Published : 01 Dec 2014 10:18 AM
Last Updated : 01 Dec 2014 10:18 AM
ஹிந்தி திரையுலகின் புகழ்பெற்ற பின்னணி பாடகரான உதித் நாராயணன் ஜா-வின் பிறந்த நாள் (டிசம்பர் 1) இன்று. அவரைப் பற்றி அரிய முத்துகள் பத்து...
நேபாளத்தில் சப்தாரி மாவட்டத் தில் பிறந்தவர். ராஜ்பிராஜ் பி.பி. பள்ளியில் 10-ஆம் வகுப்பும், ஆர். ஆர். காம்பஸ் காட்மண்டுவில் இன்டர்மீடியட்டும் படித்தார். இவரது ஆரம்ப நாட்கள் போராட்ட காலமாக இருந்தன.
நேபாள வானொலியில் பாடிய மைதிலி, நேபாளி மொழிகளில் நாட்டுப்புற பாடல்கள், நவீன யுகப் பாடல்களுடன் இவரது இசைப்பயணம் தொடங்கியது. அங்கு 8 ஆண்டுகள் பணிபுரிந்தார். அவருக்கு பிரபல பம்பாய் பாரதிய வித்யா பவனில் பாரம்பரிய இசை கற்பதற்கு இந்திய தூதரகம் உதவித் தொகை வழங்கியது.
அந்த வாய்ப்பைப் பற்றிக்கொண்டு 1978-ல் பம்பாய் வந்தார். அங்கே 6 ஆண்டுகள் பயிற்சி பெற்றார். முதன் முதலாகப் பின்னணி பாடியது, சிந்தூர் என்ற நேபாளத் திரைப்படத்தில். இந்தியாவில் முதல் முதலாக தனது படத்தில் முகம்மது ரஃபியுடன் சேர்ந்து பாடும் வாய்ப்பை ராஜேஷ் ரோஷன் 1980-ல் வழங்கினார். இந்தியத் திரையுலகில் இந்தப் பாடல் இவரை அறிமுகப்படுத்தியது.
ஆனால், இவரது வெற்றி வரலாறு 1988-ல் பாலிவுட்டின் சூப்பர் டூப்பர் வெற்றிப்படம் ‘கயாமத் ஸே கயாமதக்’கில் பின்னணி பாடியதுடன் தொடங்கியது. இதில் நடித்த நடிகர்களுக்கு மட்டுமல்லாமல், ஒரு பின்னணி பாடகராக இவருக்கும் அது நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுத் தந்தது. ஃபிலிம்பேர் விருதையும் வென்றார்.
அதைத் தொடர்ந்து இந்தியத் திரைப்படத் துறையில் முன்னணி பின்னணிப் பாடகர்களில் ஒருவராகிவிட்டார். தன் தாய்மொழி நேபாளத் திரைப்படங்களிலும் பாடி வந்தார். அங்கே சில திரைப்படங்களில் நடித்தும் இருக் கிறார். இவரது குரல் உலகம் முழுவதும் உள்ள மக்களின் இதயங்களை கொள்ளை கொண்டுள்ளது.
இந்தியாவிலும் அமெரிக்கா, கனடா, உள்ளிட்ட பல வெளிநாடுகளிலும் ஏராளமான மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். 3 முறை தேசிய விருதுகள், 5 முறை ஃபிலிம்ஃபேர் விருதுகள் உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.
அவற்றில் பத்மஸ்ரீ விருது, ஸ்கிரீன் வீடியோகான் விருது. எம்.டி.வி. விருது, பிரைட் ஆஃப் இந்தியா கோல்ட் விருது, ஆகியவையும் குறிப்பிடத்தக்கவை. இவர் ஏறக்குறைய இந்தியாவின் அனைத்து பிரபல இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள், பாடகர்களுடனும் பணியாற்றியுள்ளார்.
மைதிலி, நேபாளி, ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட மொழிகளில் 15,000-க்கும் அதிக மான பாடல்களைப் பாடியுள்ளார். பஜன் சங்கம், பஜன் வாடிகா, ஐ லவ் யூ, தீவானா, யே தோஸ்தி உள்ளிட்ட பல தனிப்பட்ட ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார்.
ஹிந்தித் திரையுலகின் 100-ஆவது ஆண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் இவர் பாடிய “தால் ஸே தால் மிலா” பாடல் “இந்த நூற்றாண்டின் சிறந்த பாடல்” என்ற பிரிவில் மிக அதிகமான வாக்குகள் பெற்றுத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
கால் நூற்றாண்டைக் கடந்து வெற்றிகரமான பின்னணிப் பாடகராக உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் கொண்டாடும் பாடகராகத் திகழ்ந்து வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT