Published : 08 Jan 2015 05:38 PM
Last Updated : 08 Jan 2015 05:38 PM
இலக்கியம் ஏன் எழுத்து வடிவில் இருக்க வேண்டும், ஓவியங்கள் ஏன் அதன் வடிவில் தனித்து நிற்க வேண்டும் என்கிற அபத்தமான கேள்விகளுக்கு ஒப்பானது... 'சினிமா ஏன் காட்சிப் படிமங்களின் வடிவில் இருக்க வேண்டும்?' என்பதும்.
சினிமா என்றாலே அது காட்சிகளின் தொகுப்புத்தான். ஓர் இலக்கியப் பிரதியை படிக்கும்போதே நாம் அந்த வார்த்தைகளை பிம்பங்களாகவே மனதில் பதிய வைத்து படிக்கிறோம். ஒரு பெண் சாலையை கடந்து செல்கிறாள் - இந்த வரிகளை படிக்கும்போதே, ஒரு பெண்ணும், அவள் சாலையைக் கடக்கும் காட்சியும் நம் மூளையில் பதிந்தப் பிறகுதான் அந்த வரிகளை நாம் கடக்க முடியும். எழுத்துகளையே நமது மூளை, காட்சிகளாக மாற்றித்தான் மனதில் பதிய வைக்கிறது எனில், காட்சி ஊடகத்தை நாம் ஏன் வசன வடிவில் வைத்திருக்க வேண்டும்?
அறிவியல் பூர்வமாகவே கருவில் தோன்றும் சிசுவிற்கு முதல் உறுப்பாக வருவது கண்கள்தான். நம்முடைய ஆதி கால மொழி ஓவியங்கள்தான். நம்முடைய எல்லா புலன்களும் காட்சிகளைப் பார்த்தால் கொள்ளும் பரவசம், அல்லது வேறு ஏதோ உணர்ச்சியை வார்த்தைகளில் கொள்வதில்லை.
ஒரு புலி பாய்ந்து மானைக் கொன்றது.
இந்த வரிகளை வெகுசாதாரணமாக படித்துவிட்டு கடந்துவிடலாம். அல்லது, தீவிர இலக்கியத்தில் இதனை இன்னமும் தீவிரமாக விவரிக்கவும் செய்வார்கள். அந்தப் புலி எப்படி பாய்ந்தது, பாயும்போது, அதன் முன்னங்கால்கள் எப்படி அகன்றன, பின்னங்கால்கள் எப்படி இருந்தன, சுற்றிலும் என்னவிதமான ஓசை இருந்தது, பாய்ந்து மானைத் தாக்கும்போது புலியின் கண்கள் எப்படி இருந்தன என்பதை விவரித்துவிட்டு, அடுத்ததாக புலியிடம் சிக்கிக்கொண்ட மானின் மனநிலை என்னவாக இருந்தது, அந்த மான் எப்படி புலியிட மாட்டிக்கொண்டது, மானின் கழுத்தை புலி எப்படி கவ்வியது, அப்போது மான் எப்படி இருந்தது என்று எல்லாவற்றையும் எழுத்துகளால் சொல்லிவிட முடியும். ஒரு புலி பாய்ந்து மானைக் கொன்றது என்பதை இருபது பக்கங்களுக்கு எழுதலாம். ஆனால் இருபதாவது பக்கத்தில் புலியிடம் மாட்டிக்கொண்ட மானைப் பற்றிய விவரிப்பை படிக்கும்போதே, முதல் பக்கத்தில் படித்த புலியின் விவரணைகள் எல்லாம் மறந்துப் போய்விடும். காட்சிகளாக மூளையில் பதிந்து படித்தாலும், இருபதாவது பக்கத்திற்கு வரும்போது, நீங்கள் உண்மையான பயத்தை அடையமுடியாது.
ஆனால், இருபது பக்கங்களில் சொல்லக்கூடிய அந்தச் சம்பவத்தை இருபது நொடியில் காட்சிகளால் விவரித்துவிட முடியும். ஒரு புலி பாய்கிறது, அதன் முன்னங்கால், பின்னங்கால், கண்கள், உடலின் சிலிர்ப்பு, வேகம், அதன் பின்னணியில் எழும் இயற்கை சப்தங்கள், அதே கணத்தில் மானின் அச்சம், தப்பிக்க எத்தனிக்கும் அதன் மனநிலை என எல்லாவற்றையும் இருபது நொடியில் ஒரு இருட்டறையில் பார்க்கும்போது, அங்கே அகப்படும் மானாகவே நீங்கள் மாறிவிடுவீர்கள். அதுதான் காட்சிப் படிமங்களின் அசாதாரண சாதனை.
இதனை வார்த்தைகளில் அல்லது உரையாடலின் மூலம் ஒருபோதும் சாதித்துவிட முடியாது. உரையாடலில் புலியின் நிலையை முற்றிலும் விவரித்துவிட்டு, மானின் நிலையை விவரிக்க எத்தனிக்கும்போதே வாசகன் புலியைப் பற்றிய விவரணையை மறந்துவிடும் அபாயம் இருக்கிறது. ஆனால், காட்சி ஊடகத்தில் இரண்டையும் ஒரே பிரேமில், ஒன்றோடு ஒன்று பிணைந்துப் பார்க்கும்போது, நம்மால் எல்லாவற்றையும் மனதில் பதிந்து வைத்துக்கொள்ள முடிகிறது.
ஏன் முதல் பக்கத்தில் படித்ததை, இருபதாவது பக்கத்திற்கு ஒரு வாசகன் மறக்கிறான், அல்லது அந்த வரிகளின் வீரியம் குறைகிறது, அறிவியல்படி, ஒரு மனிதனின் மூளை மூன்று நொடிகள்தான் ஒன்றின் மீது கவனத்தை செலுத்தும். பின்னர் அது தானாக வேறொன்றின் மீது கவனத்தை செலுத்தத் தொடங்கும். ஆனால் காட்சிகளை பார்க்கும்போது, நாம் மூளையைவே ஏமாற்றுகிறோம். ஒரு நொடியில் மூளையில் பதிந்த காட்சிகள், அடுத்த மூன்று நொடிகளுக்கு மாறாது, மறக்காது. அந்தக் காட்சிகள் மூளையை சமநிலையில் வைத்து, அடுத்து வரும் காட்சிகளுக்காக தயார் செய்கிறது.
அருண்.மோ - தொடர்புக்கு thamizhstudio@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT