சதிக்கு எதிரான சட்டம்: இன்று அன்று| 1829 டிசம்பர் 4
கணவர் இறந்துவிட்டால் கதறி அழுவதுடன் நின்றுவிடக் கூடாது. தனது கணவரின் உடல் எரிக்கப்படும் சிதைக்குள் விழுந்து அந்தப் பெண் உயிர்விட வேண்டும். இதுதான் ‘சதி’ என்று அழைக்கப்பட்ட, உடன்கட்டை ஏறும் பழக்கம். பரவலாக அனைவராலும் பின்பற்றப்படாவிட்டாலும், ராஜஸ்தான், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இந்தப் பழக்கம் கடைப்பிடிக்கப்பட்டது.
எரியும் தீயில் விழுந்து இறக்க யாருக்கும் விருப்பம் இருக்காது என்றாலும், அப்படிச் செய்வதன் மூலம் ‘சதி மாதா’ என்ற புனிதப் பட்டம் பெண்களுக்குக் கிடைக்கும் என்று கட்டாயப்படுத்தியே பல உடன்கட்டைச் சம்பவங்கள் நடத்தப் பட்டன. இந்தக் கொடூரமான பழக்கத்தைக் கண்ட ஆங்கிலேயர்கள் அதிர்ச்சி யடைந்தார்கள். சிதைக்குள் தள்ளப்படும் பெண்கள், எரியும் உடலுடன் தப்பிச் செல்ல முயன்றாலும் சுற்றி நின்ற ஆண்கள் அவர்களை மீண்டும் சிதைக்குள் தள்ளிக் கொன்ற சம்பவங்களை ஆங்கிலேயர்கள் பலர் பதிவு செய்திருக்கிறார்கள். இந்தப் பழக்கத்துக்கு எதிராக ராஜாராம் மோகன்ராய் போன்றவர்கள் குரல்கொடுத்தனர்.
இந்நிலையில், 1829-ல் இதே நாளில் உடன்கட்டை ஏறும் பழக்கத்தைத் தடைசெய்யும் சட்டத்தை, வங்காள ஆளுநராக இருந்த பென்ட்டிங் பிரபு கொண்டுவந்தார். இந்தச் சட்டத்துக்கு எதிராக வழக்குகள் தொடுக்கப்பட்டன. லண்டனில் இயங்கிய உயர் ஆலோசனைக் குழுவான ப்ரிவி கவுன்சில், 1832-ல் இந்தத் தடைச்சட்டத்தை உறுதிசெய்தது. இந்தியாவின் பிற பகுதிகளிலும் இந்தத் தடைச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. எனினும், ஆங்கிலேயர் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளைத் தவிர, சுதேச அரசுகள் நடைபெற்ற பகுதிகளில் இந்தப் பழக்கம் கடைப்பிடிக்கப்பட்டது.
சுதந்திரத்துக்குப் பின்னரும் இந்தப் பழக்கம் சில இடங்களில் கடைபிடிக் கப்பட்டது. ராஜஸ்தானின் தேவ்ராலா கிராமத்தில் ரூப் கன்வார் என்ற 18 வயதுப் பெண், தனது கணவரின் சிதையுடன் எரிந்து சாம்பலானார். அவரைக் கட்டாயப் படுத்திக் கொன்றதாக அவரது உறவினர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டது.
இந்தச் சம்பவம் உலகம் எங்கும் எதிரொலித்த பின்னர், ராஜஸ்தான் அரசு, உடன்கட்டைத் தடைச் சட்டத்தை 1987-ல் கொண்டுவந்தது. 1988-ல் இச் சட்டம் நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றப்பட்டது.
