Published : 27 Dec 2014 12:48 PM
Last Updated : 27 Dec 2014 12:48 PM

ஜெயகாந்தனோடு பல்லாண்டு 14

ஒருமுறை மயிலம் சென்று, அந்தக் குன்றுதோறுமாடும் குமரனைப் பார்த்துவிட்டுத் திரும்பிக் கொண் டிருந்தோம். ஜே.கே கார் ஓட்டி வந்தார். கூட நான் மட்டும் இருந்தேன். மத்தியான நேரம். பிரதான பாதை அல்லாத ஒரு துணை பாதை அது. வெயிலின் தகிப்பிலிருந்து தப்பிப்பதற் காக, நான் கவிதையின் குளிர்ச்சியான நிழலில் அடைக்கலம் புகுந்தேன்.

மனமும் உதடும் முணுமுணுத்தன…

‘வெட்டிக் கிழங்கெடுத்து

வேய்க்காமல் தின்னுகிற

வேடர்க் குல மகளடா தம்பி

வேடர் குல மகளாட வள்ளி

வேடர் குல மகளடா!’

- இது, வள்ளியை மோகித்த வேலனுக்கு, அவனது அண்ணனான விநாயகர் மொழிந்தது எனக் கொள்க.

நான் புனைந்த இவ்வரியைக் கேட்ட ஜெயகாந்தன், தம்பி முருகனின் பதிலைத் தாள லயத்தோடு சொன்னார்.

‘கட்டிச் சுவைக் கரும்பு

காட்டில் இருப்பதனால்

கசந்திடுமோடா அண்ணா கரும்பு

கசந்திடுமோடா?’

- என்று பாடினார்.

ஆனைமுகத்தானுக்கு மிகவும் உவப்பான கரும்பை உவமையாகக் காட்டியதால், அண்ணனைத் தன் கட்சிக்கு இழுத்துவிட்டார் முருகன், அப்புறம் நிகழ்ந்ததெல்லாம் புராணப் பிரசித்தம்,

கவிதை பற்றி ஜெயகாந்தனுக்கும் எனக்கும் இடையே நடந்த சம்பாஷணை ஒன்றை நான் முக்கியமாகக் குறிப்பிட விரும்புகிறேன்.

தென்மாவட்டங்களில் ஒரு நாலைந்து நாட்கள் பயணம் செய்துவிட்டு நாங்கள் திருப்பத்தூர் திரும்பி வந்தோம். எல்லா நன்பர்களும் இறங்கிக் கொண்டார்கள், ஜே.கே தன்னந்தனியாக இனி காரோட் டிக் கொண்டு சென்னை செல்ல வேண் டுமே? அவருடன் செல்ல என்னையே நண்பர்கள் அதற்குத் தேர்வு செய்தனர்.

ஜே.கே காரோட்ட, அவருக்குப் பக்கத்தில் நான்.

‘‘ஏதாவது கவிதை சொல்லேம்பா!’’ என்றார் அவர்.

எந்தக் கவிதையைச் சொல்வது என்று நான் யோசித்தேன். என் சொந்தக் கவிதை ஒன்று கவனம் வந்தது. பதினேழு வயதில் நான் எழுதியது. ஒரு பெண்ணின் மீது தேய்வீகக் காதல் (platonic Love) கொண்டு, அதை அவளுக்குத் தெரிவிக்காமலேயே நான் கவிதைகள் மட்டும் புனைந்து கொண்டிருந்த காலத்தில் எழுதியது அது. திடீரென்று, அவளுக்குக் கல்யாணமான சேதியைக் கேட்ட கலக்கத்தில் பிறந்ததும் ஆகும்.

மொத்தம் ஏழெட்டு எண்சீர் விருத்தங்கள் இருக்கும். பாரதியாரின் சுயசரிதைப் பகுதியில் வரும் விருத்தங் களின் நடை எப்படியோ வேரூன்றி விட்டது போலும். அவற்றின் சாயல் எனக்கு அப்படியே வந்திருந்தது.

அந்தக் கவிதைகளை ஒன்றன்பின் ஒன்றாகச் சொல்ல ஆரம்பித்தேன். போகப் போக, ஜே.கே தலையாட்டிக் கொண்டு வந்தது, அவர் அவற்றை ரசிக்கிறார் என்பதைப் புலப்படுத்தியது. அவ்வப்போது சில வரிகளை, ‘‘மறுபடியும் சொல்…’’ என்று கேட்டுக் கொண்டார். ‘‘நல்லாருக்கு…’’ என்று வெளிப்படையாகவும் பாராட்டினார்.,

எல்லாக் கவிதைகளையும் நான் சொல்லி முடித்தவுடனேயெ, ‘‘இது பாரதியார் கவிதைதானே?’’ என்றார். ‘இல்லை ஜே.கே, இது நான் எழுதியது!’’ என்றேன் நான்.

‘அப்படியா? அப்போ, நல்லா யில்லே..’’ என்று சடாரென்று சொன் னவர், ஸ்டீயரிங்கை விட்டுவிட்டு இரு கைகளையும் தட்டி, பலமாகச் சிரித்து நிறுத்தி, ‘‘இது உனக்குப் புரிகிறதா? இந்தக் கவிதைகள் பாரதியாரின் கவிதைகள் என்று நினைத்தால் நன்றாயிருக்கின்றன. உன் கவிதை என்று சொன்னவுடனேயே அவற்றின் அழகு போய்விட்டது… பார். இது உனக்குப் புரிகிறதா?’’ என்று கேட்டார்.

எனக்கு நன்றாகப் புரிந்தது.

பெயர் சொன்னால் தமிழில் மதிக்கப் படுகிற கவிஞர் ஒருவர் இருந்தார். நன்றாக எழுதுவார். ஆனால், கம்பனின் சாயல் அவர் மீது ஏகமாய்க் கவிந்து நின்று, அவர் சுயத்தைப் பெரிதும் மறைத்தன என்றே கூறலாம். அவரது கவிதைகளில் கம்பனின் முகமே அதிகமாகத் தெரியும்.

கவிதை சம்பந்தமாக இவ்வாறு பல நேரங்களில் பல விஷயங்களை அவர் சொல்லக் கேட்டிருக்கிறோம். அதனால், கவிதை பற்றிய சில கருத்துகள் எனக்கு உண்டாயின. எல்லாத் துறைகளும் பேரிரைச்சலும் பெருமுயற்சியும் மேற்கொண்டு செய்வ னவற்றை, கவிதை தனது அமைதியும் மென்மையும் மிக்க மொழிகளில் மிக எளிதாகச் செய்துவிடுகிறது.

மனிதனைக் கீழ்மட்டத்திலிருந்து மேல் மட்டத்துக்கு நகர்த்தி, அவனை மேன்மைப்படுத்துவதில், கவிதை போன்று வேறு எதுவும் மேலான வெற்றிகளைப் பெற்றுவிட முடியாது. பெற்றதும் கிடையாது.

கவிதை நம்மை மேன்மைப்படுத்து கிறது. பாழும் உலகச் சகதியினிடையே அது ஒரு பதுமம் போல் நம்மைப் பூக்க வைக்கிறது. நிலையாமை என்கிற மிரட்டலை அது நீர்த்துப் போகச் செய்கிறது. நித்தியத்துவம் நிரூபணமானது போல் கவிதையின் ஒரு சொல் பிறந்த கணம் நிற்கிறது.

கவிதையானது, அந்த நேரம் கவிஞன் அனுபவித்த அனுபவத்தைத் தாங்க முடியாத மூளையின் ஸ்கலிதம். அந்த நேரம் அவன் பட்ட கோபத்தின் வெடிப்பு.

எதற்கெடுத்தாலும் பாரதியின் வரிகளை நினைவுகூரும் ஜெயகாந்தன் அவ்வப்போது கம்பனின் வரிகளுக்கும் தாவி விடுவார். ஒரு முறை, கம்பனின் வரிகளில் ஒன்று கவனம் வராமல் ‘‘குப்பா, அது என்ன சொல்லு?’’ என்றார். தொட்ட இடங்களில் எல்லாம் கம்பனின் வரிகள் ஞாபகத்தில் தோன்றுகிற எனக்கு, அன்று ஏனோ அந்த வரி கவனத்தில் வரவில்லை.

‘’எனக்கு கவனத்தில் வரலை ஜே.கே.’’ என்றேன்.

விளையாட்டாக ஜே.கே. ‘‘என்னப்பா நீ. பாரதியார் நமது நிகழ்கால குருதான். கம்பன்தான் ஆதிகுரு’’ என்றார். அப்படி, கம்பன் பேரில் அவருக்கு அளவற்ற மரியாதை இருந்தது. ஒரு சாம்ராஜ்ஜியத்தின் அதிபனைச் சாடியவனல்லவா அவன்?

ஒருமுறை நாங்கள் எங்கள் பயணத்தில். தென்னாற்காடு ஜில்லாவில் திருவெண்ணெய்நல்லூரின் வழியே சென்றோம். சடையனும் கம்பனும் கவனம் வராமலா இருப்பார்கள்? ஊரைவிட்டுக் கொஞ்சம் ஒதுங்கியதும், சாலையோரம், உயரமான, வள மான மீசை வைத்த, இடுப்பில் அரையாடையும் கையில் ஒரு நீண்ட கோலும் கொண்ட, நடுத்தர வயதைக் கடந்த ஆஜானுபாகுவான ஓரு ஆணுருவம் ஆகாயத்தை ஏறிட்டுப் பார்த்தவாறே கம்பீரமாக நின்றிருந் தது. நாங்கள் போகிற வேகத்தில் அடுத்த கணமே அதைக் கடந்து விட்டோம்.

‘’அதுதாம்பா… அதுதாம்பா… கம்பன்! இப்படித்தான் கம்பன் இருந்திருப்பான்!’’ என்றார் ஜே.கே. நாங்கள் மறுபடியும் திரும்பிப் பார்ப்பதற்குள் அந்த உருவத் தோற்றம் எங்களின் பின்னால் நகர்ந்து மறைந்துவிட்டது. தரிசனம் என்பது மின்னற்பொழுதுதானே?

இன்னொரு சமயம், சேலம் போகிறபோது, மஞ்சவாடிக் கணவாயில், அந்திமயக்கத்தில், பாதையின் நடுவே ஒரு பாம்பு படமெடுத்து நிற்பதைக் கண்டு பரவசம் கொண்டு, அருகே சென்று பார்த்தபோது அது ஒரு தென்னைமட்டை என்பதறிந்து பலமாகச் சிரித்துவிட்டோம்.

ஜெயகாந்தன் அப்போது,

‘அலங்கலில் தோன்றும் பொய்மை அரவெனப்பூதமைந்தும்…’

என்கிற கம்பனின் வரியை எடுத்துக் கூறி னார். கம்பனின் மொழிக்கு இரு களவிளக்கம் போல் இருந்தது அது! புதுமைப்பித்தனுக்கு, ‘கயிற்றரவு’ என்கிற பதம் கம்பனிலிருந்து கிடைத்திருக்கலாம் என்று நான் நினைத்துக்கொண்டேன்.

ஜெயகாந்தனின் கருத்திலும் ரசனையிலும் நடைமுறை வாழ்விலும் கவிதை இரண்டறக் கலந்தே இருந்தது. அவர் சாதித்தது எல்லாம் உரைநடையிலேயானாலும் அந்த உரைநடைக்கு உரமாகவும், மூல ஊற்றாகவும் கவிதை மறைந்து நின்று தொழில்பட்டது எனலாம்.

- வாழ்வோம்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: pisakuppusamy1943@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x