Published : 23 Dec 2014 12:18 PM
Last Updated : 23 Dec 2014 12:18 PM

ஸ்டெபான் ஹெல் 10

வேதியியலில் நோபல் பரிசு வென்ற ஜெர்மனி விஞ்ஞானி ஸ்டெபான் வால்டர் ஹெல் பிறந்தநாள் இன்று (டிசம்பர் 23). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

 ருமேனியாவின் அராட் நகரில் பிறந்தவர். அதே ஊரில் ஆரம்பக் கல்வி கற்றார். ஹைடல்பர்க் பல்கலைக்கழகத்தில் 1990-ல் இயற்பியலில் டாக்டர் பட்டம் பெற்றார். அப்பா ஒரு பொறியி யலாளர்.

 1991 முதல் 1993 வரை ஐரோப்பிய மூலக்கூறு உயிரியியல் சோதனைக் கூடத்தில் பணிபுரிந் தார். அங்கு 4-Pi மைக்ரோஸ்கோப்பின் அடிப்படைக் கோட்பாடுகளை மேம்படுத்தினார். அடுத்த 3 ஆண்டுகள் பின்லாந்து பல்கலைக்கழகத்தில் மருத்துவ இயற்பியல் துறைத் தலைவராகப் பணியாற்றினார். தூண்டப்பட்ட வெளியேற்ற சிதைவு (STED Microscopy) கோட்பாட்டை மேம்படுத்தினார்.

 உயர் தொழில்நுட்ப ப்ளோரசன்ட் மைக்ரோஸ்கோப்பை (Super Resolution Microscope) மேம்படுத்திய இவருக்கு இந்த ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு எரிக் பெட்சிக், வில்லியம் மோர்னர் ஆகியோருடன் கடந்த 10-ம் தேதி பகிர்ந்து அளிக்கப்பட்டது.

 ஆப்டிகல் மைக்ரோஸ்கோப் மூலம் பெரிதுபடுத்திப் பார்க்கப்படும் பொருட்களில் தெளிவு இல்லாத நிலை இருந்தது. அதை இந்த விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு தகர்த்துள்ளது. தற்போது ப்ளோரசன்ட் மூலக்கூறுகள் உதவியுடன், ஒளி நுண்ணோக்கி தொழில்நுட்பத்தில் நானோ பரிமாணத்தை எட்டமுடியும் என்று நிரூபித்துள்ளனர்.

 2002-ம் ஆண்டில் இருந்து ஜெர்மனியின் மாக்ஸ் பிளாங்க் உயிரி வேதியியல் நிறுவன இயக்குநர்களில் ஒருவராக இருக்கிறார். நானோ பயோ ஃபோட்டோனிக்ஸ் துறையை இங்கு நிறுவியுள்ளார். ‘ஸ்டெட்’ நுண்ணோக்கியியல் வளர்ச்சியிலும் பிற மைக்ரோஸ்கோப்களை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தி வருகிறார். 200 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.

 2000-ம் ஆண்டில் ஒளியியல் சர்வதேச ஆணைக்குழு இவருக்கு ‘ஆட்டோ ஹான்’ பரிசை வழங்கியது. கார்பர் ஐரோப்பிய அறிவியல் விருது உட்பட 30 விருதுகள், ஏராளமான பரிசுகளை வென்றுள்ளார்.  ஜெர்மனியின் புற்றுநோய் ஆய்வு மைய ஆப்டிகல் நானோஸ்கோபி துறைத் தலைவராகவும், ஹைடல்பர்க் பல்கலைக்கழகத்தின் இயற்பியல், வானியல் துறைப் பேராசிரியராகவும் பணியாற்றுகிறார்.

 இவரது பங்களிப்புடன் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ள மைக்ரோஸ்கோப் மூலம் செல் பிரிவதை மிக நுண்ணிய நானோ அளவில் காண முடியும். ப்ளோரசன்ட் மூலக்கூறுகள் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வரையறைக்கு உட்பட்டதாக இருந்த மைக்ரோஸ்கோப் மேலும் நுண்ணிய மூலக்கூறுகளை ஆய்வு செய்யும் நானோஸ்கோப்பாக வளர்ச்சியடைந்துள்ளது.

 அல்ஸீமர், பார்கின்சன் போன்ற நோய்களுக்கு மூலகாரணமான புரோட்டீன்களை இந்த மைக்ரோஸ்கோப் மூலம் அடையாளம் காணமுடியும். மருந்தில்லா நோய்களை முற்றிலும் தடுப்பதற்கான மகத்தான பல ஆய்வுகளுக்கு இந்த நானோஸ்கோப் வித்திட்டுள்ளது.

 மைக்ரோஸ்கோப் உத்திகளை மேம்படுத்தி அவற்றை மனிதகுல நன்மைக்கு பயன்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் தொடர் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுவருகிறார் ஸ்டெபான் ஹெல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x