய அதிபர் சுகர்னோ கலந்துகொண்டார். அதன்பின்னர் பல்வேறு நாட்டுத் தலைவர்கள், இந்தியக் குடியரசு தின விழாவில் கலந்துகொண்டனர். இவ்விழாவில், அமெரிக்க அதிபர் ஒருவர் கலந்துகொள்வது இதுவே முதல் முறை!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT