Published : 29 Jan 2015 10:54 AM
Last Updated : 29 Jan 2015 10:54 AM
உலகப் புகழ் பெற்ற ரஷ்ய சிறுகதை எழுத்தாளரும் நாடகாசிரியருமான ஆன்டன் பாவ்லோவிச் செக்கோவ் (Anton Pavlovich Chekhov) பிறந்த தினம் இன்று (ஜனவரி 29). இவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
ரஷ்யாவின் டகான்ராக் என்ற ஊரில் பிறந்தார். அம்மா தனது ஆறு குழந்தைகளுக்கும் நிறைய கதைகள் கூறுவது வழக்கம். மளிகைக் வியாபாரத்தில் நஷ்டமடைந்ததால் குடும்பத்துடன் அப்பா மாஸ்கோ சென்றார். செக்கோவ் மட்டும் சொந்த ஊரிலேயே பள்ளிப் படிப்பை தொடர்ந்தார்.
பள்ளியில் படித்தபோதே நூற்றுக்கணக்கான நகைச்சுவை சித்திரக்கதைகளை புனைப் பெயரில் உள்ளூர் பத்திரிகைகளில் எழுதி வந்தார். அந்த வருமானம் பொருளாதார ரீதியில் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த தன் குடும்பத்துக்கு பெரும் ஆதரவாக இருந்தது.
1879-ல் நிதியுதவி கிடைத்ததால், மருத்துவம் பயின்றார். மருத்துவராகப் பணியாற்றிக்கொண்டே சிறுகதைகள் எழுதத் தொடங்கினார். இவரது கதைகள் மாஸ்கோ, பீட்டர்ஸ்பர்க் பத்திரிகைகளில் வெளிவந்தன. ஐந்தே ஆண்டுகளுக்குள் 400-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதினார்.
ஒரு கட்டத்தில் மருத்துவத் தொழிலை விட்டுவிட்டு, முழு நேர எழுத்தாளராகிவிட்டார். 44 ஆண்டுகால வாழ்க் கையில் 24 ஆண்டுகள் எழுதிக்கொண்டே இருந்தார். இவரது படைப்புகள் தமிழிலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. நாடகங்களும் எழுதியுள்ளார். இவரது முதல் நாடகம் தி சீகல் படுதோல்வி அடைந்தது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு புகழ்பெற்ற நாடக இயக்குநர் ஸ்தனிஸ்லாவ்ஸ்கி தனது மாஸ்கோ ஆர்ட் தியேட்டர் மூலம் இவரது நாடகம் மீண்டும் மேடையில் அரங்கேறி வெற்றி பெற்றது. அவருடன் நட்பு ஏற்பட்ட பிறகு, செகோவ் மேலும் மூன்று நாடகங்களை எழுதினார். அனைத்தும் வெற்றிபெற்றன.
பணமும் புகழும் குவிந்த நேரத்தில் காசநோய் தாக்கியது. ஆனாலும் தங்கு தடையின்றி எழுதி வந்தார். வாழ்க்கையில் எவ்வளவு துன்பங்களை எதிர்கொண்டாலும் அவை எதையும் தன் எழுத்துக்களில் அவர் கொண்டு வந்ததேயில்லை. லியோ டால்ஸ்டாய், மக்ஸிம் கார்கி ஆகியோர் இவரது நண்பர்கள்.
தன் எழுத்துகளில் சீர்திருத்தக் கருத்துகளையோ தர்ம நெறிகளையோ உபதேசம் செய்ததில்லை. திறமையோடு, எதிலும் ஓர் அளவோடும் அழகோடும் செயல்பட வேண்டும். நல்ல மனிதனாக இருக்க வேண்டும் என்பதே இவரது வாழ்க்கைத் தத்துவம்.
போலித்தனத்தை வெறுத்தவர். வாழ்க்கையின் மிக நுட்பமான விஷயங்களை மிக எளிமையாக எழுதியவர். இவரது படைப்புகள் அதிக வார்த்தைகளில் இல்லாமல் மிகவும் சுருக்கமாகவும் நகைச்சுவையோடும் இருக்கும்.
வார்ட் நம்பர் 6, தி லேடி வித் தி டாக் உள்ளிட்ட மொத்தம் 568 சிறுகதைகளும் நாடகங்களும் எழுதியுள்ளார்.
இவரது நாட்குறிப்புகளும், கடிதங்களும் தனித் தொகுதி களாக வெளியாகியுள்ளன. நவீன சிறுகதை மன்னராகவும் 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பகால முன்னணி நாடகாசிரியராகவும் போற்றப்பட்ட இவர், 1904, ஜூலை 15-ஆம் தேதி, 44-ஆவது வயதில் காலமானார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT