Last Updated : 21 Dec, 2014 09:35 AM

 

Published : 21 Dec 2014 09:35 AM
Last Updated : 21 Dec 2014 09:35 AM

சொல்லத் தோணுது 14 - தூய்மை இந்தியாவும், நாறும் மனிதர்களும்!

தூய்மையை விரும்பாத மனித மனம் இருக்க முடியுமா? ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தூய்மை உருவாக என்ன செய்யலாம்? இதற்கும் திட்டம் உருவாக்க முடியுமா? திட்டத்தை யார் உருவாக்குவது?

இந்தியா தூய்மைப் பெற வேண்டும் என்பதை நமது தலைமை அமைச்சர் நரேந்திர மோடி அவர்கள் மட்டும் விரும்பவில்லை. நாம் எல்லோரும்தான் விரும்புகிறோம். தூய்மை என்றால் எது என்பதை சிந்திக்க வேண்டிய நெருக்கடியான காலகட்டம் இது.

சென்ற மாதத்தில் இத்திட்டம் அறிவித்தவுடன் ஊடகங்களில் நான் கண்ட காட்சி இது.

ஏதோ ஒரு வட மாநிலத்தில் இத்திட்டம் தொடங்குவதற்காக அரசு அதிகாரிகளும் ஊழியர்களும் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள். அவசர அவசரமாக அதற்கான வாசகங்கள் பொறித்த பதாகைகள் சாலையில் நாட்டப்படுகின்றன.

தூய்மை என்றால் அப்படி ஒரு தூய்மையான ஆடையோடு அமைச்சர்களும், அரசியல்வாதிகளும், உயர் அதிகாரிகளும் ஊர்திகளிளிருந்து வந்து இறங்குகிறார்கள். இதனைப் படம் பிடித்து மக்களுக்கு தூய்மைத் திட்டத்தை அறிவுறுத்த ஊடகத்தினர் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருக்கின்றனர். இப்போது எல்லோரும் ஆயத்தமாகிவிட்டார்கள். கையில் நின்றபடியே பெருக்கித் தள்ளக்கூடிய நீண்ட துடைப்பத்தை உரியவர்களிடம் கையில் கொடுத்துவிட்டார்கள். எதை தூய்மைப்படுத்துவது என்பதுதான் யாருக்கும் தெரியவில்லை. அதிகாரிகளின் ஆணைப்படி கடைநிலை ஊழியர் ஒருவர் தள்ளுவண்டியை இழுத்துக்கொண்டு ஓடுகிறார். மரத்தின் கீழே குவித்து வைக்கப்பட்டிருந்த காய்ந்த சருகுகளை அள்ளிப்போட்டு கொண்டு விறுவிறுப்புடன் வந்து காத்திருந்தவர்கள் முன்னே அவைகளைக் கொட்டுகிறார். சருகுகள் தரையெங்கும் இறைக்கப்படுகின்றன. ஒரே நேரத்தில் அத்தனைத் துடைப்பங்களும் சருகுகளை கூட்டிப் பெருக்கித் தள்ளிக் கொண்டிருக்கின்றன. இக்காட்சி ஊடகத்தினால் படம் பிடிக்கப்பட்டு மக்களின் பார்வைக்கு வருகின்றன. இப்போது தூய்மைத் திட்டம் தொடங்கப்பட்டுவிட்டது. இத்திட்டத்தை மக்களிடம் கொண்டு செல்ல இந்தியா முழுமையிலும் உள்ள மக்களுக்கு நன்கு தெரிந்த முகங்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படுகின்றன.

இவைகளெல்லாம் ஒரு திட்டமிட்டு செயல்படுத்தப்பட்ட காட்சிதான் என்றாலும் அவை நம் மனத்தில் விதைக்கும் செய்தி, நாம் நம் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதுதான்.

தூய்மை என்பது புறம் சார்ந்தது மட்டுமல்ல; அகம் சார்ந்ததும்தான். எவ்வளவோ மேலை நாடுகளுக்குச் செல்கிறோம். அதுபோல் ஏன் நம் நாடு இருப்பதில்லை? விமானத்தில் ஏறி அமர்ந்ததுமே அசுத்தம் ஏற்படுத்தினால் தரப்படும் தண்டனைக்கும் பயந்து தூய்மைவாதியாக மாறிவிடுகிறோம். ஆனால் நம் நாட்டில் விமானம் தரையிறங்கி நாம் வெளியேறிய உடனேயே அங்கேயே நம்மிடமிருந்த தூய்மை எண்ணம் தூக்கியெறியப்படுகிறது. விமான நிலையத்திலிருந்து வீடு வருவதற்குள் மீண்டும் மனம் குப்பையாகி அசுத்தமாகிவிடுகிறது. சிறுதுண்டுத் தாளைக்கூட வீசுவதற்குக்கூட குப்பைத் தொட்டியைத் தேடிக்கொண்டிருந்தவர்கள், வரும் வழியிலேயே அதுவரை பத்திரப்படுத்தியதை எல்லாம் சாலையிலேயே வீசியெறிந்து விடுகிறோம். இம்மனநிலைக்கு என்ன காரணமாக இருக்க முடியும்? தூய்மை இந்நாட்டுக்குத் தேவையில்லை என நினைக்கிறோம் . அல்லது நாம் ஒருவன் நினைத்தால் மட்டும் போதுமா?, எல்லாமுமே குப்பையாகத்தானே இருக்கிறது என்கிறது எண்ணமும் சேர்ந்து கொள்கிறதா?

வெளிநாடுகள் போல நம் நாடும் தூய்மைப்பெற வேண்டும் என ஒவ்வொருவரும் நினைக்கிறோம். நாம் நினைத்தால் மட்டும் இது நிறைவேறுமா? நம்மை ஆள்கின்ற அரசுகளும் இதை நினைக்க வேண்டும். ஆண்டு முடித்த அரசுகளும் நினைத்திருக்க வேண்டும். வெளிநாடுகளில் அரசாங்கம் நினைப்பதைப் போலவே, மக்களும் அதன் வழி நடந்து தூய்மையைக் கடைபிடிக்கிறார்கள். அதனால் அங்கு வீடுபோன்றே தெருக்களும் மிளிர்கின்றன. சுற்றுப்புரத்தை மட்டுமல்ல; உணவுகளை உற்பத்தி செய்து தரும் மண்ணை, அத்தனை உயிர்களும் உயிர்வாழத் தேவையான நீரை, காற்று மண்டலத்தை என அனைத்தையும் தூய்மையாக வைத்திருப்பது பற்றி சிந்திக்கிறார்கள். அதற்காக திட்டமிடுகிறார்கள்.அதன்பாடு செயல்படுகிறார்கள்.

இங்கு எல்லாமுமே கெட்டுப் போன பின்தான் திட்டமிடப்படுகிறது., இனி எந்தக் குப்பையை எங்கே கொண்டுபோய் போடுவது? நம்நாட்டில் அழுக்கு என்பதோ, குப்பை என்பதோ வெறும் சாலைகளிலும், சுற்றுப்புறங்களில் மட்டுமா இருக்கிறது? முதலில் நாம் தூய்மைத் திட்டத்தைத் தொடங்க வேண்டிய இடம் ஆள்பவர்களிடத்திலும், அடுத்து அந்த இடத்துக்கு வர ஏங்குபவர்களிடத்திலும், அனைத்து மக்களிடத்திலும் இந்த மண்ணுக்கும் இயற்கை வளங்களுக்கும் கேட்டினை உருவாக்கித் தருகின்றன அதிகாரிகளிடத்திலும்தான்.

எதையும் புள்ளிவிவரமாகத் தருவதில் வல்லுநர்கள் உலகத்திலேயே நம்மவர்கள்தான். உறக்கத்தில் எழுப்பிக் கேட்டால் கூட ஒவ்வொன்றையும் மனப்பாடமாகக் கொட்டுவார்கள். வெறும் புள்ளிவிவரங்களை மக்களிடத்தில் அறிவிப்பதோடு எல்லாம் முடிந்துவிடுகிறதா? எல்லோருக்கும் கல்வி கொடுத்தால் போதும் வளமான நாடாக மாற்றிவிடலாம் என நினைக்கிறோம்.

உலக சுகாதார நிறுவனங்களால் தடைசெய்யப்பட்ட அத்தனை தொழிற்சாலைகளையும் நீங்கள் எங்கேயும் தேட வேண்டாம். எல்லாமுமே நம் நாட்டில் மட்டும்தான் இருக்கிறது. ஒவ்வொரு முன்னேற்றத் திட்டமும் வெளிநாட்டினரால் வகுக்கப்படும்போது, வெளியேற்றப்படும் கழிவுகளை எங்கே கொண்டுபோய்க் கொட்டலாம் என பட்டியலிடும்போது ஏழை நாடுகள்தான் அவர்களுக்கு முதலில் நினைவில் வருமாம். அதில் முதலில் அவர்கள் மனதில் உதிப்பது இந்தியாதான்.

எந்தெந்தப் பொருள்கள் அவனுக்கு வேண்டுமோ, அதை உற்பத்தி செய்துத் தருவதற்குத்தானே நாம் இருக்கிறோம், நம் மக்கள் இருக்கிறார்கள்! சுற்றுப்புறத்தையும், மண்ணையும், நீர் நிலைகளையும் நச்சுப்படுத்துகிற கழிவுகளை உருவாக்குகிற எந்தப் பொருளையும் அவர்கள் உருவாக்குவது இல்லை. அப்படிப்பட்ட நிறுவனங்களுக்கு அங்கு அனுமதியும் இல்லை.

பொன்னாய் விளைந்த மண்ணையும், அமுதமாய் இருந்த நீரையும், என் மக்களையும் 18 வயதிலேயே நோயாளிகளாக மாற்றிப் படுக்க வைத்துவிட்டவர்கள், படிக்காதவர்கள் இல்லை.

எப்போது இத்தகையைக் கொலைகள் தொடங்கப்பட்டன. எல்லாமுமே நம் நாட்டின் விடுதலைக்குப் பின்தான். வேலைவாய்ப்பினை உருவாக்கித் தருகிறோம், எல்லோருக்கும் உணவினைத் தருகிறோம் எனச் சொல்லியே எல்லாவற்றையும் நஞ்சாக்கிவிட்டதோடு, இம்மக்களின் மனத்திலும் நஞ்சை விதைத்துவிட்டார்கள்.

இந்தியா என்பது உலக நாடுகளின் பார்வையில் ஒரு குப்பை நாடு என்பதை எப்போது இந்த அரசியல்வாதிகளும் ஆட்சியாளர்களும் புரிந்துகொள்ளப் போகிறார்கள்? எப்போது ஏற்கெனவே கொண்டுவந்த குப்பைத் திட்டங்களை நிறுத்தப் போகிறார்கள்? இதனைப் படிக்கின்ற நாம் இன்னும் ஒரு நூறு ஆண்டில் இறந்துபோய்விடலாம். இனி, நமக்கு அடுத்த நம் தலைமுறைக்கு எதைக் கொடுத்துவிட்டுப் போகப் போகிறோம்? மலடாகிவிட்ட மண்ணையும், நஞ்சானக் காற்றையும் கேடு விளைவிக்கும் தண்ணீரையுமா?

தூய்மைப் பற்றிப் பேசுகிறோம். திட்டம் போடுகிறோம். இத்திட்டத்தை அறிவித்தவுடனேயே என் மனதுக்கு வந்தது இந்த ஊர்கள்தான். நம் மதிப்புக்குரிய தலைமை அமைச்சர் நரேந்திர மோடி, ஒரே ஒரு முறை இந்த ஊர்களுக்கு மட்டுமாவது வர வேண்டும்.

அமிலங்களையும், வேதிப் பொருட்களையும் உற்பத்தி செய்து தருகிற கடலூர் சிப்காட், ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ஏற்றுமதிக்கான ஆடைகளை உற்பத்தி செய்து தருகிற திருப்பூர், தோல் தொழில்களை உள்ளடக்கிய காலணிகள், தோல் ஆடைகளை உற்பத்தி செய்து தரும் ஆம்பூர், வாணியம்பாடி,பேர்ணாம்பட்டு, ராணிப்பேட்டை பகுதிகள் என இம்மூன்றையும் மட்டும் பாருங்கள். ஒருநாள் முழுக்க நீங்கள் இருக்க வேண்டாம். ஒரு இரண்டு மணி நேரம் ஒவ்வோர் ஊரிலும் அந்தப் பகுதிகளிலும் நடந்து சென்று பாருங்கள். முடிந்தால் தூய்மைத் திட்டத்தை விளம்பரப்படுத்தும் ஒன்பது தூதர்களையும் துணைக்கு அழைத்துகொள்ளுங்கள். ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு நாள்போதும்.அதன் பின் சொல்லுங்கள்! நாம் முதலில் பிடிக்கப் போவது துடைப்பத்தையா? வெளியேற்ற வேண்டியது இத்தகைய தொழிற்சாலைகளையா?.

ஒரு மணிநேரம் கூட இந்தக் காற்றை உள்ளிழுத்து உயிர் வாழ முடியாத இம்மக்களின் நிலையை, புல் பூண்டுகள் கூட முளைக்காத இம்மண்ணை, பாட்டில்களில் அடைக்கப்பட்டு எங்கிருந்தோ கொண்டு வரப்படும் தகுதியற்ற குடிநீர் என அனைத்தையும் பாருங்கள்.

இந்த இயந்திரங்களை எல்லாம் உருவாக்கித் தந்த வெளிநாட்டுக்காரனுக்கு இந்த நூலையும் ஆடைகளையும் உற்பத்தி செய்யத் தெரியாதா? தோல் காலணிகளும் ஆடைகளும் இல்லாமல் அவனால் வாழ முடியுமா? அவன் ஊரில் இந்தத் தோல் இல்லையா? அங்கேயே அவனால் இதனை உற்பத்தி செய்துகொள்ள முடியாதா? கண்டுபிடித்த அத்தனை அமிலங்களும், வேதியியல் பொருட்களும் நம்நாட்டில் மட்டும்தான் உற்பத்தி செய்ய இயலுமா? நாம் செய்து ஒழியட்டும் நம் வாழ்வாதாரங்கள் வீணாகி அழியட்டும் என நினைத்துதானே இந்நிலைக்கு நம்மைத் தள்ளிவிட்டான்.

இந்த நிலைக்கு இந்த நாட்டைக் கொண்டுவந்ததற்கு யார் பொறுப்பேற்கப் போகிறோம்? ஆட்சியாளர்களா… அதிகாரிகளா? சில முதலாளிகள் மட்டும் பணம் கொழித்தால் போதும்; எவன் செத்தால் நமக்கு என்ன… என கண்டும் காணாமல் துணைபோன அரசியல் கட்சிகளா?

இப்படிப்பட்ட ஆபத்தானப் பகுதிகளில் அந்த தொழிற்சாலைகளுக்கு உரிமையான முதலாளிகளோ அவர்களின் குடும்பங்களோ வசதிப்பதில்லை என்பதெல்லாம் எத்தனைப் பேருக்குத் தெரியும்?

தூய்மையை எங்கிருந்து தொடங்கலாம் என்பதை இப்போது மக்களுக்குச் சொல்லுங்கள் ஐயா!

- இன்னும் சொல்லத்தோணுது…

எண்ணங்களைத் தெரிவிக்க: thankartamil@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x