Published : 19 Dec 2014 10:26 AM
Last Updated : 19 Dec 2014 10:26 AM
ரஷ்யாவின் அதிபராக, இறக்கும் வரை பதவி வகித்த லியோனிட் இலீச் பிரஷ்னேவ் பிறந்தநாள் இன்று (டிசம்பர் 19). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
சோவியத் உக்ரைனில் பிறந்தவர். குழந்தைப் பருவம் முதலே உள்நாட்டுப் போர், ரஷ்யப் புரட்சி, முதல் உலகப் போர் என்று மோதல்களைப் பார்த்தும் கேள்விப்பட்டும் வளர்ந்தவர்.
15 வயதில் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குப் போனார். பகுதி நேரமாகப் பயின்று பட்டம் பெற்றார். சிறு சிறு அரசுப் பதவிகளை வகித்தார். சோவியத் தலைவர் ஸ்டாலினின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். கம்யூனிச கட்சியில் இணைந்தார்.
கட்சியின் தீவிர உறுப்பினராகப் பணியாற்றினார். ‘அனைத்தும் அனைவருக்கும் சொந்தம்’ என்ற கொள்கையில் உறுதியாக இருந்தார். விவசாயிகள் தங்களிடம் உள்ள உபரி தானியங்களை அரசிடம் விற்குமாறு ஸ்டாலின் அப்போது உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு விவசாயிகளை அடிபணியச் செய்தவர்களில் பிரஷ்னேவ் ஒருவர்.
இரண்டாம் உலகப்போர் தொடங்கியபோது, தன் பிராந்தியத்தில் கட்சியின் முக்கிய தலைவர் ஆனார். ஸ்டாலினின் ‘ரஷ்ய மயமாக்கல்’கொள்கையைப் பரப்ப அமைக்கப்பட்ட சோவியத் செம்படைப் பிரிவில் பணியாற்றினார்.
உழைப்பும் அர்ப்பணிப்பு உணர்வும் குறுகிய காலத்திலேயே இவருக்கு பதவி உயர்வுகள், கூடுதல் பொறுப்புகளை பெற்றுத் தந்தன. விரைவில் மேஜர் ஜெனரல் ஆனார். 1946-ல் ராணுவத்தில் இருந்து விலகி கட்சிப் பொறுப்பை ஏற்றார். 1950-ல் நிகிடா குருஷேவ் இவரை மால்டேவியன் கம்யூனிச கட்சியின் முதல் பொதுச் செயலாளராக நியமித்தார்.
2 ஆண்டுகள் கழித்து மாஸ்கோ சென்று வலிமைமிக்க செயலகமான கம்யூனிச கட்சியின் மத்திய குழுவில் ஸ்டாலின் தலைமையில் பணிபுரிந்தார். விசுவாசமான தொண்டராக இருந்து அவரது நம்பிக்கையைப் பெற்றார். 1953-ல் ஸ்டாலின் மறைவுக்குப் பிறகு இவரது அரசியல் வாழ்வு சிறிது காலம் சரிவைக் கண்டது. ஆட்சியைக் கைப்பற்றிய குருஷேவ் இவரை ராணுவம் மற்றும் கடற்படை இயக்கத்தின் தலைமைப் பதவியில் நியமித்தார்.
1955-ல் கஜகஸ்தானின் கம்யூனிச கட்சியின் முதல் பொதுச் செயலாளர் ஆனார். குருஷேவின் அரசியல் செயல்பாடுகளுக்கு பக்கபலமாக இருந்தார். 1959-ல் மத்திய குழுவின் 2-வது செயலாளராக பதவி உயர்வு பெற்றார்.
1960-ல் சுப்ரீம் சோவியத்தின் அதிபர் ஆனார். அப்பதவியில் 1964 வரை செயல்பட்டார். 1977-ல் மீண்டும் இப்பதவிக்கு வந்தவர் 1982-ல் இறக்கும் வரை நீடித்தார். இவரது ஆட்சிக் காலத்தில் ரஷ்யா பல போர்களைக் கண்டது.
உலகம் முழுவதும் சோவியத் யூனியன் தாக்கம் கணிசமாக அதிகரித்தது. ஒரு தலைவராக எந்த நடவடிக்கையும் எடுப்பதற்கு முன்பு தன் சகாக்களை கலந்தாலோசிப்பதில் கவனமாக இருந்தவர்.
சோவியத் யூனியனின் வலுவான தலைவராக 18 ஆண்டுகள் செயல்பட்டவர். ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக அதிக காலம் பதவி வகித்த இவர் 76-வது வயதில் மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT