Published : 28 Dec 2014 01:08 PM
Last Updated : 28 Dec 2014 01:08 PM
‘பக்கத்து வீட்டுக்காரர்களின் தொல்லை, இனி இல்லை; தனி வீடு வடிவுள்ள நவீன அடுக்குமாடிக் குடியிருப்புக்குக் குடியேறுங்கள்’
இப்படியொரு வாசகத்துடன் அபார்ட்மென்ட்களைக் கட்டி விற்கும் நிறுவனம் சமீபத்திய தினசரிகளில் விளம்பரம் செய்திருந்தது. பக்கத்து வீட்டுக்காரர்களை, தொல்லை தரும் ஜந்துக்களாகவே அந்த நிறுவனம் முடிவு செய்திருப்பது காலமாற்றத்தின் வேதனையான நிகழ்வு.
குடியேறிப் பல ஆண்டுகள் ஆனாலும் பக்கத்து வீட்டில் வசிப்பவரின் பெயர், தொழில் அறியாமல்தான் நகரங்களில் பலரும் நாட்களை நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள். தீபாவளி, பொங்கலுக்குக்கூட அண்டை வீடுகளிடையே பதார்த்தங்கள் பரிமாறிக்கொள்ளப்படுவதில்லை. அந்தக் காலத்தில்தான் அன்பு எத்தனை இயல்பாகப் பரிமாறிக்கொள்ளப்பட்டது!
அண்டை வீட்டின் அன்பு
அந்த விளம்பர வாசகத்தைப் பார்த்தபின்பு, 1970-களில் சத்தியமங்கலத்தில் நாங்கள் வசித்த காலனியின் நினைவு வந்தது. எங்கள் பக்கத்து வீடுகளில் வசித்தவர்கள் என் மனக்கண்ணில் எட்டிப் பார்த்தார்கள். வலதுபுறம் இருந்தது, ஜெகன்னாதன் – கமலா தம்பதியின் குடும்பம். அவர்களது மகன் ரவி என் பள்ளித் தோழன். ஆற்றங்கரை, பவானிசாகர் அணைக்கட்டு, பள்ளி மைதானம், உள்ளூர்-வெளியூர் சினிமா தியேட்டர்கள் என்று எனது பால்ய நாட்களின் பயணங்களில் துணைநின்றவன் அவன்.
ரவியின் அப்பா ஒரு தனியார் பேருந்து நிறுவன மேலாளர். சத்தியிலிருந்து கோவை, திருப்பூர், ஒட்டன்சத்திரம் வரை அவர்களுடைய பேருந்து அப்போது ஓடும். நான் கேட்டால் ரவியின் அப்பா அவர்களுடைய பேருந்தில் சென்று வர இலவச பாஸ் எழுதிக் கொடுப்பார். அவரது கையொப்பமிட்ட பாஸைக் காட்டித்தான் நான் கோவை திருப்பூர் போய் அப்போது ரிலீஸாகும் படங்களைப் பார்த்து வருவேன். தீவிர சினிமா ரசிகனாக என்னை உருமாற்றிக்கொள்ள ரவியின் அப்பாவுக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது.
இடது பக்கத்து வீட்டில் இருந்தவர்களும் அப்படித்தான். ஆர்மோனியம் வாசிக்கும் ஜெயராமன் அண்ணா, அவரது அண்ணன் ராகவன், அவர்களின் அம்மா, ஜெயராமன் அண்ணனின் மூத்த அக்கா, அவரது ஒரே பெண். இப்படி ஆறேழு பேர் அந்த வீட்டில் வசித்தார்கள். இவர்கள் போக அடிக்கடி ஆந்திராவிலிருந்து வந்து போகும் அவர்களது உறவினர்கள் என்று அந்த வீடே கொண்டாட்டமாகத்தான் இருக்கும்.
இசையின் நண்பர்
இவர்களில் இன்றைக்கும் ஒரு பந்தமாகவே என் மனதில் பதிந்துபோயிருப்பது, ஜெயராமன் அண்ணாதான். ஊர்க்கோடியிலிருந்த பண்ணாரி மாரியம்மன் டூரிங் டாக்கீஸில் ஆபரேட்டராக வேலைபார்த்தவர். சினிமாவுக்காக இரவு நேரங்களில் கண்விழித்து, எரியூட்டப்பட்ட கார்பன் பென்சில் புகையால் ஆஸ்துமாவைப் பரிசாக வாங்கிக்கொண்டவர்.
மெலிந்த தேகம். சைக்கிளில் வேலைக்குக் கிளம்புகிற போதும், திரும்பவும் இரண்டாவது ஆட்டம் முடிந்து நடுராத்திரியில் வீடு திரும்பும்போதும் அவரது உதடுகள் ஏதேனும் ஒரு பழைய பாட்டை அசைபோட்டபடியேதான் இருக்கும். அவருக்கு இசையில் அப்படியொரு ஈடுபாடு. எங்கே கற்றுக்கொண்டாரோ தெரியாது, சொந்தமாக வைத்திருந்த தனது ஆர்மோனியத்தில் எந்தப் பாட்டைச் சொன்னாலும் மிகத் துல்லியமாக வாசித்துக்காட்டுவார்.
அப்போது பிரபலமான, எனக்கு மிகவும் பிடித்த ‘அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு’ பாடலைத்தான் நான் அடிக்கடி வாசிக்கச் சொல்வேன். சிறுவனான என்னை உதாசீனப்படுத்தாமல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் அந்தப் பாட்டை வாசிப்பார் அண்ணன். முழுப் பாட்டையும் அவர் வாசிக்கும்போது ஏதோ அவரே மெட்டமைத்தது போன்ற பெருமிதம் பொங்கி வழியும். மெலிதான புன்னகையுடன், எதிரே உட்கார்ந்திருக்கும் ரசிகர்களின் முகபாவனைகளை ரசித்தபடி, வாசிக்கும் அவரது உருவம் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது.
காதலின் பாடல்
ஜெயராமன் அண்ணாவின் இசையில் காதல் கசிந்துருகிய ரகசியத்தைப் பின்னர்தான் தெரிந்துகொண்டேன். தன் உறவினர் பெண்ணை ஒருதலையாகக் காதலித்தார். ஆனால், அந்தப் பெண், வேறொருவரைக் காதலித்து மணம்செய்துகொண்டார். அந்தப் பெண்ணின் நினைவில் திருமணம் செய்துகொள்ளாமலேயே வாழ்ந்தார் அவர். நாங்கள் யாரும் கேட்காமலேயே ஜெயராமன் அண்ணா அடிக்கடி வாசிக்கும் ஒரு பாடலுக்கான அர்த்தம் அப்போது தான் எனக்குப் புரிந்தது.
‘கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ?
காலம் இனிமேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ?’
இரவு நேரங்களில்கூட இந்தப் பாடலை அண்ணன் வாசித்துக்கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது. இரண்டாவது ஆட்டம் முடிந்து வீட்டுக்குத் திரும்பும் ஜெயராமன் அண்ணா, இந்தப் பாடலைத் தினமும் காதல் வேதனையோடு வாசித்துவிட்டுத்தான் தூங்கப் போயிருக்கிறார்.
கடும் ஆஸ்துமாவால் தாக்கப்பட்ட அவர், தனது ஐம்பத்தைந்து வயதில் இறந்துபோன தகவலை, என் அம்மா ஒரு நாள் சொன்னார். தனது உடலுடன் ஆர்மோனியத்தையும் சேர்த்துப் புதைத்துவிடுமாறு அண்ணன் கேட்டுக் கொண்டாராம். அவரது கடைசி ஆசை உறவினர்களால் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இன்றைக்கும் சத்தியமங்கலம் சுடுகாட்டில் ஒரு காதலும், கூடவே இசையும் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
- கல்யாண்குமார்,
உதவி இயக்குநர், இதழியலாளர்
தொடர்புக்கு: kalyanchennai2010@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT