Published : 06 Jan 2015 04:20 PM
Last Updated : 06 Jan 2015 04:20 PM

கலீல் ஜிப்ரான் 10

ஓவியர், கவிஞர், எழுத்தாளர் என்ற பன்முகத் திறன் கொண்ட கலீல் ஜிப்ரான் பிறந்த தினம் இன்று (ஜனவரி 6). இவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# லெபனான் நாட்டில் பஷ்ரி என்ற நகரில் பிறந்தவர். இவரது 12-ம் வயதில் குடும்பம் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தது. அரேபிய மொழி, ஆங்கிலம், பாரசீக மொழிகள் அறிந்தவர். ஓவியத்தில் இவருக்கு இருந்த திறனை அறிந்த அவரது ஆசிரியர்கள் இவரை பாஸ்டனில் உள்ள ஓவியப் பள்ளியில் சேர்த்துவிட்டனர்.

# அப்போது இவர் வரைந்த படங்களை ஒரு வெளியீட்டாளர் தனது புத்தகங்களின் அட்டைகளில் பயன்படுத்திக்கொண்டார். இளம் வயதிலேயே இலக்கிய உலகிலும் அடியெடுத்து வைத்துவிட்டார்.

# 15 வயதில் பெய்ரூத் சென்று உயர் கல்வி பயின்றார். அங்கே கல்லூரி இலக்கிய பத்திரிகையை நண்பர்களுடன் சேர்ந்து வெளியிட்டார். கல்லூரி-கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜிப்ரான் இலக்கிய, அரசியல் புரட்சியாளர் என்று கருதப்பட்டார்.

# 1902-ல் பாஸ்டன் திரும்பினார். இவரது கட்டுரை வடிவிலான கவிதைகள் அடங்கிய ‘தி ப்ராஃபெட்’ வெளிவந்த சமயத்தில் ஐரோப்பிய நாடுகளில் புகழ்பெற்றார்.

# இதன் பதிப்புகள் தொடர்ந்து வெளிவந்தன. இது 40-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. அமெரிக்காவில், 20-ம் நூற்றாண்டில் மிகச் சிறப்பாக விற்பனையான புத்தகமாகத் திகழ்ந்தது.

# கடுமையான விமர்சனங்கள் எழுந்தாலும் இவரது புத்தகங்கள் நன்றாக விற்பனையாகின. அரேபிய, ஆங்கில, பாரசீக மொழிகளில் கவிதை தொகுப்புகள், கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

# இவரது படைப்புகளை சிரத்தையுடன் தேடிக் கண்டுபிடித்து உலகுக்கு அளித்த பெருமை இவரது காரியதரிசி பார்பரா யங்கையே சாரும். ஜிப்ரான் தனது முற்போக்கு சிந்தனைகள் காரணமாக மதகுருமார்கள், அதிகாரிகளின் கோபத்துக்கு ஆளானவர். ‘ஒட்டுமொத்த உலகமும் எனக்கு தாய்நாடுதான். அனைவரும் என் சக குடிமகன்கள்’ என்று இவர் கூறுவார்.

# உலகின் பல இடங்களில் இவரது ஓவியக் கண்காட்சிகள் நடைபெற்றுள்ளன. லெபனானில் ஜிப்ரான் அருங்காட்சியகத்தில் இவரது ஓவியங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவரது புத்தகங்கள் உலக அளவில் விற்பனையில் மூன்றாம் இடம் வகித்துவருகிறது.

# இவரது படைப்புகள் ஒவ்வொரு தனிமனிதனின் எண்ணங்களையும் பிரதிபலிப்பவையாக இருக்கின்றன. வாழ்க்கை சம்பந்தமான தீவிர சிந்தனைகள் கொண்ட இவரது படைப்புகள் உலகம் முழுவதும் 22-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

# உலகின் மகத்தான சிந்தனையாளர்களில் ஒருவர். எழுத்தாளர், ஓவியர், தத்துவவாதி, கவிஞர். உலகம் முழுவதும் இலக்கிய நட்சத்திரமாகக் கொண்டாடப்பட்டுவரும் கலீல் ஜிப்ரான் 48-ம் வயதில் மரணமடைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x