Published : 31 Dec 2014 10:41 AM
Last Updated : 31 Dec 2014 10:41 AM
ஐரோப்பாவின் தலைசிறந்த மருத்துவர் மற்றும் மருத்துவக் கல்வித் தந்தையாகப் போற்றப்பட்ட ஹெர்மன் போர்ஹாவே பிறந்த நாள் இன்று (டிசம்பர் 31). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
ஹாலந்தில் பிறந்தவர். அப்பா மதபோதகர். பள்ளிப் படிப்போடு பல மொழிகளையும் கற்றார். அறிவுக் கூர்மையால் 3 ஆண்டு உயர் கல்வியை ஒன்றரை ஆண்டுகளிலேயே முடித்து பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.
தத்துவம், கணிதம், இறையியல், வேதியியல், தாவரவியல் பயின்றார். உடலில் இருந்து மனம் வேறுபட்டிருப்பது குறித்து விவரிக்கும் ஆய்வுக் கட்டுரைக்காக 22-வது வயதில் டாக்டர் பட்டம் பெற்றார். இறையியலிலும் டாக்டர் பட்டம் பெற்றார்.
உடலுக்கு மட்டுமல்லாது, ஆன்மாவுக்குமான மருத்துவராக சேவையாற்றும் இலக்கைக் கொண்டிருந்தார். லேடன் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் விரிவுரையாளர் ஆனார். தலைசிறந்த ஆசிரியராக போற்றப்பட்டார்.
மாணவர்களிடம் அதிக மதிப்பும் மரியாதையும் பெற்றார். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது, மாணவர்களை அருகில் வைத்துக்கொண்டு கற்றுக்கொடுக் கும் முறையை அறிமுகப்படுத்தியது இவர்தான்.
மருத்துவத் தகவல்களை முறையாகத் தொகுத்து வைத்ததில் இவரது பங்கு மகத்தானது. மாணவர்களும் அனுபவம் வாய்ந்த மருத்துவர்களும் நோய்க்கான காரணங்களை ஆய்வு செய்து, அதற்கான சிகிச்சை முறைகளை மேம்படுத்துவது குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆலோசனை நடத்தும் கிளினிக்கோ-பாதலாஜிகல் கான்ஃபரன்ஸ் என்ற நடைமுறையை தொடங்கிவைத்தார்.
தற்போதைய மருத்துவக் கல்விக்கு அடித்தளமான நவீன மருத்துவ போதனை முறையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர். ரஷ்யப் பேரரசர் பீட்டர், வால்டயர் ஆகியோர் இவரைச் சந்திக்க ஹாலந்து சென்றது இவரது திறமைக்கான அங்கீகாரம்.
ஹாலந்து ரூபாய் நோட்டுகளில் இவரது உருவம் பொறிக்கப்பட்டது. லேடன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 2 முறை நியமிக்கப்பட்டார்.
பல மருத்துவப் பாடப் புத்தகங்கள், கட்டுரைகள் எழுதியுள்ளார். அவை உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவர் பாடம் நடத்தும்போது மாணவர்கள் எடுத்துக்கொண்ட குறிப்புகள் தொகுக்கப்பட்டு பல மருத்துவ நூல்களாக வெளிவந்துள்ளன.
உணவுக்குழாய் பாதிப்பால் உயிரிழந்த ஒரு நோயாளியின் உடலைப் பரிசோதனை செய்த இவர், நோய் பாதிப்பு குறித்தும் அதற்கான காரணங்களையும் மருத்துவ வரலாற்றில் முதல்முறையாகப் பதிவு செய்து ஆவணப்படுத்தினார். இந்த பாதிப்பு இவர் பெயராலேயே ‘போர்ஹாவ் சிண்ட்ரோம்’ என இன்றும் குறிப்பிடப்படுகிறது.
மருத்துவ வழிமுறைகளைவிட நோயாளிகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தவர். 18-ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த மருத்துவ மேதையாக, மருத்துவ ஆசிரியராக போற்றப்பட்ட ஹெர்மன் போர்ஹாவே 70-வது வயதில் மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT