Published : 12 Jan 2015 10:15 AM
Last Updated : 12 Jan 2015 10:15 AM

ரிச்சர்ட் இவான்ஸ் ஷல்டீஸ் 10

நவீன தாவரத் தொடர்பியலின் (ethnobotany) தந்தையாக கருதப்படும் ரிச்சர்ட் இவான்ஸ் ஷல்டீஸின் பிறந்த நாள் இன்று (ஜனவரி 12). இவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

 மசாசூசெட்ஸ் மாநிலத்தில் பாஸ்டன் நகரில் பிறந்தவர். இவரது பெற்றோர் ஜெர்மனி லிருந்து புலம் பெயர்ந்தவர்கள். சிறு வயதில் இவர் தனது மாமாவின் பண்ணையில் இருந்த அரிதான பல தாவர வகைகளைக் கண்டு, அவற் றைப் பற்றித் தெரிந்துகொள் வதில் ஆர்வம் கொண்டார்.

 ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த போது, இவரது பேராசிரியர்களில் ஒருவரான டாக்டர் ஓகஸ் அமெஸ் `பயன் தரும் மற்றும் தீமை விளைவிக்கும் தாவரங்கள்’ என்ற தலைப்பில் கற்பித்த பாடம் இவரது வாழ்க்கைப் போக்கையே மாற்றியது.

 அமேசான் மழைக் காடுகளில் 17 வருடங்கள் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்த ரிச்சர்ட் ப்ரூஸ்தான் இவரது ஹீரோ. ஷல்டீஸ், ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் 1937-ல் உயிரியியல் மற்றும் வேதியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

 1941-ல் தாவரவியலில் டாக்டர் பட்டமும் பெற்றார். தாவரங்களின் மருத்துவப் பயன்பாட்டைக் குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ள நேஷனல் ரிசர்ச் கவுன்சில் இவருக்கு உதவித் தொகை அளித்தது.

 முதலில் இவரது ஆய்வுகள் ரப்பர் மற்றும் மருத்துவ குணங்கள் உடைய தாவரங்களைப் பற்றி இருந்தன. பிறகு உளவியல் தொடர்பான மருந்துகள், மனமயக்கம் தரும் தாவரங்கள் உள்ளிட்ட பல துறைகளிலும் விரிவடைந்தன. அமேசான் பகுதிகளில் ஏறக்குறைய 80,000 வகை பயனுள்ள தாவரங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

 அமேசான் மற்றும் மெக்சிகோ காடுகளில் இவரது 50 வருட கால ஆராய்ச்சிகளில் அதுவரை அறிவியலில் கண்டறியப்படாத 300 மூலிகைத் தாவரங்கள் உட்பட 30,000-க்கும் மேற்பட்ட மூலிகை குணங்கள் உடைய தாவர வகைகளை சேகரித்தார். ஆரோ பாய்சன் உட்பட ஏராளமான தாவரத் தொடர்பியல் கண்டுபிடிப்புகள் குறித்த கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.

 1957-ல் “சீகிங் தி மேஜிக் மஷ்ரூம்ஸ்” என்ற கட்டுரையை வெளியிட்டார். ஆல்பர்ட் ஹாஃப்மெனுடன் சேர்ந்து இவர் எழுதிய தி பிளான்ட்ஸ் ஆஃப் தி காட்ஸ்: தெயர் சேக்ரட், ஹீலிங், ஹலுசினோஜெனிக் பவர்ஸ் (1979) புத்தகம் உலகம் முழுவதும் பிரபலமடைந்து விற்பனையில் சாதனை படைத்தது.

 இவான்ஸ் 1958-ஆம் ஆண்டில் ஹார்வர்டின் ஆமெஸ் அர்சிட் ஹெர்பேரியத்தின் பொருளாதார தாவரவியல் க்யுரேட்டராக நியமிக்கப்பட்டார். 1970-ல் இதன் உயிரியல் பேராசிரியராகவும் நியமிக்கப்பட்டார். நடைமுறை சார்ந்த, தனது அரிய அனுபவங்களை கூறி இவரது விரிவுரையாற்றும் பாணியால் மாணவர்கள் ஈர்க்கப்பட்டனர்.

 இவரது மூலிகைத் தாவர ஆராய்ச்சிகள் ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கும் பெரிதும் பயன்பட்டுவருகின்றன. காடுகள் அழிக்கப்படுவது பற்றி இவர் கவலை தெரிவித்தார்.

 டயிலர் பிரைஸ் மற்றும் வேர்ல்டு வைல்டு லைஃப் ஃபன்ட் அமைப்பின் தங்கப் பதக்கம் உள்ளிட்ட எண்ணற்ற பரிசுகள், ஏராளமான விருதுகள், கவுரவப் பட்டங்களையும் வென்ற டாக்டர் ரிச்சர்ட் இவான்ஸ் ஷல்டீஸ் 86-வது வயதில் 2001 ஏப்ரல் மாதம் 10-ஆம் தேதி காலமானார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x