Published : 13 Jan 2015 05:27 PM
Last Updated : 13 Jan 2015 05:27 PM
குலவையிட்டுக் கொண்டாடும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வந்தே விட்டது. நாளை போகி பண்டிகை. 'பழையன கழிதலும் புதியன புகுதலும்' இயற்கை; சான்றோர் வாக்கு. மூத்தோர் வழியைக் காரணம் அறியாமலேயே போற்றுவதும் தூற்றுவதும் அன்றாட வழக்கமாகிவிட்ட இன்றைய நாளில் போகிக் கொண்டாட்டத்தைக் கொஞ்சம் யோசியுங்கள்.
பனிக்காலமான மார்கழி மாதம் முடியும் நாளான போகியன்று அருகில் அண்டியிருக்கும் பூச்சிகள், விஷக்கிருமிகள் போன்றவற்றை அழிப்பதற்காகத்தான் பழையதை எரிக்கும் சடங்கை நடைமுறைப்படுத்தினர் முன்னோர். அத்துடன், குளிர்காலத்தில் வியாதிகள் எளிதில் தொற்றிவிடும் அபாயத்தைத் தவிர்ப்பதற்காக மூலிகைச்செடிகளை எரித்து அதில் வெளிவரும் புகையை சுவாசித்தனர். வேப்பிலைக் கொத்துக்களை வீட்டு வாசலில் கட்டினர்.
ஆனால், இன்றைய இளைய தலைமுறையினர் போகிப் பண்டிகையை வேறு விதமான புரிதலோடு அணுகுகின்றனர். தீபாவளி சமயத்தில் வெடிக்காது போன பட்டாசுகளையும், டயர்களையும் வீட்டின் அருகிலேயே போட்டு எரிக்கின்றனர். இதிலிருந்து ஜிங்க் ஆக்ஸைட் உட்பட பல்வேறு விதமான நச்சு வாயுக்கள் வெளியேறுகின்றன. அவை சுற்றுச்சூழலை, காற்றை, இயற்கையை மாசுபடுத்துகின்றன. குழந்தைகள், முதியோர்கள், கர்ப்பிணிகளுக்கு அதிகபட்சக் கெடுதல் நேரிடுகிறது. அதைச் சுவாசித்த தாய், தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் நச்சு குழந்தையையும் சென்றடைகிறது. ஆஸ்துமா நோயாளிகளின் நிலைமை மிகவும் மோசம். டயர் எரிப்பதன் மூலம் வெளியாகின்ற இந்த நச்சுக்காற்றை சுவாசிப்பதால் நுரையீரல் வியாதிகளே பரிசாய்க் கிடைக்கிறது.
டயர்களை எரிக்கும் பழக்கத்தை அறவே விட வேண்டும். பழைய துணிகளை எரிக்கும் பழக்கத்தை விட்டு, அதை ஆதரவற்றோர்க்குக் கொடுக்கலாம். ஐந்து நிமிட அற்ப மகிழ்ச்சிக்காக ஆயுளையே தொலைத்துவிடாதீர்கள்.
கெடுதல் மனிதர்களுக்கு மட்டுமில்லை மற்ற உயிரினங்களும்தான். புகை மண்டலமாகவே மாறிவிடுகிற இடங்களில் இருக்கும் பறவைகள், காகங்கள், குருவிகள், ஏதுமறியாமல் சுற்றித் திரியும் பட்டாம்பூச்சிகள், மனிதர்களோடேயே வாழப் பழகி விட்ட குரங்குக் கூட்டங்கள் என இயற்கையின் குழந்தைகள் எல்லாம் பாதிக்கப்படுகின்றன.
போகி பண்டிகை நாளன்று, பழையன கழித்து மனசைச் சுத்தமாக்குவோம்... வீட்டைச் சுத்தமாக்குவோம்... ஃபேஸ்புக்கில் நட்பு வட்டத்தில் உள்ள ஃபேக் ஐடிக்களைக்கூட களைத்திடுவோம்... தெரு மட்டும் என்ன பாவம் செய்தது? அதையும் சுத்தமாக வைத்திருக்க உதவலாமே!
வளர்ப்பதென்றால் அறிவுத் தீயை வளர்ப்போம்... எரிப்பதென்றால் தீய எண்ணங்களை எரிப்போம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment