Published : 08 Jan 2015 11:15 AM
Last Updated : 08 Jan 2015 11:15 AM
நவீன வானியலின் தந்தை என்றும் நவீன இயற்பியலின் தந்தை என்றும் அழைக்கப்படுபவர் கலிலியோ கலிலி. தனது கண்டுபிடிப்புகளால் உலகத்தை அதிரச் செய்தவர். வானின் நட்சத்திரங்கள், கோள்களைப் பற்றி ஆராய தொலைநோக்கியைப் பயன் படுத்திய முதல் நபரும் இவர்தான். வியாழன் கிரகத்தின் நிலவுகள், சனி கிரகத்தைச் சுற்றியிருக்கும் வளையம் உள்ளிட்ட முக்கியமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர். ஐரோப் பாவின் மறுமலர்ச்சிக் காலத்தில் இவரது கண்டுபிடிப்புகள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தின.
1564 பிப்ரவரி 15-ல் பீஸா (பைசா) நகரில் பிறந்தவர் கலிலியோ. இவரது தந்தை வின்சென்ஸோ கலிலி ஒரு இசைக் கலைஞர். 1570-ல் வின்சென்ஸோ தனது குடும்பத்துடன் புளோரன்ஸ் நகருக்குக் குடிபெயர்ந்தார். அந்நகரின் அருகில் உள்ள வல்லம்புரோஸா எனும் நகரில் இருந்த பள்ளியில் கலிலியோவின் கல்வி தொடங்கியது. பின்னர், பீஸா பல்கலைக்
கழகத்தில் கல்வியைத் தொடர்ந்த கலிலியோ, மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். அப்போது அவரது கவனம் கணிதத்தின் பக்கம் திரும் பியது. கணிதமும் தத்துவமும்தான் தனது தொழில் என்று அவர் முடிவு செய்தார். 1585-ல் பீஸா பல்கலைக் கழத்தில் இருந்து பட்டம் பெறாமலேயே வெளியேறினார் கலிலியோ.
இதற்கிடையில், அரிஸ்டாட்டில் தத்துவம் மற்றும் கணிதம் தொடர்பாகப் பல புத்தகங்களைப் படித்து அவற்றில் தேர்ந்தார். புளோரன்ஸ் மற்றும் சீய்னா நகரங்களில் கணித வகுப்புகளையும் நடத்திவந்தார். இயக்கம் தொடர்பாக 20 ஆண்டுகளுக்கு மேல் ஆய்வுகளை நடத்தினார். நீர்த் தராசின் புதிய வடிவத்தை உருவாக்கினார். ‘தி லிட்டில் பேலன்ஸ்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய ஆய்வுக் கட்டுரை அறிவிய லாளர்களின் கவனத்தை ஈர்த்தது.
1588-ல் பொலோகானா பல்கலைக் கழகத்தின் கணிதத் துறைத் தலைவர் (‘சேர் ஆஃப் மேத்தமட்டிக்ஸ்’) பதவிக்கு விண்ணப்பித்த கலிலியோவுக்கு பதவி மறுக்கப்பட்டது. எனினும் அறிவியல் ஆய்வு தொடர்பாக அவர் வெளியிட்ட கட்டுரைகள், தேற்றங்கள் அவருக்குப் புகழ் சேர்த்தன. இதையடுத்து, 1589-ல் பீஸா பல்கலைக்கழகத்தின் கணிதத் துறைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.
இயக்கம் தொடர்பான அரிஸ்டாட்டி லின் தத்துவத்தைப் புறக்கணித்து, ஆர்க்கிமிடிஸின் தத்துவத்தை அடிப் படையாகக்கொண்டு அவர் வெளியிட்ட ‘ஆன் மோஷன்’ எனும் கட்டுரை, பீஸா பல்கலைக்கழக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால், அவரது பணி ஒப்பந்தம் புதுப்பிக்கப் படவில்லை. இப்படிப் பல எதிர்ப்புகள், பிரச்சினைகளுக்கு இடையில் அவர் தொடர்ந்து இயங்கினார்.
சூரியனை பூமி உள்ளிட்ட கிரகங்கள் சுற்றிவருகின்றன என்று சொன்ன நிக்கோலஸ் கோபர்நிகஸின் கூற்றை ஆதரித்து கலிலியோ எழுதிய ஆய்வுக் கட்டுரை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மத நம்பிக் கைகளுக்கு எதிரான வகையில் கலிலியோவின் கருத்து இருந்ததாக அவருக்குக் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து, 1633-ல் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் வயதைக் கருதி வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார். 1642 ஜனவரி 8-ல் தனது 77-வது வயதில் மரணமடைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT