Published : 12 Jan 2015 12:48 PM
Last Updated : 12 Jan 2015 12:48 PM
சினிமா, பாப், கானா பாடல்களே இன்றைய இளைஞர்களின் உலகை நிரப்பிக் கொண்டிருக்கிற காலம் இது. உள்ளூர்ப் பாடல்களும், உலகப் பாடல்களும் வைரலாய்ப் பரவுகின்ற இந்தச் சூழலில் 'காதலன் பாரதி' என்ற தலைப்போடு ஓர் இசை ஆல்பம் வெளியாகி இருக்கிறது. 'காதலன் பாரதி' வேறு யாருமில்லை... நம் மகாகவி பாரதியார்தான்.
பாரதி, இந்திய விடுதலைக்காக மக்களின் எழுச்சியைத் தன் வீரம் செறிந்த எழுத்துக்களால் தட்டி எழுப்பியவர். தலைசிறந்த கவிஞர். தான் உண்ண ஒரு வாய்க்கவளம் இல்லாத நிலையிலும் காக்கை குருவிகளின் உணவுக்காகக் கவலைப்பட்டவர். பெரும்பாலானாவர்களுக்கு புரட்சியாளராய், கவியாய், பத்திரிகையாளராய், பெண்ணடிமைத்தனத்தை எதிர்த்தவராய் மட்டுமே அறியப்பட்டிருந்த பாரதியாரின் முகம் இந்த இசைத் தொகுப்பில் உணர்ச்சிமிகு காதலனாகவும் வெளிப்பட்டிருக்கிறது.
கண்ணம்மாவைக் கதாபாத்திரமாய்க் கொண்ட 'தீர்த்தக் கரையினிலே', 'பாயும் ஒளி நீ எனக்கு; பார்க்கும் விழி நானுனக்கு' உள்ளிட்ட 5 பாடல்களுடன் 2 டிராக்குகள் சேர்த்து, அதனைத் தொகுத்து 'காதலன் பாரதி'யை வெளியிட்டிருக்கின்றனர், திரைக்கதையாளரும், நாளைய இயக்குநருமான பரத் கிருஷ்ணமாச்சாரியும், அவரின் உதவியாளர் பாலாஜி சுப்ரமணியமும்.
மெரினா, விடியும் முன் உள்ளிட்ட திரைப்பட இசையமைப்பாளரான கிரிஷ் கோபாலகிருஷ்ணன் மூன்று பாடல்களுக்கு இசையமைத்து, ஒரு பாடலையும் பாடி இருக்கிறார்.
பிரபல வாய்ப்பாட்டுக் கலைஞரான அபிஷேக் ரகுராம் 'பாயும் ஒளி நீ எனக்கு' பாடலுக்கு இசை அமைத்திருக்கிறார். பியானோ வாசித்திருப்பவர் அனில் ஸ்ரீனிவாசன். இவர் உன்னி கிருஷ்ணன், சைந்தவி, ஹரிணி, அனுராதா ஸ்ரீராம், ஸ்ரீனிவாஸ், ஸ்வேதா மோகன் போன்றோர்களுடன் பணியாற்றியவர்.
எத்தனை முறை கேட்டாலும் மெய் சிலிர்க்கச் செய்யும் வரிகள் பாரதியுடையவை. அதன் அழகும் வீரியமும் குறையாமல் இசை வடிவம் கொடுத்திருப்பது, இந்த இசைத் தொகுப்பின் சிறப்பு.
பெரும்பாலானோர் அறிந்த பாடல்கள் என்றாலும் 'பாயும் ஒளி நீ எனக்கு' பாடல், கேட்பவர்களின் மனதைப் பரவசப்படுத்திச் செல்கிறது. 'தீர்த்தக் கரையினிலே' பாடல் நமக்குள் எதையோ மீட்டெடுக்கிறது.
பாரதியாரின் பாடல்களைத் தொகுத்து ஆல்பமாய் வெளியிடும் எண்ணம் எவ்வாறு வந்தது என பரத் கிருஷ்ணமாச்சாரியிடம் கேட்டேன்.
"முதலில் பாரதியின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்க ஆசைப்பட்டேன். நிதி வசதி காரணமாக அது இயலவில்லை. கடைசியில் "உங்களுக்கு யார் பாரதி?" என்ற கேள்வியோடு பட்டிமன்றப் பேச்சாளர்களையும், கவிஞர்களையும் அணுகினேன். நெல்லை கண்ணன், சாலமன் பாப்பையா, மயில்சாமி அண்ணாதுரை, பட்டிமன்ற ராஜா, பாரதி பாஸ்கர், பாரதி கிருஷ்ணகுமார் மற்றும் இசைக்கவி ரமணன் ஆகியோர் பாரதியார் பற்றிய தங்கள் கருத்துகளை அவரவர் பாணியில் கூறியதைத் தொகுத்தேன்.
