Published : 31 Dec 2014 03:19 PM
Last Updated : 31 Dec 2014 03:19 PM
கடல் நீர் சுழித்து இழுத்த இழுப்பில், கப்பலின் அடிவாரத்தில் மோதிச் சிதறுண்டு சல்லி சல்லியானான் டி.எஸ்.பி. ஸ்காட்.
அதிகாரத்தின் உச்சத்தில் கோலோச்சிய நாட்களில், தான்போய் கால் வைத்த அடிமை தேசத்துப் பெண்களை எல்லாம் கரு சுமக்க வைத்தவன். சதை சதையாகப் பிய்த்தெறியப்பட்டான்.
பலாத்காரம் செய்து கரும்புள்ளிக் குத்தியவனின் சதையை ருசிக்க, ஆப்பிரிக்கக் கண்டத்து கென்ய நாட்டுத் திமிங்கலங்கள், கீழைக் கடலின் சுறாக்கள், இலங்கை மற்றும் பர்மிய திருக்கைகள் என சர்வதேசத்து மீன்களும் வங்காள விரிகுடாவுக்குப் படைப் படையாய் அணிவகுத்தன. வந்த மீன்களும் ஸ்காட்டின் சதையை உண்ண வந்த மீன்கள் அல்ல; கடிக்க வந்த மீன்கள். வெள்ளைச் சதையை விழுங்கவில்லை. கடித்துக் குதறித் துப்பின.
கூந்தலை அள்ளி முடிந்து கோடாலிக் கொண்டை இட்ட அத்தை அரியநாச்சியை, எட்ட நின்று பார்த்துக் கொண்டிருந்தான் துரைசிங்கம். ரத்தம் குடித்த அதிகாரியைக் கடலில் தூக்கி வீசிக் கொன்றுவிட்டு, ஏதும் அறியாதவள் போல் எங்கோ பார்த்துக் கொண்டு நின்றாள். விரி கடலையும் இருள் வானையும் அடைத்து விஸ்வரூபம் எடுத்து நின்றாள்.
அரியநாச்சியின் திசை நோக்கி மண்டியிட்டான்.
ஸ்காட்டின் ஜலசமாதியைக் கடந்து கப்பல் வெகு தூரம் வந்திருந்தது. ‘கொலைத் தடயம் எதுவும் இல்லாமல் ஒழிந்தான் ஸ்காட்’ என்பதை உறுதி செய்து கொண்டவள், வாய் நிறைய எச்சில் குவித்து கடலுக்குள் பிணம் போன போக்கில் காரித் துப்பினாள். அலுங்காமல் நடந்து வந்தாள். எதிரே மண்டியிட்டிருந்த துரைசிங்கத்தின் தலையில் கை வைத்து முடி கோதினாள்.
துரைசிங்கம், அத்தையின் பாதம் தொட்டு கண்களில் ஒற்றினான்.
“எந்திரி…” என்றாள்.
எழுந்தவனை அணைத்துக் கொண்டு இரும்பு ஏணிப் படிகளை நோக்கி நடந்தாள்.
நடந்துகொண்டே துரைசிங்கத்தை ஏறிட்டாள்.
“இரை கை மாறிருச்சே’ன்னு வருத்தமா? உன்னோட இரை, கரையிலே காத்திருக்கு. ரெண்டு நாள் பொறு…” என்றவாறு ஏணிப் படிகளில் இறங்கினாள்.
அரண்மனைக்குள் உற்சாகமாக நுழைந்தார் கணக்குப்பிள்ளை ரத்னாபிஷேகம். செண்பகத்தோப்புக்குப் போய் திரும்பிய பெருங்குடி ஆட்கள் எல்லோரும் அவரைப் பின் தொடர்ந்தார்கள்.
காட்டுக்குள் போய்விட்டு உயிருடன் திரும்புவோமா... என்ற அச்சத்தில் இருளடித்துப் போயிருந்த ‘லோட்டா’, அரண்மனை எல்லையை மிதிக்கவும் தலை சிளுப்பி நடந்தான். முனியாண்டியின் கண்ணெல்லாம் ‘லோட்டா’வின் சிளுப்பலின் மேலேயே இருந்தது. முந்தி எட்டு வைக்கிற சாக்கில் ‘லோட்டா’வின் காலை இடறிவிட்டார். தடுமாறி நிமிர்ந்தவன், ‘‘சித்தப்பூ… அதெல்லாம் காட்டுக்குள்ள வெச்சிக்கிறணும். அரண்மனைக்கு நான் செல்லப் புள்ள. மகனை மதிச்சு நடக்கணும்… மிதிச்சு நடக்கக் கூடாது’’ என்றவன், பின் முடியைக் கோதிவிட்டான்.
“பெரிய்ய்ய புலவரு… அடுக்கு மொழியிலே பேசுறாரு! ஒன்னக் காட்டுப் பாம்பு கொத்த விட்டிருக்கணும்டா…” என்று சொல்லி ‘லோட்டா’வின் இடுப்பில் ஒரு கிள்ளு கிள்ளினார் முனியாண்டி.
தலைவாசல் திறந்து எல்லோரும் உள்ளே நுழைந்தார்கள். அரண்மனையின் பிரம்மாண்டமான மைய மண்டபத்தில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தான் உடையப்பன்.
வந்திருப்பவர்களில் கணக்குப் பிள்ளை மற்றும் ‘லோட்டா’வைத் தவிர்த்து, யாரும் இதுநாள் வரை இந்த மைய மண்டபத்தைப் பார்த்தவர்கள் இல்லை.
இடுப்போடு குனிந்து எல்லோரும் உடையப்பனை வணங்கினார்கள்.
‘‘போனது என்னாச்சு..?’’ கணக்குப்
பிள்ளையை மட்டும் பார்த்துக் கேட்டான் உடையப்பன்.
‘‘தவசியாண்டி சம்மதிச்சிட்டான் அரண்மனை.’’
முழியை உருட்டினான். ‘‘நீங்க போய் கேட்டவுடனேயே சம்மதிச்சிட்டானா..?’’
எல்லோரும் மவுனமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
‘‘டேய் ‘லோட்டா’ நீ உள்ளதைச் சொல்லு… அவன் என்ன சொன்னான்?’’
தன் தலையில் பாரம் விழும் என எதிர்பார்க்காத ‘லோட்டா’, ‘‘அது… வந்து அரண்மனை…’’ என இழுத்தான்.
இல்லாதது பொல்லாததை ‘லோட்டா’ சொல்லிவிடுவான் எனப் பதறிய நல்லாண்டி, ‘‘அது… வேற ஒண்ணுமில்ல அரண்மனை. குலசாமி கோயிலைக் கும்பிடாததுனால… ஊருஅனுபவிக்கிற இடைஞ்சல்களை எடுத்துச் சொன்னோம். தவசியாண்டி உடனே ஒத்துக்கிட்டான்…’’ என்றார்.
உடையப்பன் எழுந்து, ஏதோ யோசனையில் முன்னும் பின்னும் நடை போட்டான்.
‘‘ஊருக்குள்ள எப்போ… வர்றான்?’’
’’நாளைக் காலையில வந்துருவான்.’’
கணக்குப்பிள்ளையைப் பார்த்து, ‘‘கொடையை சீரும் சிறப்புமா… நடத்துங்க. செலவைப் பத்தி யோசிக்க வேணாம்…’’ என்ற உடையப்பன், ‘நம்ம வண்டவாளம் தெரிஞ்ச ஒரே சாட்சி வந்து சிக்குறான். கதையை முடிச்சிறணும்…’ மனக்கணக்குப் போட்டான்.
பொழுது விடிந்து வெகுநேரம் கழிந்திருந்தது. சர்வதேசக் கடற் பரப்பில் சஞ்சரித்த கப்பல், இந்தியப் பெருங்கடல் எல்லைக்குள் நுழைந்தது. இங்கிலாந்து தேசத்துக்கு சொந்தமான கப்பலின் உச்சியில் இதுவரை ‘கிரேட் பிரிட்டன்’ கொடி மட்டும் பறந்தது. சர்வதேச சட்டப்படி இந்தியப் பெருங்கடல் எல்லைக்குள் நுழைந்ததை உணர்த்தும் வண்ணம், இந்திய தேசியக் கொடியும் ஏற்றப்பட்டது.
இரவு ஏறிய போதை, இன்னும் இறங்காத சைமன் தடுமாறி எழுந்தான். கண் விழித்ததும் ஸ்காட்டின் ஞாபகம் வந்தது. ‘நேற்று நடுநிசி தாண்டியும் ஸ்காட்டின் அறை பூட்டியே இருந்ததே!’
முகம் கூட கழுவாமல், அறையை விட்டு வெளியேறி ஸ்காட்டின் அறைக்குப் போனான். பூட்டியே கிடந்தது. ‘ஸ்காட்டை எங்கே காணோம்?’ சாப்பாட்டுக் கூடம் நோக்கி நடந்தான். ஓரிரு வெள்ளைக்காரர்கள் தேநீர் அருந்திக் கொண்டிருந்தார்கள். ‘ஸ்காட்டை பார்த்தீர்களா?’ ‘நேற்று இரவு முதல் ஸ்காட்டைக் காணோம். பார்த்தீர்களா…’ விசாரித்துக் கொண்டே, முதல் வகுப்பு பொறுப்பதிகாரியின் அறைக்கு வந்து சேர்ந்தான்.
‘‘காணோமா?’’
‘‘ஆமாம்… நேற்று இரவிலிருந்து ஸ்காட்டை காணோம்!’’
செய்தி, கப்பல் முழுக்க தீயாய் பரவியது. சிப்பந்திகள், கப்பல் முழுக்க அலசினார்கள். எங்கும் காணோம்.
ஒரு அதிகாரி சொன்னான். ‘‘நேற்று மாலை, முதல் வகுப்பு அறை வாசலில் பைத்தியம் பிடித்ததைப் போல் ஒருவன் அமர்ந்திருந்தான். அவனுடன் ஒரு பெண்ணும் இருந்தாள். இருவரும் இந்தியர்கள். ஏதோ பிடிவாதத்தில் அவன் அமர்ந்திருந்தான். அவள், அவனை சமாதானம் பண்ணிக் கொண்டிருந்தாள். நான் கூட இருவரையும் கண்டித்துவிட்டுப் போனேன். அவர்களை விசாரியுங்கள்’’
கப்பல் சிப்பந்திகள், அரியநாச்சியின் அறையை நோக்கி ஓடி வந்தார்கள்.
- குருதி பெருகும்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: irulappasamy21@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT