Published : 10 Jan 2015 09:50 AM
Last Updated : 10 Jan 2015 09:50 AM

ஜெயகாந்தனோடு பல்லாண்டு - 15

பொதுக்கூட்ட மேடையொன்றில் ஜெயகாந்தனின் செருப்பு கழன்று விழுந்த சம்பவத்தை சென்ற வாரம் குறிப்பிட்டிருந்தேன். அதைப் போலவே, சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், ஜெயகாந்தன் தன் விரலில் அணிந்திருந்த மோதிரம் கழன்று விழுந்து, பின்னர் பார்வையாளர்களில் ஒருவர் அதை மேடையேறிக் கொண்டுவந்து கொடுத்த நிகழ்ச்சியை, கோபண்ணா ‘நேரு 125’ விழாவில் பேசும்போது நினைவுகூர்ந்தார்.

கோயம்புத்தூர், பி.எஸ்.ஜி. கல்லூரியில் என் மகன் சிவகுமார் படிக்கிற போது, அவன் அங்கே ஏற்படுத்திய ‘சிந்தனை அரங்கம்’ என்கிற அமைப்பு, ஆண்டுகள் பல கடந்து பெரிதும் வளர்ச்சி பெற்று, மூன்று நாள் கொண்டாட்டம் என்கிற அளவுக்கு ஆன பிறகு, அந்தக் கல்லூரிக்கு ஜெயகாந்தன் மூன்று நாட்களில் ஒரு நாள் சொற்பொழிவாற்றச் சென்றார். முன்பு, அங்கே விடுதி காப்பாளராக இருந்த சம்பத்குமார் இப்போது அந்தக் கல்லூரியின் முதல்வராகியிருந்தார்.

அவரது பேச்சை, ‘கலைமகள் காலில் கொலுசு ஒலிக்க அந்த அறை முழுவதும் உலவுவது போலத் தோன்றியது!’ என்று பின்னால் நான் ஜெயகாந்தனிடம் சொன்னேன்.

அவர் பேசி முடித்த பின்பு, ‘‘கேள்வி கேட்போர், கேட்கலாம்!’’ என்று அறிவிக்கப்பட்டது. சில பேர் அவரவர் அமர்ந்திருந்த ஆசனங்களில் எழுந்து நின்று தங்கள் கேள்விகளைக் கேட்டனர்.

மேடையின் அருகே நின்று கொண்டிருந்த ஒரு பெண், மேடை மீதே ஏறிவந்து நின்றுவிட்டது. ‘‘பெண்கள் முன்னேற்றம் என்று சொல்கிறார்களே… உண்மையாகவே பெண்கள் முன்னேறி இருக்கிறார்களா? அதற்கு என்ன சாட்சி…’’ என்று கேட்டது. அதன் குரலும், அசைகின்ற கரங்களும், சுள்ளென்று சுடர்விட்ட முகமும், பெண்மையின் நளினத்தையும் தைரியத்தையும் புலப்படுத்தின. தென்றல் சற்று உக்கிரம் பெற்றதைப் போல் அந்தச் சிறிய பெண் மேடையில் நின்றிருந்தது.

‘அதற்கு என்ன சாட்சி?’’ என்று அந்தப் பெண் கேட்டவுடனேயே, ஜெயகாந்தன் ஓர் ஆனந்தப் புன்னகையையுடன் தனது ஒரு கரம் நீட்டி, அந்தப் பெண்ணின் தலை முதல் கால் வரை ஆரத்தி காட்டுவது போல், ஏற இறங்கக் காட்டி, ‘‘நீயே அதற்கு சாட்சி!’’ என்றார். அந்த அறையின் உள்ளிருந்த வானம், கைதட்டல் ஓசைகளினால் பூரிதக் கரைசல் அடைந்து, ஜன்னல்களின் வழியாக வெளியே வழிந்தது.

தஞ்சாவூரில் ஒருமுறை எல்.ஐ.சி ஊழியர் சங்கத்தினரோ, வங்கி ஊழியர் சங்கத்தினரோ அவரை விரும்பி அழைத்து ஓர் அடக்கமான அரங்கில் பேச வைத்தனர்.

பெரும்பாலும் ஜெயகாந்தனின் மேடைப் பேச்சு என்பது, கோஷங்களையும் முழக்கங்களையும் கொண்டது அல்ல! அது, கேட்போரை உணர்ச்சி வசத்தில் ஆழ்த்தும். அதே சமயத் தில், அவர்களின் ஆழமான சிந்தனை யைக் கிளர்த்துவதாகவும் இருக்கும். அப்படி அவர்களிடம் பேசிக் கொண்டி ருக்கும்போது ஓரிடத்தில் ஜெயகாந்தன் திடீரென நிறுத்தி, ‘‘May I Smoke?’’ என்று கூட்டத்தினரிடம் அனுமதி கேட்டார்.

அவர்கள் சம்மதம் சொன்னதும், மேடையிலேயே ஒரு சிகரெட்டைப் பற்றவைத்து, இரண்டு மூன்று முறை ஊதிய பிறகு, அவர் தன்னுடைய பேச்சை மேலும் தொடர்ந்து விறு விறுப்பாக வளர்த்து, இனிதே நிறைவு செய்தார். இந்த மாதிரியான உதாரணம் எந்தக் கூட்டங்களிலும் நான் கண்டதில்லை.

ஒரு கூட்டத்தை, அந்தரங்கமான உரையாடல் என்கிற வரம்புக்குள் வலைவீசிக் கொண்டு வருகிற வலிமையும் ஆற்றலும் அவருடைய பேச்சுக்கு இருந்தது.

ஒருமுறை, ஒய்.எம்.சி.ஏ அரங்கத்தில் நடந்த ஒரு கூட்டத்தில், ‘ரிஷிமூலம்’ கதையின் மூலத்தைப் பிரஸ்தாபித்து ஜெயகாந்தன் பேசினார். அவரது அந்தப் பேச்சின் வெளிப்படையான தன்மையைச் சிலாகித்து, கூட்டம் முடிந்து படிகளில் இறங்குகிறபோது, ஜெயகாந்தனின் தோள்மீது கை போட்டு அணைத்தவாறு, கி.வா.ஜெகநாதன் பேசிக் கொண்டு வந்தது என் மூளையில் படம் பிடித்து வைக்கப்பட்டுள்ளது.

அதே ஒய்.எம்.சி.ஏ கட்டிடத்தில் நடைபெற்ற இன்னொரு கூட்டத்தில் ஜெயகாந்தன் பேசினார். ‘‘இங்கே கூடியிருக்கிற நாம் அனைவரும் ஒரு வரிசைக்கிரமத்தில் இந்த உலகுக்குள் வந்திருக்கிறோம். ஆனால், நாம் இந்த உலகத்தைவிட்டுப் போவது, அந்த வரிசையிலேயே இருக்காது!’’

இந்தக் கூட்டத்தின் முடிவில், எழுத்தாளர் கு.அழகிரிசாமி, ஜெயகாந்தனைப் பாராட்டினார். அப்போது, அருகே இருந்து நான் இதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஜெயகாந்தன் சொன்னதையொட்டி, தான் உணர்ந்த ஓர் அனுபவத்தை அவர் சொன்னார். பின்னாளில் கு.அழகிரிசாமி காலமான செய்தியை நான் படித்தபோது, அவர் இன்னும் காலமாகவில்லை என்று நான் கருதிக் கொண்டேன்.

அந்த மூத்த எழுத்தாளர்களெல்லாம் தங்கள் வம்சாவளியில் வந்து பிறந்த ஒரு செல்லக் குழந்தையாகவே ஜெய காந்தனை பாவித்தனர்.

அவரது எழுத்தைப் போலவே அவருடைய பேச்சும் தமிழ்நாடு முழுவதும் பெரிய தாக்கத்தை அந் நாளில் ஏற்படுத்தியது. கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய், கேளாரும் வேட்ப விழைவதாய் அவர் பேச்சு இருந் தது. சொலல் வல்லன், சோர்விலன், அஞ்சான் என்று குறள் கூறுகிற முப்பரிமாணங்களும் கொண்டு அவர் தமிழ் மக்களின் முன்னே நின்றார்.

விவேகாநந்தர் ஒருமுறை பேசிக் களைத்த ஒரு சமயத்தில் சொன்னார்:

‘‘போங்கள்! சிந்திப்பதும் நானே, அதை நாடெங்கிலும் போய்ப் பிரச்சாரம் செய்வதும் நானேவா?

இந்த இரண்டு காரி யங்களையும் என்னால் ஏக காலத்தில் செய்ய முடியாது. என்னால் இனிமேல் அங்கும் இங்கும் போய்ப் பேசிக் கொண்டிருக்க முடி யாது. என்னால் முடியும் என்கிறீர்களா? நான் நன்கு சிந்திக்க வல்லேன். சிந்தித்தவற்றை எனக்கு நெருக்கமான ஒரு பத்துப் பேரிடம் நெருப்பைக் கக்கிக் கொண்டு பேச வல்லேன். அவர்கள் வேண்டுமானால் நாடெங்கிலும் போய் அதைப் பிரச்சாரம் செய்யட்டும்!’’ என்றார்.

‘பேச முடியாது’ என்று அவர் முதலில் சொன்னதையும், அப்புறம், ‘நெருக்கமான நண்பர்களிடம் நெருப்பைக் கக்கிக் கொண்டு பேச வல்லேன்’ என்று சொல்வதையும் நாம் ஒருங்கிணைத்து உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஜெயகாந்தன், விவேகாநந்தர் அன்று நின்ற அந்த நிறுத்தத்தில் இப்போது நிற்கிறார் என்றுதான் நான் நினைக் கிறேன்.

லண்டனில் இருக்கும் டாக்டர் ராம் அவர்கள், ஒரு மாபெரும் விழாவாக ஜெயகாந்தனின் 80 வயது நிறைவைக் கொண்டாடி, ‘ஜெயகாந்தன் கதைகள்’ என்கிற நூலை வெளியிட்ட கூட்டத்தில், ஏற்புரையின்போது ஜெயகாந்தன் பேச எழுந்தவர், மண்ணையும் வானையும் அளக்கும் தன் வார்த்தைப் பெருக்குகளைக் கைவிட்டு, ‘‘அனைவருக்கும் நன்றி, வணக்கம்!’’ என்று தன் உரையை மிக மிகச் சுருக்கமாக முடித்துக் கொண்டது, இவ்வாறு என்னை எண்ண வைத்தது.

- வாழ்வோம்…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள:

pisakuppusamy1943@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x