Published : 30 Dec 2014 10:50 AM
Last Updated : 30 Dec 2014 10:50 AM
உலகம் போற்றும் ஆன்மிக ஞானி, அத்வைத வேதாந்த நெறிகளை போதித்த மகான் ‘பகவான் ரமண மஹரிஷி’ அவதரித்த நாள் இன்று (டிசம்பர் 30). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் பிறந்தவர். இயற்பெயர் வேங்கடராமன். மதுரை ஸ்காட் பள்ளியில் படித்தார். தந்தை மறைவுக்குப் பிறகு மதுரையில் மாமா வீட்டில் அம்மாவுடன் வசித்தார்.
* திருவண்ணாமலையில் இருந்து வந்த மாமாவின் நண்பர், அந்த ஊர் பற்றி கூறிய விஷயங்கள் இவருக்குள் ஆழமாக வேரோடின. அப்போதே பெரியபுராணம் உள்ளிட்ட ஏராளமான ஆன்மிக நூல்களைப் படித்துவந்தார்.
* இறைவனை அறியும் உந்துதல் பிறந்தது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அடிக்கடி செல்லத் தொடங்கினார். 17 வயதில் சித்தப்பா வீட்டில் இருந்தபோது, திடீரென மரண அனுபவம் போன்ற உணர்வுக்கு ஆளானார். தன்னையே உள்முகமாக கேள்வி கேட்டுக்கொள்ளும் சுய அறிதலை நாடியது அவரது மனம்.
* ‘மரணத்தின்போது உடல் மட்டுமே இறக்கிறது; ஆன்மா அல்ல. நான் என்பது வெறும் உடல்தான். ஆன்மாதான் எல்லாம்வல்ல பரம்பொருள்’ என உணர்ந்தார்.
* உறவினர்கள், வீடு, வாசலைத் துறந்து ரயில் ஏறி திருவண்ணாமலையை அடைந்தார். அருணாசலேஸ்வரர் கோயிலில் தியானம் செய்துவந்தார். சிறுவர்களின் விஷமம் அவருக்குத் தொந்தரவாக இருந்ததால், கோயிலின் பாதாள லிங்கம் அருகே சென்று தியானத்தில் மூழ்கினார்.
* இவரது மகத்துவத்தை உணர்ந்து பலரும் சீடர்களாயினர். அதன் பிறகு விருப்பாட்சி குகை, கந்தாஸ்ரமம், பாலாக்கொத்து என பல இடங்களுக்குச் சென்றார். திரும்பவும் திருவண்ணாமலை அடிவாரம் வந்து தங்கினார். பெரும்பாலும் தியானத்தில் இருந்த அவரை ‘மவுன குரு’ என்றனர் மக்கள். அங்கு ரமணாஸ்ரமம் உருவானது. உலகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் வந்து இவரிடம் தீட்சை பெற்றனர்.
* இவரது சீடர் காவ்யகண்ட கணபதிமுனி, சமஸ்கிருத பண்டிதர். அவர்தான் இவருக்கு ‘ரமண மஹரிஷி’ என்று பெயர் சூட்டினார். உபநிடதங்கள், அத்வைத வேதாந்த நெறிகளை எல்லோருக்கும் புரியும் வகையில் உபதேசித்தார் ரமணர்.
* அவரது உபதேசங்கள் தொகுக்கப்பட்டு பல புத்தகங்களாக வெளிவந்துள்ளன. அவற்றில் முதன்மையானது ‘நான் யார்?’ என்ற புத்தகம். ஆதிசங்கரரின் ‘ஆத்மபோதம்’ நூலை தமிழில் வெண்பாக்களாக வழங்கியுள்ளார். உள்ளது நாற்பது, ஏகான்ம பஞ்சகம், ஆன்ம வித்தை உள்ளிட்ட பல நூல்களை அருளியுள்ளார்.
* கருணையே உருவானவர். எல்லா உயிர்களிலும் உறைந்திருப்பது ஆன்மாதான் என்பதை முழுமையாக உணர்ந்தவர். நாய், பசு, அணில் போன்ற ஜீவராசிகளையும் அவன், இவள் என்றே குறிப்பிடுவார்.
* 58 வயதில் நிர்வாண நிலை அடைந்தார். 71 வயதில் முக்தி அடைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT