Published : 18 Jan 2015 10:27 AM
Last Updated : 18 Jan 2015 10:27 AM
நெடுநாட்களாக எனக்கு இருந்த விருப்பத்தின்படி அண்மையில் வேளாண்மை பல்கலைக்கழம் ஒன்றில் உரையாற்றச் சென்றிருந்தேன். நான் ஓர் உழவனின் மகன் என்பதும், இன்னும்கூட உழவுத் தொழிலை விடாமல் செய்துவருபவன் என்பதாலும் மாணவர்களோடு நெருக்கமாக உரை யாடினேன். ஒரு சிலரைத் தவிர வேளாண்மைத் தொழிலுக்கான ஆராய்ச் சியிலோ, அதன் பொருட்டு வாழ்வை கழிப்பதிலோ விருப்பமில்லாதவர்களாக அவர்கள் இருந்தார்கள். ஐ.ஏ.எஸ் படித்து ஆட்சிப் பணிக்குச் செல்ல இந்தப் படிப்பு எளிதாகவும், குறுக்கு வழியாகவும் இருப்பதால்தான் இதனைப் படிப்பதாகவும் அவர்கள் சொன்னது எனக்குள் வேளாண்மைப் பற்றிய கவலையை மேலும் அதிகரித்தது.
மானியத்தையும், இலவசங்களை யும் கொடுத்து உழவுத் தொழிலை வளர்த்துவிடலாம் என எல்லா அரசாங்கங்களும் நினைப்பதுபோலத் தான் அவர்களும் பொறுப்பற்றவர்களாக இருந்தார்கள். அரசாங்கம் எந்த ஒரு திட்டத்துக்கு, செயலுக்கு மானியம் கொடுக்கிறதோ… அப்போதே அந்தத் திட்டம் செத்து விட்டது அல்லது செத்துக் கொண்டிருக் கிறது என்பதுதான் பொருள். 100 நாள் வேலை, 20 கிலோ அரிசி, இலவச மின்சாரம் இப்படி அனைத்தும் எதைக் காட்டுகிறது? வேளாண்மை லாபகரமாக இல்லை, செத்துக் கொண்டிருக்கிறது அல்லது செத்துவிட் டது என்பதைத்தானே!
அதனை மீட்டெடுக்க, சரிசெய்ய எந்த விதத் திட்டமும் வழிவகைகளும் தெரியாமல் உயிர் தண்ணீர் - பால் ஊற்றுகிற வேலைதான் இந்த மானியங்கள். பிச்சைக்காரர்களுக்கு என்ன மரியாதையோ அதேதான் இந்த நாட்டில் ஒவ்வோர் உழவனுக்கும். இனி, எந்தத் திசையில் பயணிப்பது எனத் தவித்து, தடுமாறிக் கொண்டிருக்கும் வேளாண்மை, இன்று ஒரு தொழிலாக வளர்ச்சி பெற்றுள்ளது.
ஆனால், அதற்கான உள்கட்டுமானங் களோ, சந்தையோ ஏற்படுத்தவில்லை. கோடிக் கோடியாக திட்டங்கள் அறிவிக்கப்படுகிறது. அவை செயல் படுத்தப்படுகிறதா என்பதை கண் காணிப்பது யார்? வேளாண்மைப் பற்றிய அடிப்படை அறிவில்லாதவர்கள், மரபுரீதியாக அதனைத் தொழிலாகச் செய்யாதவர்கள், நிலத்தில் கால் பதிக்காதவர்கள், ஒரு பிடி மண் ணைக்கூட அள்ளித் தொட்டுப் பார்க்காதவர்கள்.
இவர்கள்தான் இந்தத் தொழிலை வழி நடத்துகிறார்கள். பன்னாட்டு நிறுவனங்களுடன், பன் னாட்டு தரகர்களுடன் கைகோத்து அசாங்கத்துக்கு திட்டங்களைத் தீட்டிக் கொடுத்து, வேளாண்மை விஞ்ஞானி எனும் பெயரில் கோடிக்கணக்கில் கல்லாக் கட்டுவதும், இந்திய அரசின் உயரிய விருதினைப் பெற்று உழவர்களுக்கு ஆலோசனை அளிப்பதும் இவர்கள்தான்.
‘தானே’ புயலின் போதுதான் நான் வேளாண்மைத் தொடர்பாக அதிகாரம் செலுத்தும் பதவியில் உள்ளவர்களையும், அதிகாரிகளையும் தொடர்ந்து சந்தித்தேன். மனமொடிந்த நிலையில் நேரத்தை வீணாக்குவதை உணர்ந்து இனி சந்திப்பதில் பலனில்லை எனும் முடிவுக்கு வந்தேன். இதே துறையில் பல சிறந்த வல்லுநர்களையும், ஆராய்ச்சியாளர்களையும் எனக்கு நன்கு தெரியும்.
அவர்களை செயல் படவிடுவது இல்லை. ஒன்று, அவர்களை ஓரிடத்தில் தொடர்ந்து செயல்படாமல் வேறு இடத்துக்கு மாற்றுவது அல்லது அவர்களுக்குத் தொடர்பு இல்லாத கடைநிலைப் பணிகளைத் தந்து அவமானப்படுத்தி, அடக்கி வைப்பது என்பதைத்தான் அவர்களுக்கு மேலுள்ளவர்கள் செய்து வருகிறார்கள். அவர்களை செயல்படவிடாமல் தடுப்பதால் இந்த வேளாண்மைத் துறைக்கும், நம் உற்பத் திக்கும் எவ்வளவு பெரிய இழப்பு, முட்டுக்கட்டை!
இந்தத் தொழிலைச் செய்ய பெரும்பான்மையான உழவர்கள் இன்னும் கந்து வட்டிக்குத்தான் கடன் வாங்குகிறார்கள். வங்கிகள் ஏற்கெனவே நல்ல நிலையில் உள்ள உப வருமானமுள்ள ஆசிரியர்கள், வணிகர்கள், சிறுதொழில் செய் வோர், அரசு ஊழியர்கள் என இவர்களுக்குத்தான் கடனைக் கொடுக்கிறது. அரசும், பல்கலைக்கழகங்களும், வேளாண்மைத் துறையும் தரும் மானியங்களைப் பெரியப் பெரிய பண்ணைகளும், பணம் படைத்தவர் களும், பெரிய நிறுவனங்களும்தான் பயன்படுத்திக் கொள்கின்றன.
உதாரணத்துக்கு டிராக்டர் வாங்க நான்கு லட்சம் தேவைப்பட்டால், இரண்டு லட்சத்தை மானியமாகப் பெறலாம். இதனை நமது பெரும்பான்மையான சிறிய உழவர்கள் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது.
சில நாட்களுக்கு முன் சாலை வழியாக மதுரை சென்று வந்தேன். இந்த 480 கிலோ மீட்டர் தொலைவில் சாலையின் இரு பக்கங்களிலும் விளைபயிர்களைக் காண்பது அரிதா கவே இருந்தது. கால்நடைகள் தென்படவே இல்லை. அவ்வளவு விளை நிலங்களும் ஒன்று விவசாயம் செய்வது நிறுத்தப்பட்டு விற்றுத் தீர்ந்துவிட்டன. அல்லது விற்பனைக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தின் எந்த ஊருக்குப் பயணப்பட்டாலும் இதே நிலைதான்.
ஏற்கெனவே உழவுத் தொழிலை செய்த குடும்பம் ஆங்கிலக் கல்வி, கம்ப்யூட்டர் தொழில், நகர வாழ்க்கை என அதனைச் செய்யாமல் விட்டுவிட்டு ஓடிக் கொண்டிருக்கிறது. அதனையும் மீறி செய்பவர்கள் மின்சாரத்தை மட்டுமே நம்பி ஆயிரம் அடிகளுக்கும் மேலாக ஆழ்துறை கிணறு அமைத்து விவசாயம் செய்து நட்டத்துடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
வீடுகளில் கால் நடைகளில் இருந்து கிடைத்த குப்பைக் கழிவுகளைக் கொண்டு உழவுத் தொழிலைச் செய்தவர்களை அதிக பணம் செலவழித்து உரத்தையும், பூச்சி மருந் தையும் போட்டு இன்று ஒவ்வோர் உழவனையும் கடனாளியாக்கி, அர சாங்கத்திடம் கையேந்தி பிச்சைக் கேட்க வைத்ததும், தற்கொலை செய்து கொள்ளச் செய்ததும் இந்த ஆய்வு மையங்கள்தான். வசதி படைத்தவன் இயந்திரங்களைக் கொண்டு செய்கிறான். இல்லாத பெரும்பான்மை உழவர் கள் உழவுக் கருவி களும், உழவு மாடுகளும் இன்றி கைபிசைந்து கோவ ணத்துடன் நிற்கின்றனர்.
இந்த லட்சணத்தில் 100 நாள் வேலைத்திட்டம் ஒட்டுமொத்த உழவுத் தொழிலை யும் குழி தோண்டி புதைத்து விட்டது. வேலைக்கு ஆளின்றி தவிக்கும் ஒவ்வொரு விவசாயி யையும் கேட்டுப் பாருங் கள், அவன் குமுறல் புரிய வரும். இலவசத் திட்டங்கள் மூலம் மக்களை உழைப்பில், உற்பத்தியில் ஈடுபடாமல் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டே இருங்கள் எனச் சொல்லி அவர்களை சோம்பேறியாக்கி, எதைப் பற்றியும் சிந்திக்காதபடி பெயரளவில் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பது மாதிரி செய்துவிட்டார்கள். இந்த குடிமகன்கள் வாக்களித்தால்தானே ஆட்சி நாற்காலியில் அமர முடியும் அதற்காகத்தான் இப்படிப்பட்ட திட்டங் கள் அனைத்தும்.
உற்பத்தியில் மாற்றம் கொண்டு வருவதற்கும், விளைநிலங்களை மலடு ஆகாமல் தடுப்பதற்கும் எந்த முயற்சியும், திட்டமும் இல்லை. அதற்கான ஆராய்ச்சியும் இன்று நடைமுறையில் இல்லை. அத்தனை ஆராய்ச்சிகளும் அடித்தட்டு மக்களுக் காக பயன்படவில்லை. வசதி படைத்த பணக்கார விவசாயிகளுக்கும், பன் னாட்டு, இன்னாட்டு நிறுவனங்களுக்கும் பயன்படுவதாகவே உள்ளது. இதைத் தான் ஒரு கவிஞன் இப்படி கூறுகிறான்.
‘வேளாண் தொழில்நுட்பங்கள்
அளவெடுக்கப்படாமல்
தைக்கப்பட்ட
ஆயத்த ஆடைகள்.
பொருந்தியவர்கள்
போட்டுக் கொண்டார்கள்.
பொருந்தாதவர்கள்
இன்னும் கோவணத்துடன்!’
- சொல்லத் தோணுது…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: thankartamil@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT