Last Updated : 28 Dec, 2014 09:28 AM

 

Published : 28 Dec 2014 09:28 AM
Last Updated : 28 Dec 2014 09:28 AM

சொல்லத் தோணுது 15 - படிக்க... கிழிக்க...

மாற்றங்களை எளிதில் ஏற்றுக் கொள்ளாத மனங்கள் எல் லாம் எல்லாவற்றையும் ஏற் றுக் கொள்ளத் தயாராகிவிட்டன. மாற்றங்கள்தான் வாழ்க்கை என ஒரு வரியில் சொல்லிவிடலாம். எதில்தான் மாற்றம் இல்லை? உண்ணும் உணவில், உடுத்தும் உடைகளில், அன்றாடப் பழக்க வழக்கங்களில், பேசும் பேச்சுக்களில், நினைக்கும் நினைப்புகளில், சிந்திக்கும் சிந்தனைகளில், வசிக்கும் வீடுகளில், போக்குவரத்து ஊர்திகளில், ஊடகங்களில், சுற்றுப்புறச் சூழ்நிலை களில்… என எல்லாம் மாறிக்கொண்டே இருக்கின்றன.

மாற்றங்களை நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும்… அது நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும்.

இது இப்படித்தான் இருக்க வேண் டும் என இனி எதைப் பற்றியும் சொல்வதற்கு இல்லை. அரசியல் என்பது தொண்டாக இருந்தது மாறிப் போய்… பிழைப்பாகவும், பணம் சேர்க்கும் தொழிலாகவும் மாறிப் போன மாதிரிதான்!

காந்தியையும், காமராஜரையும், கக்கனையும் இன்னும் எவ்வளவு நாட் களுக்குத்தான் சொல்லிக் கொண்டே இருக்கப் போகிறோம்?

நகரங்களில் நாள்தோறும் புதிதாக வந்து குடியேறுபவர்கள் மீண்டும் கிராமங்களுக்குத் குடியேறுவதில்லை. பண்டிகை விடுமுறைகளுக்கோ, நெருங்கிய உறவினர் காரியங்களுக்கோ எப்போதாவது சென்று வருகிற மாதிரி மட்டும் அவரவர்கள் பிறந்து வளர்ந்த கிராமங்கள் தொலைவில் போய்க் கொண்டிருக்கின்றன.

நகரம்தான் தனக்கு சோறு போடும் என ஒவ்வொருவரும் எண்ணத் தொடங்கிவிட்டனர். இப்படியே போனால் இன்னும் சில ஆண்டுகளில் நகரங்கள் மட்டுமே இருக்கும்.

கிராமங்கள் தேய்ந்து நகரங்களாக மாறிக் கொண்டிருப்பது நல்லதுதானா? நல்லது என்றால் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டுவிடலாம். நல்லதில்லை என்றால்… என்ன செய்யலாம்? யார் செய்வது? ஆட்சியாளர்கள்தான் செய்ய வேண்டும்!

‘ஒரு நாட்டுக்கு கிராமங்கள்தான் முதுகெலும்பு’ என காந்தி சொன்னார். ஆனால், கிராமங்களை அழிக்கிற வேலை மட்டும்தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு மேல் இந்தப் பலூனை ஊத முடியாது. ஊதினால் வெடிக்கும் எனத் தெரிந்தும் ஊதிக் கொண்டேயிருக்கிறோம்.

நகரத்துக்கு வந்து குவிபவர்களைக் கட்டுப்படுத்தாமல், அவர்களுக்கான நலத் திட்டங்களையும், நகர வளர்ச்சியையுமே செய்து கொண்டிருக் கிறோம் என்று சொல்லிக்கொண்டு… ஆள்பவர்கள் பெருமை அடைவது எந்த வகையில் சரியானது? மக்கள் எதற்காக நகரங்களை நாட வேண்டும்? அந்த மக்களின் தேவைதான் என்ன? என்பது பற்றி அவர்கள் சிந்திக்கிறார்களா?

இந்தியாவில் குடியரசுத் தலைவரோ, தலைமை அமைச்சரோ, மற்றைய அமைச்சர்களோ, முதலமைச்சர்களோ, அதிகாரிகளோ... கிராமங்களில் என்ன தான் நடக்கிறது என அங்கு நேரில் சென்று பார்த்திருக்கிறார்களா? கிரா மத்து மக்களின் வாக்குகள் வேண்டும் என்பதற்காக தேர்தல் வந்தால் மட்டும் அங்குச் சென்று 20 நாட்கள் ஓயாமல் உழைக்கிறார்கள். ஹெலிகாப்டரில் இருந்து கிராமங்களைப் பார்த்தால் என்ன தெரியும்? சாலை வழியாக வந்தால் நெடுஞ்சாலைகளில் நட்டு வைக்கப்பட்டுள்ள அவர்களின் விளம்பரப் பதாகைகளே மக்களை மறைத்துவிடும் என்பதால்தான் ஹெலிகாப்டரில் இருந்து பார்க்கிறார்களோ எனத் தோன்றும்.

இவர்களெல்லாம் வாரத்துக்கு இரண்டு நாள்… என கிராமங்களில் தங்கி மக்களின் தேவைகளை அறிந்து கொள்ள முடியாதா? தங்களின் தலைவர் களுக்குப் ஏதாவது பிரச்சினை என்றால் மண்சோறு தின்பவர்கள், தரையில் விழுந்து புரள்பவர்கள் கிராமத்து வீட்டில் தங்கி அந்த மக்கள் தருகின்ற உணவை உண்டு, அலுவல்களைக் கவனிக்க முடியாதா?

குடியரசுத் தலைவர் அந்த மாளி கையை விட்டு வெளியே வருவதே அரிதாக நிகழ்கிறது. தலைமை அமைச் சரோ… நாடு நாடாக பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார். சத்தியமாக முதல் அமைச்சர்கள் எந்தக் காலத்துக்கும் கீழிறங்கி வந்து, கிராமங்களில் தங்கி வேலைகளைக் கவனிக்க முன்வர மாட்டார்கள். தலைநகரத்தில் இருந்து 600 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மக்களுக்காக, அத்தனை அமைச்சர்களும் ஒரே இடத்தில் தலை

நகரத்தில் இருந்தபடிதான் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். மக்க ளால் தேர்ந்தெடுக்கப்படுகிற இவர்களே இப்படி என்றால்… கடிகாரத்தைப் பார்த்து வேலை செய்கிற அதிகாரிகளைப் பற்றி நாம் கேட்க முடியுமா?

உலகத்துக்கே சட்டாம்பிள்ளையாக இருக்கிற அமெரிக்காவின் தலைவர் ஒபாமாவே தனக்கும், தன் குடும்பத்துக்கும் தேவையான பொருட்களை கடைகளுக்குச் சென்று அவரேதான் வாங்குகிறார். உணவகத்துக்குச் சென்று சாப்பிட்டுவிட்டு, தன்னுடைய கடன் அட்டை செயல்படாமல் போனதால் மனைவியின் அட்டையில் இருந்து பணத்தைச் செலுத்திவிட்டுச் செல் கிறார்..

ஒபாமாவும் மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்டவர்தான். பாதுகாவல் என்கிற பெயரில்… நம் நாட்டுத் தலைவர்கள் போல் ஒரு பெருங்கூட்டத்தையும், அணிவகுத்து மிரட்டிச் செல்லும் கார்களையும், கூட்டத்தையும் அவர் வைத்துக் கொள்ளவில்லை. தலைவன் எவ்வழி செல்வானோ… அவ்வழிதானே தொண்டனும் செல்வான்.

மக்களின் அடிப்படைத் தேவைகளை உணராதவர்கள், அவர்களுடன் பழகி பணியினை செய்யத் தெரியா தவர்கள், அவர்களின் வாக்கு களுக்காக மட்டுமே திட்டங்கள் தீட்டுபவர்கள் எவ்வாறு அவர்களை வழி நடத்துவார்கள்?

நம் ஆட்சியாளர்கள் மனமிருந்தால் ஒரு முறை தனியாளாக மாறு வேடத் திலாவது ஒவ்வொரு கிராமங் களுக்கும் சென்று பாருங்கள். வேளாண் தொழி லுக்கு ஆட்கள் இல்லை. நீர் கொடுத்த குளம், குட்டைகள், ஓடைகள், ஏரிகள் என எதுவும் இல்லை. ஒருவேளை இருந்தால் அங்கே நீர்ப்பிடிப்பு இல்லை.

பள்ளிகளில் மாணவர்கள் இல்லை. ஆரம்ப சுகாதார மருத்து வமனை, நூலகங்கள், கால்நடை மருத்துவமனைகள் என எல்லாமுமே பெயர்ப் பலகைத் தாங்கிக் கொண்டுப் பெயரளவுக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆடு, மாடுகள் எங்கேயாவது ஒன்றிரண்டைப் பார்த்துவிட்டால்… நீங்கள் கொடுத்து வைத்தவர்தான். எல்லா வீடுகளிலும் தொலைக்காட்சிப் பெட்டி இருக்கிறது. வடிவேலு, விவேக், சந்தானம் ஆகியோர் 24 மணி நேரமும் சிரிப்பு மூட்டிக் கொண்டிருப்பார்கள்.

அப்படியே கொஞ்சம் தெருக்களை இணைக்கிற சாலைக்கு வாருங்கள். கட்டாயம் தேநீர்க் கடைகள் இருக்கும். வெட்டிப்பேச்சு பேசியபடி வேலை செய்ய விரும்பாத படித்த இளைஞர்கள், வேலை செய்ய முடியாத மது போதையில் இருக்கிற, இன்றையோ, நாளையோ சாகப் போகிறவர்களைப் பார்க்கலாம். அநேகமாக எல்லா வீடுகளிலும் அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களின் படங்களைப் போட்டு, திரைப்படக் கதாநாயகர்களுடனோ, அரசியல்வாதிகளுடனோ காட்சியளிக் கும் பதாகைகளை வாசலிலோ, வீட்டுக் கூரையிலோ, வைக்கோல போரிலோ காண்பீர்கள் என்பதைக் குறிப்பிட மறந்துவிட்டேன்.

அந்த இளைஞர்களெல்லாம் வேறு யாருமில்லை. தொழிற்கல்லூரிகளில் படிப்பதற்காக, குடும்பத்துக்கு சோறு போட்ட கொஞ்ச நிலத்தையும் விற்றுக் கொடுத்துவிட்டு, தொழில் இல்லாமல் வீட்டிலேயே முடங்கப் பிடிக்காமல் தேநீர்க் கடையிலும், பேருந்து நிலையத்திலும் போவோர் வருவோர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிற இளைஞர்கள்தான் அவர்கள். எல்லாவற்றுக்கும் புள்ளி விவரங்களைத் தரத் தயாராக இருப் பவர்கள், 50 வயதுக்கு மேல் உயிர் வாழ்கிற ஆண்களின் பட்டியலைத் தாருங்கள். முடிந்தால் தெருவுக்கு எத்தனை இளம் விதவைகள் இருக் கிறார்கள் என்கிற கணக்கினையும் மறைக்காமல் தாருங்கள்.

கிராமத்தில் தன்னுடன் இருந்த யார், யாரெல்லாம் பணக்காரர்களாகி விட்டார்கள் என்பதை மக்கள் பார்த்து விட்டார்கள். மற்றெல்லாரையும்விட அரசியல் கட்சியில் சேர்ந்தால் மட்டுமே கார், பங்களா, அடியாட்கள், பெரிய மனிதர்கள் தொடர்பு, ஊடகங்களில் இடம் கிடைக்கும் என நினைத்த இளைஞர்கள் தொழிலுக்குப் புறப்பட்டுவிட்டதையும் அங்கே தவறாமல் அறியலாம்.

- இன்னும் சொல்லத் தோணுது…
எண்ணங்களைத் தெரிவிக்க: thankartamil@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x