Published : 22 Jan 2015 10:30 AM
Last Updated : 22 Jan 2015 10:30 AM

ஜார்ஜ் கோர்டன் பைரன் 10

18-ம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பாவில் மனித உணர்ச்சிக்கும் உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் ரொமாண்டிசிசம் (romanticism) என்னும் கலை, இலக்கிய இயக்கம் உருவாகிவந்தது. அந்த இயக்கத்தை முன்னெடுத்த படைப்பாளிகளுள் ஒருவராகத் திகழ்ந்த பைரனின் பிறந்த தினம் இன்று (ஜனவரி 22). இவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

 லண்டன், ஹோலஸ் ஸ்ட்ரீட் என்ற இடத்தில் பிறந்தவர். பிறவியிலேயே ஒரு கால் வளைந்திருந்ததால் பள்ளியில் மற்ற பிள்ளைகளின் கிண்ட லுக்கும் கேலிக்கும் ஆளானார்.

 இவருக்கு 10 வயதாக இருந்த போது, அம்மாவுடன் நாட்டிங் ஹாமுக்கு குடிபெயர்ந்தார். முதலில் தெற்கு லண்டனில் டல்விச் நகரப் பள்ளியியிலும் பிறகு ஹாரோவிலும் பயின்றார். பிறகு கேம்ப்ரிட்ஜில் உள்ள ட்ரினிட்டி கல்லூரியில் பயின்றார்.

 18 வயதில் முதல் கவிதை ‘ஃபுகிடிவ் பீசஸ்’ வெளியானது. இதற்கு எழுந்த கடுமையான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாகவும், மறுப்பு கூறும் விதமாகவும், நியாயப்படுத்துதல்கள் அடங்கிய ஆயிரம் வரிகளுக்கும் மேற்பட்ட இங்கிலிஷ் பேர்ட்ஸ் அன்ட் ஸ்காட்ஸ் ரெவ்யுயர்ஸ் என்ற இவரது படைப்பு வெளிவந்தது.

 போர்ச்சுகல், ஸ்பெயின், அல்பேனியா, கிரேக்கம், உள்ளிட்ட பல நாடுகளுக்குச் சென்றார். கிரேக்கத்தில் தங்களது துருக்கிய எஜமானர்களிடமிருந்து விடுபட ஏங்கிக்கொண்டிருந்த மக்களை சந்தித்தார்.

 Childe Harold’s Pilgrimage என்னும் தனது சுய சரிதைக் கவிதையை இங்குதான் இவர் தொடங்கினார். 1811-ல் இங்கிலாந்து திரும்பிய இவர், அடுத்த வருடம் தன் கவிதையை முடித்து வெளியிட்டார்.

 வெளிவந்த உடனே இது மகத்தான வெற்றி பெற்றது. முதல் பதிப்பு வெளிவந்த மூன்றே நாட்களில் விற்றுத் தீர்ந்தது. அதன் பிறகு தொடர்ந்து கவிதைகளை வெளியிட்டார். தி புரோபசி ஆஃப் டான்டெ, டான் ஜுவன் மற்றும் கவிதை நாடகங்களான ஃபெலியரோ, சர்டான்பாலஸ், தி டு ஃபோஸ்காரி ஆகிய பல படைப்புகள் 1821-ல் வெளிவந்தன.

 லண்டன் கிரீக் கமிட்டி இவரை நாடி வந்து துருக்கிக்கு எதிரான கிரேக்க விடுதலைப் போரில் உதவும்படி கேட்டுக்கொண்டனர். உடனடியாக இதை இவர் ஒப்புக்கொண்டார். போருக்காக 4000 பவுன்ட் உதவியதோடு போர் திட்டமிடுதல்களிலும் கலந்துகொண்டார். இத்தாலியின் புரட்சி அமைப்பின் தலைவர்களில் ஒருவராகப் பணியாற்றினார்.

 இதனால் கிரேக்கர்கள் இவரை ஒரு தேசிய வீரனாக கொண்டாடினர். தனது படைப்புகளால் மட்டுமல்லாமல், வாழ்க்கை பாணியாலும் பரபரப்பாக பேசப்பட்டார்.

 இவரது வாழ்க்கை, ஆடம்பரம், காதல், கடன்கள், பிரிவுகள் என்ற அதீதமான ஏற்ற இறக்கங்களை உள்ளடக்கியிருந்தது. மாபெரும் ஐரோப்பியக் கலைஞர்களில் ஒருவராக கருதப்படுவதோடு, இன்றும்கூட உலகம் முழுவதும் இவரது கவிதைகள் பெரும் ஆர்வத்துடன் வாசிக்கப்பட்டு வருகின்றன.

 ஆங்கில -ஸ்காட்டிய புனைவியல் இயக்கக் கவிஞர்களில் முக்கியமானவராகப் போற்றப்பட்ட இவர் உடல்நிலை பாதிப்பால் 1824-ல் கிரேக்க நாட்டின் மிசோலோங்கியில் 36 வயதில் காலமானார். இவரது இதயம் தனியாகப் பிரிக்கப்பட்டு அங்கேயே புதைக்கப்பட்டது. மீதி உடல்தான் இங்கிலாந்து அனுப்பப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x