அது 2007-ம் ஆண்டு. சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளான டிசம்பர் 12, காட்சி ஊடகங்களால் கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்த நேரம். மிகுந்த சிரமங்களுக்குப் பிறகு பாரதியாரின் பிறந்த நாளான டிசம்பர் 11-ம் தேதியன்று 'பிக் எஃப்எம்' வானொலி அந்தத் தொகுப்பை நாள் முழுவதும் ஒலிபரப்பியது. 2012-ம் ஆண்டு தந்தி தொலைக்காட்சியும், ஹலோ எஃப்.எம்.மும் அந்தத் தொகுப்பு முழுவதையும் காலை 5 மணியிலிருந்து இரவு 11 மணி வரை ஒளி, ஒலிபரப்பின.
இதன் தொடர்ச்சியாக, இந்தத் தலைமுறையினரின் பெரும்பாலானோருக்கு புரட்சிக் கவியாகவே கட்டமைக்கப்பட்டிருக்கும் பாரதியின் உள்ளிருக்கும் காதலனின் பிம்பத்தை வெளிக்கொணர விரும்பினேன்.
அந்த அடிப்படையில், பாரதியாரின் பாடல்களை பார் பரப்பச் செய்யும் முயற்சியின் விளைவுதான் 'காதலன் பாரதி'. 'யார் பாரதி?' என்னும் இசைத் தொகுப்பு வரிசையின் ஒரு தொகுப்புதான் 'காதலன் பாரதி'. இதை, உலகத் தரத்துடன் வெளியிட வேண்டும் என்ற எண்ணத்தில் நியூசிலாந்தின் வெலிங்டன் ஆர்கெஸ்ட்ரா கொண்டு இசையைப் பதிவு செய்தோம். சென்ற ஆண்டு 2014 டிசம்பர் 11 அன்று இந்தத் தொகுப்பு வெளியிடப்பட்டது.
மிகவும் எளிமையாக வெளியிடப்பட்ட இசைத் தொகுப்பு இது. இதை, பெரிய அளவில் கொண்டு செல்வதற்கான பொருளாதாரச் சூழல் இல்லாததால் இணையத்தையும் சமூக வலைதளத்தையும் நாடினேன். பாரதி எனும் காந்த சக்திக்கு பணம் செலவழித்து புரொமோஷன் எதற்கு? எந்த செலவுமின்றி யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர் மூலமாக தனிப் பக்கங்களை உருவாக்கி, பிரபலப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டோம். எதிர்பார்த்ததைவிட மிகுதியான வரவேற்பு கிடைத்தது. 'காதலன் பாரதி'யை ஐ-டியூனில் பலரும் ஆர்வத்துடன் பதிவிறக்கம் செய்து கேட்டு ரசித்து வருகின்றனர்.
இதோ தற்போது நடைபெற்று வரும் சென்னை புத்தகக் காட்சியில், 'காதலன் பாரதி'யை சிடி வடிவில் மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். 255, 256, 311, 312, 170 மற்றும் 171 ஆகிய ஸ்டால்களில் சி.டி. கிடைக்கும். நிச்சயம் நல்ல வரவேற்பு கிடைக்கும்" என்றார் நம்பிக்கையுடன்.
பரத் கிருஷ்ணமாச்சாரி
உங்களைப் பற்றி சிறு குறிப்பு கொடுங்களேன் என்று கேட்டதற்கு, "2004 முதல் தமிழ்த் திரையுலகில் ஒலி வடிவமைப்பாளராக பணியாற்றிக் கொண்டே புலம்பெயர் தமிழர்கள் பலர் எடுத்த குறும்படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதினேன்.
ஆடுகளம், வாகை சூட வா, வாரணம் ஆயிரம், எதிர் நீச்சல், தலைமுறைகள் உள்ளிட்ட 50-க்கு மேற்பட்ட திரைப்படங்களுக்கு ஒலிவடிவமைப்பை (Sound Designing), 'WAVE WORX' என்ற எனது நிறுவனத்தின் பெயரில் செய்திருக்கிறேன்.
2011-ல் ஒரு திரைப்படத்தில் இணை இயக்குனராக பணியாற்றினேன். இப்போது ஒரு திரைப்படத்துக்கு வசனகர்த்தாவாகப் பணியாற்றி வருகிறேன். மேலும் ஒரு குறும்படத்திற்குத் திரைக்கதை அமைத்து கொடுத்திருக்கிறேன். இப்போது இந்த வாய்ப்பு தேடும் இயக்குநர் நான்" எனும் பரத் கிருஷ்ணமாச்சாரி தன் ஒவ்வொரு படைப்பிலும் பாரதி தெரிவார் என்று உத்வேகத்துடன் சொன்னபோது, நினைவுக்கு வந்தது பாரதியின் புதிய ஆத்திசூடி வரியான 'கவ்வியதை விடேல்'.
'யார் பாரதி?' இசை வரிசை தொடர்பான முழு விவரம் தரும் இணைப்புகள்:
> அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கம்:>https://www.facebook.com/YaarBharathi
> அதிகாரபூர்வ யூடியூப் பக்கம்:>https://www.youtube.com/user/krishbharat
> 'காதலன் பாரதி' இசைத் தொகுப்பை கீழ்க்கண்ட ஐ-டியூனில் பெற்றிட:>https://itunes.apple.com/in/album/yaar-bharathi-kadhalan-bharathi/id953940376
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT